Showing posts with label Tamil Books. Show all posts
Showing posts with label Tamil Books. Show all posts

Saturday, 14 December 2024

கவிஞர் யுகபாரதியின் "பின்பாட்டு"

கவிஞர் யுகபாரதியின் "பின்பாட்டு" தமிழ் திரையிசை பாடல்கள் பற்றிய ஒரு கட்டுரை தொகுப்பு. திரையிசை பாடல்கள் காலப்போக்கில் அடைந்த மாறுதல்களையும், அந்த மாறுதல்களுக்கான காரணிகளையும் வரலாற்று தரவுகளுடன் எடுத்துக்காட்டுகிறார் கவிஞர். ஒரு பாடல் உருவாவதற்கு பின்னால் இருக்கும் உழைப்பையும், சிக்கல்களையும், வியாபார நோக்கில் நடக்கும் சமரசங்களையும், அதை தன்னிலையிலிருந்து எதிர்கொள்ளும் விதத்தையும் கவிஞர் தான் எழுதிய பாடல்களைச் சுட்டிக்காட்டி விவரிக்கிறார். 


பாடலாசிரியர்கள் பற்றியும், இசையமைப்பாளர்கள் பற்றியும், அவர்கள் உருவாக்கிய பாடல்கள் குறித்தும் பல சுவையான செய்திகள் இந்நூலில் கொட்டிக்கிடக்கின்றன. அந்தந்த காலக்கட்டத்தில் நிலவிய சமூக கட்டமைப்பு பாடல் வரிகளின் வழி தென்படும் எடுத்துக்காட்டுகள், தனிநபர் விருப்பு-வெறுப்புகள் வெளிப்படும் பாடல் வரிகள், சமகால அரசியல் சூழலின் நீட்சியாக அமைந்த பாடல்கள் என பல விவரங்களை இந்நூல் நமக்கு தருகிறது. ஆங்காங்கே விவரணைகள் சற்று நீளமாக இருப்பதும், ஒரே செய்தி மீண்டும் மீண்டும் விளக்கப்படுவதும் சிறிது சலிப்பை உண்டாக்குகிறது. 

திராவிட அரசியல் ஆளுமைகள் கலை இலக்கியங்களையும், திரையிசை பாடல்களையும், திரைப்படங்களையும் தங்கள் கொள்கை பரப்பும் கருவிகளாக பயன்படுத்தி வெற்றியும் கண்ட யுக்திகளை இந்நூல் விளக்குகிறது. நூல் நெடுக பாடகர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் பற்றிய யுகபாரதியின் பாராட்டுகளிளும் சரி விமர்சனங்களிளும் சரி நேர்மை மட்டுமே தென்படுகிறது. "ஆகாசத்த நான் பாக்குறேன்" பாடல் முதலில் "ஆகாசத்த நான் பாக்கல" என தான் எழுதியிருந்ததாகவும், இயக்குனர் ராஜூ முருகன் தான் வரிகளை சற்று மாற்றினார் என்று யுகபாரதி குறிப்பிடுகிறார். அதை குறிப்பிட்டுவிட்டு "உண்மையில், பாக்கல என்றால் கழிவிரக்கமே வருகிறது. பார்க்கிறேன் என்னும்போதுதான் காதல் வெளிப்படுகிறது." என ஏற்புடன் கூறுவதே கவிஞரின் நேர்மை.


இந்நூலில் என்னை கவர்ந்த வரிகள் ---

"மேல் நோக்கி வளர்வதுதான் வளர்ச்சியென்று நம்பிக்கொண்டிருக்கிறோம். உண்மையில், கலையும் இலக்கியமும் கீழ்நோக்கிப் பரவ வேண்டும். அதாவது, கீழே இருக்கும் மக்களை நோக்கி. கீழே இருக்கும் வேர்களால்தான் மரங்கள் வளர்கின்றன என்கிற அடிப்படையைப் புரிந்துகொண்டால் வளர்ச்சி குறித்த நம்முடைய சிந்தனைகளில் மாறுதல் ஏற்படலாம்." 

Wednesday, 6 November 2024

"சுபா"வின் "இரவோடு இரவாக"

எழுத்தாளர்கள் சுரேஷ்-பாலகிருஷ்ணன் இருவரும் "சுபா" எனும் புனைப்பெயரில் நாவல்களும், திரைப்பட திரைக்கதை மற்றும் வசனங்களும் எழுதியுள்ளனர். அயன், கோ, தனி ஒருவன் போன்ற ஹிட் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளனர். 


இவர்களது "இரவோடு இரவாக" ஒரு serial murder mystery ஆக ஆரம்பிக்கிறது. கிழக்கு கடற்கரை சாலையில் இளம்பெண்கள் அடுத்தடுத்து கொடூரமான முறையில் கொல்லப்படுகின்றனர். இவர்கள் சமீபத்தில் தான் காதலிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். கொல்லப்பட்ட பெண்கள் அனைவரின் தந்தையும் அரசு அதிகாரியாகவோ, மந்திரியாகவோ இருக்கின்றனர். இந்த தொடர் கொலைகளில் ஒரு pattern and signature இருப்பதால் போலீஸ் ஒரு serial killer-ஐ தேடுகின்றனர்.
 

சுபாவின் detective duo நரேந்திரன் - வைஜயந்தி இந்த investigation-ல் involve ஆகும் சூழல் ஏற்படுகிறது. இவர்கள் தேடுவது ஒரு psycho கொலைகாரனா? அடுத்த கொலை நிகழும் முன் அவனது mask அவிழுமா? இப்படி ஒரு template serial murder mystery ஆக இந்நாவல் நகர்ந்தும், அதன் treatment-ல் பரபரப்புக்கு பஞ்சமில்லை. ஆங்காங்கே சில twists திணிக்கப்பட்டிருந்தாலும், வேகம் குறையாமல் கதை நகர்கிறது. 

Pre-climaxல் கதையின் ஓட்டத்தை வைத்து வலுவான backstory இல்லாத சாதாரண mystery நாவலென brand செய்வதற்குள் climaxல் வரும் எதிர்பாராத convincing twist நாவலை காப்பாற்றுகிறது. Cheesy scenes-ஐ தவிர்த்து ஒரு good mystery novel. 

Monday, 28 October 2024

ராஜேஷ்குமாரின் "மின்னலாய் வா விவேக்"

ராஜேஷ்குமாரின் விவேக்-விஷ்ணு துப்பறியும் நாவல்கள் வரிசையில் மற்றுமொரு investigative thriller "மின்னலாய் வா விவேக்". உளவுத்துறை டைரக்டரைத் தேடி உளவுத்துறை அலுவலகத்தினுள் நுழையும் ஒரு பெண் நிருபர், அவரை சந்திக்கும் முன் poison செய்யப்படுகிறாள். அவள் இறக்கும் தருவாயில் சில எழுத்துக்களை சொல்லிவிட்டு மடிகிறாள். அதே சமயத்தில் இன்னொரு கர்ப்பிணிப் பெண்ணை கொலை செய்ய பலமுறை முயற்சி செய்கிறார்கள். இருவருக்கும் என்ன சம்பந்தம், இந்த கொலை முயற்சிகளுக்கு காரணம் என்ன என்பதை விவேக் - விஷ்ணு துப்பறிய முயல்கின்றனர். இன்னொரு உயிர் பலியாவதற்குள் கொலையாளி அடையாளம் காணப்படுவானா?

Rajeshkumar
Murder mystery ஆக துவங்கும் இந்நாவல் ஒரு conspiracy thriller ஆக மாறுகிறது. இறந்து போன பெண் நிருபர் உச்சரித்த எழுத்துகளின் பின்னணியில் உள்ள மர்மத்தை, ஒரு wafer thin suspense-ஐ வைத்து கதை நகர்கிறது. இதை சுற்றி பல திருப்பங்கள் இருந்தும் கதை consistent high points இல்லாமல் flat ஆக பயணிக்கிறது. நாவலின் நடுவே வரும் tidbits போன்ற சம்பந்தமில்லா செய்திகள் கதையின் வேகத்தை மேலும் குறைக்கின்றன. மேலும் தீவிரவாதம், பாக்கிஸ்தான் அமைப்பின் சதி என stereotyping நாவல் நெடுக பரவியிருக்கிறது.

ராஜேஷ்குமாரின் "மின்னலாய் வா விவேக்" தலைப்புக்கு நியாயம் செய்யாத ஒரு mediocre attempt.

Saturday, 14 September 2024

ஜெயகாந்தனின் "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்"

ஜெயகாந்தனின் "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்" ஆண்-பெண் உறவையும், திருமணம் எனும் உறவுமுறை அமைப்பின் கட்டுப்பாடுகளையும், அதனால் ஏற்படும் விரிசல்களையும் பேசுகிறது. இந்த உறவுமுறையில் பெண் தன்னிச்சையாகவும் practical ஆகவும் இருந்து, அதே சமயம் ஆண் வழக்கமான எதிர்பார்ப்புகளுடன் இருந்தால் என்னவாகும்? இந்த ஒரு சூழலை மையமாகக் கொண்டு ஆண்-பெண் உறவில் உளவியல் ரீதியான சிக்கல்களையும், எதிர்பார்ப்புகள் தரும் ஏமாற்றத்தையும் நுட்பமாக வெளிப்படுத்துகிறது இந்நாவல்.




நாடக நடிகை கல்யாணியும், நாடக விமர்சனம் எழுதும் ரங்காவும் ஒரு அமளியின் நடுவே சந்திக்கின்றனர். பார்த்த மாத்திரத்தில் இருவருக்கும் ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது. பின்னர் இருவரும் சந்திக்க காரணம் தேடுகின்றனர். பின்னர் காதல் கொள்கிறார்கள். கல்யாணிக்குப் பாதுகாவலராகவும், அவள் நலனில் அக்கறை கொண்டவருமாக இருக்கும் அண்ணாசாமி கல்யாணி-ரங்கா இருவரும் கல்யாணம் செய்ய யோசனை கூறுகிறார். ரங்காவும் சம்மதிக்கிறான். 

Jeyakanthan


கல்யாணிக்கு ஒரு சொந்த வீடு இருந்தும், திருமணத்திற்கு பிறகு இருவரும் ரங்காவின் வருமானத்திற்கேற்ப ஒரு வீட்டில் வாடகைக்கு குடியேறுகிறார்கள். இந்த பொருளாதார வேறுபாட்டிலினால் எந்த சச்சரவும் வரவில்லை எனினும் இருவரின் இயல்பும் எதிரெதிராக இருப்பதை ரங்கா உணர்கிறான். அவன் எதிர்பார்ப்புகள் அதிகமாகின்றன. ஒரு கட்டத்தில் அவள் இவனுக்காக எதையும் தியாகம் செய்ய தயாராய் இருக்கவேண்டும் என எதிர்பார்க்கிறான். அவளுக்கு உயிரான நாடகத்தையும் துறக்க வேண்டும் என்று நினைக்கிறான். கல்யாணியோ அவனிடம் எந்த ஒரு எதிர்பார்ப்புமில்லாமல் அன்பு கொள்கிறாள் - மனைவி என்ற அங்கீகாரம் உட்பட. திருமணத்திற்கு பிறகு தன்னுடைய சம உரிமையை எளிதாக எடுத்துக்கொள்கிறாள். இந்த contrasting இயல்புகளே இவர்களின் பிரிவுக்கு காரணமாகின்றன. 

அந்த பிரிவு இருவர் மீதும் என்னன்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது மீதி கதை. கல்யாணி-ரங்கா இருவருக்கிடையே ஏற்படும் ஈர்ப்புக்கான justification சரிவர இல்லை. தங்கள் திருமண நிலையை பற்றி இருவரின் உரையாடல்கள் நீண்டு கொண்டே போவதும், ஆங்காங்கே repetition ஆவதும் தொய்வு. எனினும் இந்நாவல் மனித இயல்பின் எதார்த்தத்தை அப்பட்டமாக பிரதிபலிக்கிறது. 

Sunday, 4 August 2024

சுஜாதாவின் "மீண்டும் ஒரு குற்றம்"

சுஜாதாவின் "மீண்டும் ஒரு குற்றம்" வழக்கறிஞர்கள் கணேஷ்-வசந்த் duo தோன்றும் மற்றுமொரு murder mystery. பிரபல தொழிலதிபர் சிவப்பிரகாசம் என்பவர் கணேஷை தொலைப்பேசியில் அழைத்து தன்னைக் கொலை செய்ய சதி நடக்கிறது எனக் கூறி அவனது உதவியை நாடுகிறார், அரை மணி நேரத்துக்குள் தன்னை வந்து சந்திக்குமாறும் வற்புறுத்துகிறார். கணேஷ்-வசந்த் அங்கே சென்றடைவதற்குள் அவர் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார். தொழில் விரோதம், குடும்பச் சிக்கல், சொத்துரிமை தகராறு என பல குழப்பங்களுக்கு நடுவில் கணேஷ்-வசந்த் இருவரின் investigation துவங்குகிறது. 




ஒரு template murder mystery ஆக துவங்கும் இந்நாவல் ஒரு investigation drama-வாக மாறி பயணிக்கிறது. ஆனால் ஒரு மர்ம நாவலுக்கு தேவையான பரபரப்பு குறைவே. நாவல் நெடுக வரும் ஆபாச வசனங்கள் சாதிப்பது “objectifying women” மட்டுமே, கதையின் ஓட்டத்துக்கு எந்தவித தொடர்பும் இல்லை. ஆங்காங்கே அமையும் அரசியல் வசனங்களில் சுஜாதாவின் ideological stance வெளிப்படுகிறது. 

நாவலின் நீளம் குறைவானதாக இருப்பது சாதகமாக அமைகிறது. எனினும் இந்நாவல் புதிதாக ஏதும் வழங்காத ஒரு highly predictable, done and dusted murder mystery. 

Thursday, 25 July 2024

கவிஞர் யுகபாரதியின் "வாலிப வார்த்தைகள்"

கவிஞர் வாலியுடனான முதல் சந்திப்பில் துவங்கி, அவருடன் பயணித்த அனுபவங்களையும், அவருடனான உரையாடல்களையும் இந்நூலில் பதிவிடுகிறார் யுகபாரதி. கவிஞர் வாலியின் நம்பிக்கை, இயல்பு, சுயமரியாதை என பலவற்றையும் இந்நூல் பேசுகிறது. வாலி அவர்கள் பாடல் வரிகள் எழுதும் வேகத்தையும், எப்பொழுதும் trend-ல் இருக்கும் அவரது அசாத்திய கற்பனைகளையும் பல இடங்களில் விவரிக்கிறார் யுகபாரதி.



சமரசமில்லாமல் சினிமா உலகம் இயங்காது என்பதை புரிந்துகொண்ட கவிஞர் வாலி அதை செய்ய தயங்கியதில்லை, ஆனால் அதே சமயம் சுயமரியாதையை என்றும் விட்டுக்கொடுத்ததில்லை என்று பல தருணங்களை சுட்டிக்காட்டி பேசுகிறது இந்நூல். அரசியல் தலைவர்களிடம் கவிஞருக்கு இருந்த தோழமை, மாற்றுக் கருத்துக்கும் மாற்றுச் சிந்தனைக்கும் அவர் கொடுத்த மதிப்பு, சினிமா துறையில் இருக்கும் sentiment மற்றும் மூடநம்பிக்கைகளில் ஈடுபாடு இல்லாமல் இருந்தும் அவர் அவற்றை மற்றவர்களுக்காக சகித்து கொண்டது  போன்றவற்றை வாசிக்கும் போது அவரது democratic approach புரிகிறது. 


கவிஞரின் பாடல் வரிகளை பற்றிய வர்ணணை இந்த நூலில் குறைவாக இருப்பது ஏமாற்றமே. யுகபாரதியின் "இசை அல்லது இளையராஜா" நூலில் இருந்த இளையராஜாவின் இசையை பற்றிய வர்ணணை போல இங்கு இடம்பெறவில்லை. அது இந்நூலின் நோக்கமாக இல்லாமலும் இருக்கலாம், ஆனால் அந்த எதிர்பார்ப்பினால் தானோ இந்நூல் நிறைவான வாசிப்பாக இல்லை.

Wednesday, 10 July 2024

அறிஞர் அண்ணாவின் "நீதிதேவன் மயக்கம்"

அறிஞர் அண்ணாவின் நாடகங்களில் ஒன்றான "நீதிதேவன் மயக்கம்" இராமாயண காவியத்தில் "இராவணன் ஒரு இரக்கமற்ற அரக்கன்" என்ற கம்பரின் தீர்ப்பை சீராய்வு செய்ய கடவுள் நீதிதேவனுக்கு கட்டளையிடுவதாக ஆரம்பமாகிறது. இந்த கற்பனைக் களத்தில் பயணிக்கும் இந்த நாடகம் திராவிட இயக்கத்தின் கருத்தியலை மிக நுட்பமாக பேசுகிறது. 

நீதிதேவனின் அறமன்றத்தில் இராவணன் தன் தரப்பு வாதத்தை தானே எடுத்துரைக்கிறான். இராமாயணத்தின் கதை மாந்தர்கள் இரக்கமற்ற முறையில் நடந்துகொள்ளும் தருணங்களை விவரிக்கிறான். கம்பரின் தீர்ப்பில் இருக்கும் பாரபட்சத்தையும், இராமாயணம் உயர்த்திப்பிடிக்கும் பாகுபாட்டையும் உள்ளது உள்ளபடி சுட்டிக்காட்டுகிறான். பெரிய புராணத்தில் வரும் சிறுதொண்டர் கதையிலும், கோட்புலி நாயனார் கதையிலும் நடக்கும் கொடூரச் சம்பவங்களை விவரித்து கடவுள் மற்றும் ரிஷிகளின் இரக்கமற்ற செயல்களை எடுத்துக்காட்டி வாதிடுகிறான். மறுமுனையில் கம்பரிடம் இருந்து வரும் எதிர் வாதங்களுக்கும் தக்க பதிலளிக்கிறான். 

பூலோகத்திலும், மேலோகத்திலும் நடக்கும் இரக்கமற்ற செயல்களில் இரண்டு உலகங்களின் மனிதர்கள், ரிஷிகள், காப்பியக் கதைமாந்தர்கள், கடவுள்கள் ஆகியோரின் பங்கை எடுத்துக்காட்டும் இராவணின் வாதத்தைக் கேட்டு நீதிதேவன் மயங்கி விழுவதாக நாடகம் முடிவடைகிறது. இந்நாடகத்தில் வரும் வசனங்களும், காட்சிகளும் புராணக் கதைகளை நம் கண்முன் நிறுத்துகின்றன. ஆங்காங்கே வரும் சில வசனங்கள் திரும்பத் திரும்ப இடம்பெறுவதால் காடசியின் ஓட்டத்தில் தொய்வு ஏற்படுகிறது. 


அறிஞர் அண்ணாவின் அரசியலை பேசும் நாடகம் இது. இந்திய அரசியலில் இராமாயணம் மற்றும் ஆரியத்தின் தாக்கம் இன்றளவும் இருக்கும் பட்சத்தில், இராவணன் தனது பக்க நியாயத்தை வாதிடுவதாக காட்சி அமைத்தது அண்ணாவின் இயக்கம் ஆரியத்திற்கு நேரெதிராக முன்வைக்கும் கருத்தியலின் அடையாள அரசியல். இராவணனை நாயகனாக அடையாளப்படுத்தும் யுக்தி “anarchism” பேசும் பல அறிஞர்கள் கையாண்ட யுக்தி. அதன் வழி புராணங்களும், காப்பியங்களும் கட்டமைக்கும் தூய்மை எனும் பிம்பத்தை பல இடங்களில் உடைத்தெரிகிறது இந்நாடகம்.

Monday, 22 January 2024

நா. முத்துக்குமார் கவிதைகள்

நா. முத்துக்குமாரின் ஆறு கவிதை தொகுப்புகளை உள்ளடக்கியது இந்நூல். கவிதைகளில் இடம்பெரும் துள்ளிய வர்ணனையும், அசரவைக்கும் கற்பனையும் தமிழ் திரையுலகில் முத்துக்குமாரின் நிரப்பப்படா இடத்தை நினைவூட்டுகிறது. அவரது எழுத்துக்கள் இயல்பானவை, தனது புலமையைக் காட்டி வாசகனை என்றுமே திக்குமுக்காட செய்ததில்லை. 

தினம்தினம் நாம் சந்திக்கும் மனிதர்களையும், நம்மை சுற்றி நடக்கும் சாதாரண நிகழ்வுகளையும், நமது உணர்வுகளையும் நமக்கு நெருக்கமான மொழியில் இக்கவிதைகளில் தருகிறார். 



கவிஞர் தனது பால்யத்தை விவரிக்கும் கவிதைகளில் அம்மா, அப்பா மற்ற உறவுகளுடன் பள்ளி அனுபவங்கள், நண்பர்களின் நினைவுகள் என அடுக்கும் போது, அவை நம்முடைய பால்யத்தை நினைவூட்டும் ஒரு nostalgic experience ஆக அமைகிறது.



அவர் கடவுளை விடவும் இயற்கையை அதிகமாக விரும்பியதை பல இடங்களில் காண முடிகிறது. பகுத்தறிவு கருத்துக்களுடன் பெண் விடுதலை, பாலின சமத்துவம் பேசும் கவிதைகள் இந்த தொகுப்பு முழுக்க நிரம்பி இருக்கின்றன. சமகால சமூக சூழலை பிரதிபலிக்கும் கவிதைகள் கவிஞரின் தெளிவான அரசியல் நிலைப்பாட்டையும் பதிவு செய்கின்றன. 

"தூர்" எனும் கவிஞரின் பிரசித்தி பெற்ற கவிதையைத் தவிர்த்து என்னை கவர்ந்த சில கவிதைகள்...

அம்மாவின் கரிச் சுவர்

ஒவ்வொறு பொங்கலுக்கும்
வெள்ளையடித்தாலும்
மீண்டும் தன் முகத்தில்
கரி பூசிக்கொள்கிறது
சமையலறைச் சுவர்.

...

அம்மாவுக்காய் அழுகிற
ஈர விறகுகளின்
புகைச் சோகம் தாங்கி
மேலும் கறுக்கும் அது.

...
அக்காவுக்கு இவற்றிலிருந்து 
சீக்கிரம் விடுதலை.

கல்யாணம் ஆனதும்
கேஸ் குக்கர்
சுவரில் டிஸ்டெம்பர்

சுவர் விடுதலை மட்டும் 
பெண் விடுதலை என்றால்
அம்மாக்களை விட
அக்காக்கள் அதனை
அடைந்து விட்டார்கள்.


இட்லி புத்திரர்கள்

இட்லிகள் கொள்கையற்றவை
சாம்பாரில் மிதவையாகவும்
சட்னியில் துவையலாகவும்
ஏதுமற்ற பொழுதுகளில்
எண்ணெய் மிதக்கிற
மிளகாய்த்தூளில் துணுக்கெனவும்
எதனுடனும் அமையும்
இட்லிகளின் கூட்டணி

பெயர் உருவான கதை

ஆரம்பத்தில் அதன் பெயர்
வேறாக இருந்தது.

அதன் பலகீனம்
இருபுறம் சுவர் சூழ்ந்த
குறுபாதை எனலாம்.

...

ஆத்திரம் மட்டுமே
அடக்கக் கற்ற
மனிதர்கள் கூடி
அதற்கொரு பெயர்
அப்புறம் வைத்தனர் 
மூத்திரச் சந்து.

சலூன் கண்ணாடிகள்

பிமபங்களற்ற தனிமையில்
ஒன்றிலொன்று முகம் பார்த்தன
சலூன் கண்ணாடிகள்.

நியூட்டனின் மூன்றாம் விதி

மேல் வீட்டுக்காரன்
என்கிற உரிமையில்
நீ கைப்பற்றும் சுதந்திரம் 
அதிகப்படியானது.

உன் ஒவ்வொரு அசைவும்
பூதாகரமாய் ஒலிக்கிறது
கீழ்த்தளச் சுவர்களில்.

...

உன்னைப் பழிவாங்கும் விதமாக
என்னால் முடிந்தது ஒன்றுதான்.

எனதருமை மேல்தளத்து நண்பா...
தலையணையையும் மீறி 
உன்காதுகளில்
சுழன்றுகொண்டிருக்கும்
என் மின்விசிறி!

கட்டணக் கழிப்பிட உரிமையாளன்

ஆச்சா... ஆச்சா... குரல் கொடுத்தபடி
மதிய உணவு உண்கிறான்
கட்டணக் கழிப்பிட உரிமையாளன்.

லிஃப்ட் பயம்

வழக்கம்போல இம்முறையும்
லிப்ட்டில் பயணிக்கையில்
அலாரத்தையே பார்க்கிறேன்.

கோயிலில் ஒதுங்கியவர்கள்

பலத்த மழை
வாசலைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்
கோயிலில் ஒதுங்கியவர்கள்.

பல்லக்கு தூக்கிகள்

சாமியின் முகத்தில்
சந்தனக் காப்பு
பல்லக்கு தூக்கிகளின் சாராயநெடி

நிழல்

ஜன்னல் கம்பியை வளைத்தது
திருடனல்ல
நிழல்.

தலையணை வாத்துகள்

வாத்துகள்
ரெக்கைகள் இருந்தும்
அதிக உயரம் பறப்பதில்லை.
பிறந்த வீடு, புகுந்த வீடு என
பெண்களைப்போலவே
தண்ணீருக்கும் தரைக்கும்
அலைபாய்வதே
வாத்துகளின் வாழ்க்கை!

குழந்தைகளுடன் பேசும் கலை

எல்லோரும் ஒரு காலத்தில் 
குழந்தையாக இருநதாலும்
வளர்ந்த பின்
தொலைந்துவிடுகிறது
குழந்தைகளின் உலகத்தைத்
திறக்கும் சாவி.



Tuesday, 21 November 2023

யுகபாரதியின் "முனியாண்டி விலாஸ்"

"முனியாண்டி விலாஸ்" என கவிதை தொகுப்பிற்கு பெயரிட்டதே இப்புத்தகத்தைப் படிக்கும் ஆர்வத்தை தூண்டியது. இன்று முனியாண்டி விலாஸ் நலிந்து பல கிளைகளை மூடி வந்தாலும், எஞ்சி இருக்கும் கிளைகள் மேற்கத்திய உணவை இங்கே பரப்பி வரும் கேஎஃப்சி-களையும், மெக்டோனால்ட்ஸ்-களையும் எதிர்த்து நிற்கும் தனித்துவம் கொண்டவை. அதே தனித்துவம் இக்கவிதை தொகுப்பில் தென்படுகிறதா?



இத்தொகுப்பில் இடம்பெறும் கவிதைகள் உணவு, உடை, உறவுகள், உணவகம், மழை, கல்வி நிலையங்கள், காதல், காமம், சமூக நிலை, சாதி, அரசியல் ஆகியவை பற்றிய கருத்துகளுடன் கவிஞரின் கருத்தியலையும் தாங்கி நிற்கின்றன. அரசியல் தலைவர்களை பற்றிய விமர்சனங்களுடன் தேர்தல் அரசியல் நகர்வுகளையும், வாக்காளர் மனநிலையையும் அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றன சில கவிதைகள். அரசியல் சார்ந்த கவிதைகளை தாண்டி உணவு,  காதல் பற்றிய கவிதைகளிலும் அவற்றை சுற்றிய அரசியல் இடம்பெற்று சமகால சமூக சூழலை பிரதிபலிக்கிறது. 

பொது இடங்களில் சாதிய பாகுபாட்டையும், வர்க்க வேறுபாட்டையும் தூக்கிப் பிடிக்கும் நிலையை உணவகங்கள் பற்றிய கவிதை பேசுகிறது. அசைவ உணவின் மணம் பல கவிதைகளில் வீசுகிறது. அடுக்கக வாழ்க்கை பற்றிய கவிதை அடுக்கு மாடி வீடுகளில் வாழும், நிற்க கூட நேரமில்லாமல் ஓடும் மனிதர்களின் அவல நிலையை பேசுகிறது. 

பல கவிதைகள் முற்போக்கு சிந்தனைகளை வெளிப்படுத்தினாலும், ஆங்காங்கே சில கவிதைகள் பொதுவான மனநிலையில் தென்படுகின்றன. 

நம்மைச் சுற்றி நிகழும், நாம் கவனித்த-கவனிக்க மறந்த தருணங்களை நமக்கு நெருக்கமான மொழியில் இப்புத்தகம் வழங்குகிறது.

என்னை கவர்ந்த சில வரிகள் -

அடுக்கக வாழ்க்கை

"மனித வாடையைத் தவிர்க்கலாம் 
தனித்திருக்கலாம் 
அழைப்பு மணிக்கு மட்டும் 
கதவைத் திறந்தால் போதும் 

சொந்தங்கள் வந்தாலும் 
இரண்டொரு நாளில் ஊருக்குக் 
கிளம்பிவிடுவார்கள் 

கோழிச் சண்டையோ 
குழாயடிச் சண்டையோ வராது 

பாதங்கள் தரையில் பாவாத 
கால் நகங்களில் அழுக்கேறாத 
சவத்திற்கு ஒப்பான 
ஒரு வாழ்வை மேற்கொள்ள 

அடுக்கக வாழ்க்கை 
அற்புத வாழ்க்கை"

முனியாண்டி விலாஸ்

"முனியாண்டி விலாஸ் 
ஓர் அசைவ உணவகம். ஆனாலும் 
அங்கே, சைவத்திற்கு இடமில்லாமல் 
போவதில்லை 

முனியாண்டி விலாஸ் 
எளிய மனிதர்களின் கூடாரம் 
பகட்டும் பம்மாத்தும் கொண்டவர்களை 
அங்கே பார்க்க முடியாது 

நெடிய காத்திருப்பிற்குப் பின்தான் 
வயிறு நிறையும் என்கிற தந்திரங்களை 
முனியாண்டி விலாஸ் செய்வதில்லை 

அங்கே, ஆங்கில மெனுக்கார்டு கிடையாது 
ஆர்டர் எடுத்துக்கொள்ளபவர்,நம்மிலும் 
வறிய வாழ்வை மேற்கொள்பவராயிருப்பார் 

மேசைத்துடைப்பவர் மேலாளர் என்னும் 
பாகுபாடுகள் அங்கே இல்லை 
எல்லாரும் எல்லா வேலைகளையும் 
இழுத்துப்போட்டு செய்வர் 

அங்கே, 
சீர்காழியும் சிதம்பரம் ஜெயராமனும் 
கார நெடிகளுக்கு ஏற்ப தங்கள் கமகங்கள் மெருகேற்றிக்கொள்வர் 

கொல்வது பாவிமாயிற்றே என்று 
அங்கே யாரும் குமைவதில்லை

...

முனியாண்டி விலாஸுக்குப் பழகிய நாக்கு 
கிர்ல்டு சிக்கனுக்கோ தந்தூரி சிக்கனுக்கோ அலையாது 

இறக்குமதி செய்யப்பட்ட 
சமையற்குறிப்புகளை அங்கே உள்ள மாஸ்டர்கள் பழகிக்கொள்ள விரும்புவதில்லை

...

முனியாண்டி விலாஸ் 
தன்னிடம் பசியாறிப்போகும் அனைவரையும் முனியாண்டியாகவே பார்க்கிறது 

கணினிக்கும்  டிஸ்யூ பேப்பருக்கும் 
மயங்காத முனியாண்டி விலாஸ் தன் 
அசலான முகத்தை எதற்காகவும் மாற்றிக்கொள்வதில்லை 

முனியாண்டிகளுக்காக 
முனியாண்டிகளால் நடந்தப்படும் 
முனியாண்டி விலாஸ் 
ஒரு சமூகத்தின் செயல்பாடு 
ஒரு சமூகத்தின் அடைபாளம் 
ஒரு சமூகத்தின் சங்கிலித்தொடர் 

முனியாண்டிகளாய்த் தங்களை 
உணராதவர்கள் அங்கே வருவதில்லை முனியாண்டிகளை உணராதவர்களும் 
அங்கே வருவதில்லை"


உணவகம்

"அசைவ உணவகத்தில் 
எக்ஸ்ட்ரா வாங்காதவன் 
தலித்தாக நடத்தப்படுவான் 

மெல்லிய போதையோடு 
வருகிறவர்களுக்கு 
ராஜமரியாதை 

ஒரே ஒரு ஆம்லெட் என்றதும் 
முகம் சுருங்கி 
யாருக்கோ வைப்பதுபோல 
வைத்துவிட்டுப் போகிறவனுக்குத் 
தெரியாது 

நான் வேறொரு உணவகத்தில் 
கோப்பை கழுவுபவனென்று."


வேதாள தேவதை

"அதிகாரம் கைக்குவந்த பிறகு 
ஒவ்வொரு 
தேவதையும் வேதாளமாகிவிடுவதாகப் பேசிக்கொள்கிறார்கள் 

அவர்களால் 
நம்பவே முடியாத இன்னொன்று : 
தம்மால் வென்ற வேதாளம் 
தம்மை வீழ்த்துவதற்கு தேவதையாக 
வேடமிட்ட விஷயம்தான்."

ஒரு சின்ன கற்பனை

"கடவுள் என்று சொல்லப்படுபவர் 
நம் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்தால் 
எப்படி இருக்கும்? 

இரவல் வாங்கலாம் 
தேவையெனில் கடன் கேட்கலாம் 
எங்கே காணோமே எனலாம் 
வீட்டில் விருந்தாளியா எனச் சிரிக்கலாம் 
இன்று விடுமுறையா 
உங்கள் லைனிலாவது கரண்ட் இருக்கிறதா 
பேப்பர் பார்த்தீர்களா என 
எதையாவது கேட்டுக்கொண்டே 
இருக்கலாம் 

பக்கத்தில் இருக்க வேண்டிய ஒருவர் 
உள்ளே இருந்து  ஒரு பிரயோசனமும் 
இல்லை." 

Mareesan - a slow burn suspense thriller backed by a brilliant Vadivelu and an effortless FaFa

Mareesan is a suspense thriller that has Vadivelu and Fahadh Faasil sharing screen space for the second time. Velayudham (Vadivelu), an Alzh...