Showing posts with label Lyricist Yugabharathi. Show all posts
Showing posts with label Lyricist Yugabharathi. Show all posts

Saturday, 14 December 2024

கவிஞர் யுகபாரதியின் "பின்பாட்டு"

கவிஞர் யுகபாரதியின் "பின்பாட்டு" தமிழ் திரையிசை பாடல்கள் பற்றிய ஒரு கட்டுரை தொகுப்பு. திரையிசை பாடல்கள் காலப்போக்கில் அடைந்த மாறுதல்களையும், அந்த மாறுதல்களுக்கான காரணிகளையும் வரலாற்று தரவுகளுடன் எடுத்துக்காட்டுகிறார் கவிஞர். ஒரு பாடல் உருவாவதற்கு பின்னால் இருக்கும் உழைப்பையும், சிக்கல்களையும், வியாபார நோக்கில் நடக்கும் சமரசங்களையும், அதை தன்னிலையிலிருந்து எதிர்கொள்ளும் விதத்தையும் கவிஞர் தான் எழுதிய பாடல்களைச் சுட்டிக்காட்டி விவரிக்கிறார். 


பாடலாசிரியர்கள் பற்றியும், இசையமைப்பாளர்கள் பற்றியும், அவர்கள் உருவாக்கிய பாடல்கள் குறித்தும் பல சுவையான செய்திகள் இந்நூலில் கொட்டிக்கிடக்கின்றன. அந்தந்த காலக்கட்டத்தில் நிலவிய சமூக கட்டமைப்பு பாடல் வரிகளின் வழி தென்படும் எடுத்துக்காட்டுகள், தனிநபர் விருப்பு-வெறுப்புகள் வெளிப்படும் பாடல் வரிகள், சமகால அரசியல் சூழலின் நீட்சியாக அமைந்த பாடல்கள் என பல விவரங்களை இந்நூல் நமக்கு தருகிறது. ஆங்காங்கே விவரணைகள் சற்று நீளமாக இருப்பதும், ஒரே செய்தி மீண்டும் மீண்டும் விளக்கப்படுவதும் சிறிது சலிப்பை உண்டாக்குகிறது. 

திராவிட அரசியல் ஆளுமைகள் கலை இலக்கியங்களையும், திரையிசை பாடல்களையும், திரைப்படங்களையும் தங்கள் கொள்கை பரப்பும் கருவிகளாக பயன்படுத்தி வெற்றியும் கண்ட யுக்திகளை இந்நூல் விளக்குகிறது. நூல் நெடுக பாடகர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் பற்றிய யுகபாரதியின் பாராட்டுகளிளும் சரி விமர்சனங்களிளும் சரி நேர்மை மட்டுமே தென்படுகிறது. "ஆகாசத்த நான் பாக்குறேன்" பாடல் முதலில் "ஆகாசத்த நான் பாக்கல" என தான் எழுதியிருந்ததாகவும், இயக்குனர் ராஜூ முருகன் தான் வரிகளை சற்று மாற்றினார் என்று யுகபாரதி குறிப்பிடுகிறார். அதை குறிப்பிட்டுவிட்டு "உண்மையில், பாக்கல என்றால் கழிவிரக்கமே வருகிறது. பார்க்கிறேன் என்னும்போதுதான் காதல் வெளிப்படுகிறது." என ஏற்புடன் கூறுவதே கவிஞரின் நேர்மை.


இந்நூலில் என்னை கவர்ந்த வரிகள் ---

"மேல் நோக்கி வளர்வதுதான் வளர்ச்சியென்று நம்பிக்கொண்டிருக்கிறோம். உண்மையில், கலையும் இலக்கியமும் கீழ்நோக்கிப் பரவ வேண்டும். அதாவது, கீழே இருக்கும் மக்களை நோக்கி. கீழே இருக்கும் வேர்களால்தான் மரங்கள் வளர்கின்றன என்கிற அடிப்படையைப் புரிந்துகொண்டால் வளர்ச்சி குறித்த நம்முடைய சிந்தனைகளில் மாறுதல் ஏற்படலாம்." 

Thursday, 25 July 2024

கவிஞர் யுகபாரதியின் "வாலிப வார்த்தைகள்"

கவிஞர் வாலியுடனான முதல் சந்திப்பில் துவங்கி, அவருடன் பயணித்த அனுபவங்களையும், அவருடனான உரையாடல்களையும் இந்நூலில் பதிவிடுகிறார் யுகபாரதி. கவிஞர் வாலியின் நம்பிக்கை, இயல்பு, சுயமரியாதை என பலவற்றையும் இந்நூல் பேசுகிறது. வாலி அவர்கள் பாடல் வரிகள் எழுதும் வேகத்தையும், எப்பொழுதும் trend-ல் இருக்கும் அவரது அசாத்திய கற்பனைகளையும் பல இடங்களில் விவரிக்கிறார் யுகபாரதி.



சமரசமில்லாமல் சினிமா உலகம் இயங்காது என்பதை புரிந்துகொண்ட கவிஞர் வாலி அதை செய்ய தயங்கியதில்லை, ஆனால் அதே சமயம் சுயமரியாதையை என்றும் விட்டுக்கொடுத்ததில்லை என்று பல தருணங்களை சுட்டிக்காட்டி பேசுகிறது இந்நூல். அரசியல் தலைவர்களிடம் கவிஞருக்கு இருந்த தோழமை, மாற்றுக் கருத்துக்கும் மாற்றுச் சிந்தனைக்கும் அவர் கொடுத்த மதிப்பு, சினிமா துறையில் இருக்கும் sentiment மற்றும் மூடநம்பிக்கைகளில் ஈடுபாடு இல்லாமல் இருந்தும் அவர் அவற்றை மற்றவர்களுக்காக சகித்து கொண்டது  போன்றவற்றை வாசிக்கும் போது அவரது democratic approach புரிகிறது. 


கவிஞரின் பாடல் வரிகளை பற்றிய வர்ணணை இந்த நூலில் குறைவாக இருப்பது ஏமாற்றமே. யுகபாரதியின் "இசை அல்லது இளையராஜா" நூலில் இருந்த இளையராஜாவின் இசையை பற்றிய வர்ணணை போல இங்கு இடம்பெறவில்லை. அது இந்நூலின் நோக்கமாக இல்லாமலும் இருக்கலாம், ஆனால் அந்த எதிர்பார்ப்பினால் தானோ இந்நூல் நிறைவான வாசிப்பாக இல்லை.

Tuesday, 21 November 2023

யுகபாரதியின் "முனியாண்டி விலாஸ்"

"முனியாண்டி விலாஸ்" என கவிதை தொகுப்பிற்கு பெயரிட்டதே இப்புத்தகத்தைப் படிக்கும் ஆர்வத்தை தூண்டியது. இன்று முனியாண்டி விலாஸ் நலிந்து பல கிளைகளை மூடி வந்தாலும், எஞ்சி இருக்கும் கிளைகள் மேற்கத்திய உணவை இங்கே பரப்பி வரும் கேஎஃப்சி-களையும், மெக்டோனால்ட்ஸ்-களையும் எதிர்த்து நிற்கும் தனித்துவம் கொண்டவை. அதே தனித்துவம் இக்கவிதை தொகுப்பில் தென்படுகிறதா?



இத்தொகுப்பில் இடம்பெறும் கவிதைகள் உணவு, உடை, உறவுகள், உணவகம், மழை, கல்வி நிலையங்கள், காதல், காமம், சமூக நிலை, சாதி, அரசியல் ஆகியவை பற்றிய கருத்துகளுடன் கவிஞரின் கருத்தியலையும் தாங்கி நிற்கின்றன. அரசியல் தலைவர்களை பற்றிய விமர்சனங்களுடன் தேர்தல் அரசியல் நகர்வுகளையும், வாக்காளர் மனநிலையையும் அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றன சில கவிதைகள். அரசியல் சார்ந்த கவிதைகளை தாண்டி உணவு,  காதல் பற்றிய கவிதைகளிலும் அவற்றை சுற்றிய அரசியல் இடம்பெற்று சமகால சமூக சூழலை பிரதிபலிக்கிறது. 

பொது இடங்களில் சாதிய பாகுபாட்டையும், வர்க்க வேறுபாட்டையும் தூக்கிப் பிடிக்கும் நிலையை உணவகங்கள் பற்றிய கவிதை பேசுகிறது. அசைவ உணவின் மணம் பல கவிதைகளில் வீசுகிறது. அடுக்கக வாழ்க்கை பற்றிய கவிதை அடுக்கு மாடி வீடுகளில் வாழும், நிற்க கூட நேரமில்லாமல் ஓடும் மனிதர்களின் அவல நிலையை பேசுகிறது. 

பல கவிதைகள் முற்போக்கு சிந்தனைகளை வெளிப்படுத்தினாலும், ஆங்காங்கே சில கவிதைகள் பொதுவான மனநிலையில் தென்படுகின்றன. 

நம்மைச் சுற்றி நிகழும், நாம் கவனித்த-கவனிக்க மறந்த தருணங்களை நமக்கு நெருக்கமான மொழியில் இப்புத்தகம் வழங்குகிறது.

என்னை கவர்ந்த சில வரிகள் -

அடுக்கக வாழ்க்கை

"மனித வாடையைத் தவிர்க்கலாம் 
தனித்திருக்கலாம் 
அழைப்பு மணிக்கு மட்டும் 
கதவைத் திறந்தால் போதும் 

சொந்தங்கள் வந்தாலும் 
இரண்டொரு நாளில் ஊருக்குக் 
கிளம்பிவிடுவார்கள் 

கோழிச் சண்டையோ 
குழாயடிச் சண்டையோ வராது 

பாதங்கள் தரையில் பாவாத 
கால் நகங்களில் அழுக்கேறாத 
சவத்திற்கு ஒப்பான 
ஒரு வாழ்வை மேற்கொள்ள 

அடுக்கக வாழ்க்கை 
அற்புத வாழ்க்கை"

முனியாண்டி விலாஸ்

"முனியாண்டி விலாஸ் 
ஓர் அசைவ உணவகம். ஆனாலும் 
அங்கே, சைவத்திற்கு இடமில்லாமல் 
போவதில்லை 

முனியாண்டி விலாஸ் 
எளிய மனிதர்களின் கூடாரம் 
பகட்டும் பம்மாத்தும் கொண்டவர்களை 
அங்கே பார்க்க முடியாது 

நெடிய காத்திருப்பிற்குப் பின்தான் 
வயிறு நிறையும் என்கிற தந்திரங்களை 
முனியாண்டி விலாஸ் செய்வதில்லை 

அங்கே, ஆங்கில மெனுக்கார்டு கிடையாது 
ஆர்டர் எடுத்துக்கொள்ளபவர்,நம்மிலும் 
வறிய வாழ்வை மேற்கொள்பவராயிருப்பார் 

மேசைத்துடைப்பவர் மேலாளர் என்னும் 
பாகுபாடுகள் அங்கே இல்லை 
எல்லாரும் எல்லா வேலைகளையும் 
இழுத்துப்போட்டு செய்வர் 

அங்கே, 
சீர்காழியும் சிதம்பரம் ஜெயராமனும் 
கார நெடிகளுக்கு ஏற்ப தங்கள் கமகங்கள் மெருகேற்றிக்கொள்வர் 

கொல்வது பாவிமாயிற்றே என்று 
அங்கே யாரும் குமைவதில்லை

...

முனியாண்டி விலாஸுக்குப் பழகிய நாக்கு 
கிர்ல்டு சிக்கனுக்கோ தந்தூரி சிக்கனுக்கோ அலையாது 

இறக்குமதி செய்யப்பட்ட 
சமையற்குறிப்புகளை அங்கே உள்ள மாஸ்டர்கள் பழகிக்கொள்ள விரும்புவதில்லை

...

முனியாண்டி விலாஸ் 
தன்னிடம் பசியாறிப்போகும் அனைவரையும் முனியாண்டியாகவே பார்க்கிறது 

கணினிக்கும்  டிஸ்யூ பேப்பருக்கும் 
மயங்காத முனியாண்டி விலாஸ் தன் 
அசலான முகத்தை எதற்காகவும் மாற்றிக்கொள்வதில்லை 

முனியாண்டிகளுக்காக 
முனியாண்டிகளால் நடந்தப்படும் 
முனியாண்டி விலாஸ் 
ஒரு சமூகத்தின் செயல்பாடு 
ஒரு சமூகத்தின் அடைபாளம் 
ஒரு சமூகத்தின் சங்கிலித்தொடர் 

முனியாண்டிகளாய்த் தங்களை 
உணராதவர்கள் அங்கே வருவதில்லை முனியாண்டிகளை உணராதவர்களும் 
அங்கே வருவதில்லை"


உணவகம்

"அசைவ உணவகத்தில் 
எக்ஸ்ட்ரா வாங்காதவன் 
தலித்தாக நடத்தப்படுவான் 

மெல்லிய போதையோடு 
வருகிறவர்களுக்கு 
ராஜமரியாதை 

ஒரே ஒரு ஆம்லெட் என்றதும் 
முகம் சுருங்கி 
யாருக்கோ வைப்பதுபோல 
வைத்துவிட்டுப் போகிறவனுக்குத் 
தெரியாது 

நான் வேறொரு உணவகத்தில் 
கோப்பை கழுவுபவனென்று."


வேதாள தேவதை

"அதிகாரம் கைக்குவந்த பிறகு 
ஒவ்வொரு 
தேவதையும் வேதாளமாகிவிடுவதாகப் பேசிக்கொள்கிறார்கள் 

அவர்களால் 
நம்பவே முடியாத இன்னொன்று : 
தம்மால் வென்ற வேதாளம் 
தம்மை வீழ்த்துவதற்கு தேவதையாக 
வேடமிட்ட விஷயம்தான்."

ஒரு சின்ன கற்பனை

"கடவுள் என்று சொல்லப்படுபவர் 
நம் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்தால் 
எப்படி இருக்கும்? 

இரவல் வாங்கலாம் 
தேவையெனில் கடன் கேட்கலாம் 
எங்கே காணோமே எனலாம் 
வீட்டில் விருந்தாளியா எனச் சிரிக்கலாம் 
இன்று விடுமுறையா 
உங்கள் லைனிலாவது கரண்ட் இருக்கிறதா 
பேப்பர் பார்த்தீர்களா என 
எதையாவது கேட்டுக்கொண்டே 
இருக்கலாம் 

பக்கத்தில் இருக்க வேண்டிய ஒருவர் 
உள்ளே இருந்து  ஒரு பிரயோசனமும் 
இல்லை." 

Mareesan - a slow burn suspense thriller backed by a brilliant Vadivelu and an effortless FaFa

Mareesan is a suspense thriller that has Vadivelu and Fahadh Faasil sharing screen space for the second time. Velayudham (Vadivelu), an Alzh...