Showing posts with label Lyrics. Show all posts
Showing posts with label Lyrics. Show all posts

Saturday, 14 December 2024

கவிஞர் யுகபாரதியின் "பின்பாட்டு"

கவிஞர் யுகபாரதியின் "பின்பாட்டு" தமிழ் திரையிசை பாடல்கள் பற்றிய ஒரு கட்டுரை தொகுப்பு. திரையிசை பாடல்கள் காலப்போக்கில் அடைந்த மாறுதல்களையும், அந்த மாறுதல்களுக்கான காரணிகளையும் வரலாற்று தரவுகளுடன் எடுத்துக்காட்டுகிறார் கவிஞர். ஒரு பாடல் உருவாவதற்கு பின்னால் இருக்கும் உழைப்பையும், சிக்கல்களையும், வியாபார நோக்கில் நடக்கும் சமரசங்களையும், அதை தன்னிலையிலிருந்து எதிர்கொள்ளும் விதத்தையும் கவிஞர் தான் எழுதிய பாடல்களைச் சுட்டிக்காட்டி விவரிக்கிறார். 


பாடலாசிரியர்கள் பற்றியும், இசையமைப்பாளர்கள் பற்றியும், அவர்கள் உருவாக்கிய பாடல்கள் குறித்தும் பல சுவையான செய்திகள் இந்நூலில் கொட்டிக்கிடக்கின்றன. அந்தந்த காலக்கட்டத்தில் நிலவிய சமூக கட்டமைப்பு பாடல் வரிகளின் வழி தென்படும் எடுத்துக்காட்டுகள், தனிநபர் விருப்பு-வெறுப்புகள் வெளிப்படும் பாடல் வரிகள், சமகால அரசியல் சூழலின் நீட்சியாக அமைந்த பாடல்கள் என பல விவரங்களை இந்நூல் நமக்கு தருகிறது. ஆங்காங்கே விவரணைகள் சற்று நீளமாக இருப்பதும், ஒரே செய்தி மீண்டும் மீண்டும் விளக்கப்படுவதும் சிறிது சலிப்பை உண்டாக்குகிறது. 

திராவிட அரசியல் ஆளுமைகள் கலை இலக்கியங்களையும், திரையிசை பாடல்களையும், திரைப்படங்களையும் தங்கள் கொள்கை பரப்பும் கருவிகளாக பயன்படுத்தி வெற்றியும் கண்ட யுக்திகளை இந்நூல் விளக்குகிறது. நூல் நெடுக பாடகர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் பற்றிய யுகபாரதியின் பாராட்டுகளிளும் சரி விமர்சனங்களிளும் சரி நேர்மை மட்டுமே தென்படுகிறது. "ஆகாசத்த நான் பாக்குறேன்" பாடல் முதலில் "ஆகாசத்த நான் பாக்கல" என தான் எழுதியிருந்ததாகவும், இயக்குனர் ராஜூ முருகன் தான் வரிகளை சற்று மாற்றினார் என்று யுகபாரதி குறிப்பிடுகிறார். அதை குறிப்பிட்டுவிட்டு "உண்மையில், பாக்கல என்றால் கழிவிரக்கமே வருகிறது. பார்க்கிறேன் என்னும்போதுதான் காதல் வெளிப்படுகிறது." என ஏற்புடன் கூறுவதே கவிஞரின் நேர்மை.


இந்நூலில் என்னை கவர்ந்த வரிகள் ---

"மேல் நோக்கி வளர்வதுதான் வளர்ச்சியென்று நம்பிக்கொண்டிருக்கிறோம். உண்மையில், கலையும் இலக்கியமும் கீழ்நோக்கிப் பரவ வேண்டும். அதாவது, கீழே இருக்கும் மக்களை நோக்கி. கீழே இருக்கும் வேர்களால்தான் மரங்கள் வளர்கின்றன என்கிற அடிப்படையைப் புரிந்துகொண்டால் வளர்ச்சி குறித்த நம்முடைய சிந்தனைகளில் மாறுதல் ஏற்படலாம்." 

Tuesday, 11 July 2023

Remembering Na. Muthukumar on his birth anniversary

நாம் தினம்தினம் கடந்து போகும் மனிதர்களையும், நம் அருகினில் கவனித்த - கவனிக்க மறந்த தருணங்களையும், நமக்கு நெருக்கமான மொழியில், திரையில் தன் எழுத்தின் மூலம் படரவிட்ட சாமானியனின் பிரதிநிதி - நா. முத்துக்குமார்.  




"காற்றினில் கிழியும் இலைகளுக்கெல்லாம் காற்றிடம் கோபம் கிடையாது"

"கல்லறை மீது பூக்கும் பூக்கள் கூந்தலை போய் தான் சேராது"

“உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம், நடப்பவை நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம். பல முகங்கள் வேண்டும் அதை மாட்டிக்கொள்வோம், பல திருப்பம் தெரியும் அதில் திரும்பிக்கொள்வோம்... கதை முடியும் போக்கில் அதை முடித்துக்கொள்வோம்... மறு பிறவி வேண்டுமா?" 

Sunday, 9 October 2022

கவிஞர் யுகபாரதியின் "இசை அல்லது இளையராஜா"

கவிஞர் யுகபாரதியின் "இசை அல்லது இளையராஜா" எனும் நூல் இளையராஜா அவர்களின் இசையை புதியதோர் கண்ணோட்டத்தில் அணுகுகிறது. இளையராஜாவின் இசைப் புலமையையும், திரையிசைப் பாடல்களிலும், பிண்ணணி இசையிலும் அவர் நிகழ்த்தும் அற்புதங்களையும் பல இயக்குனர்களின் மேடைப் பேச்சுகளின் மூலம் அறிந்திருப்போம். 

இளையராஜா அவர்கள் பாடல் வரிகளுக்கு தரும் முக்கியத்துவத்தையும், அவரது இசையில் கேட்கும் வார்த்தைகளின் தெளிவையும் பல பாடல்களில் உணர்ந்திருப்போம். அதன் காரணம் இளையராஜாவுக்கு இருந்த மொழிப் புலமை. அந்த மொழிப் புலமையையே இந்நூல் எடுத்துக்காட்டுக்களுடன் கையாள்கிறது. 


தமிழ் வார்த்தைகளின் சந்தத்தை வைத்துக்கொண்டு அவர் கட்டமைத்த இசை வடிவத்தையும், அதை சிரமமில்லாமல் கிராமத்தின் கடைக்கோடி ரசிகனுக்கும் சென்றடையும் வகையில் கடத்தியதையும் நமக்கு பரிச்சயமான பாடல்களைக் கொண்டு விவரிக்கிறார் கவிஞர். 

பாடலாசிரியராக இளையராஜாவின் வார்த்தை பிரயோகம், மற்ற பாடலாசிரியர்களின் வரிகளில் அர்த்தம் பிரழாமல் செய்யும் மாற்றங்கள், அதில் அவர் புகுத்தும் எளிமை ஆகியவற்றை கவிஞர் அவர் ரசித்த பாடல்களிலிருந்தும், அவருடன் பணியாற்றிய அனுபவத்திலிருந்தும் பகிர்கிறார். 

எளிய மக்களிடம் தனது இசைப் புலமையைக் காட்டி மிரள வைக்காது, அவர்கள் தேவைக்கேற்றவாறு, கதை நடக்கும் நிலப்பரப்பின் வட்டார மொழியின் வாயிலாக உணர்வுகளை கடத்துவதே இளையராஜாவின் அசாத்திய திறமை.

ஒரு பாடலாசிரியர் ஒரு இசையமைப்பாளரின் மொழிப் புலமையை பற்றி எழுதுவது இளையராஜா திரையிசையில் நிகழ்த்திய புரட்சிக்கும், யுகபாரதியின் திறந்த மனதிற்கும் - தெளிவான சிந்தனைக்கும் சான்று.

Sunday, 27 December 2015

கல்வி தந்த தாயே!

சூழல் : கல்வி தந்தப் பெண்மணியின் சிலையைப் பார்த்து, கல்வி முடித்துச் செல்லும் மாணவனின் கவிதை.
வஞ்சம் கொண்ட நெஞ்சம் பல,
லஞ்சம் கேட்டு மிஞ்சுவதுண்டு.
நஞ்சு விளைந்த அந்த நெஞ்சங்களை,
பிஞ்சு நெஞ்சங்கள் கெஞ்சுவதுண்டு.
தஞ்சம் தரும் நெஞ்சம் கொண்ட
நெஞ்சங்களுக்குப் பஞ்சம் உண்டு.
அதில் மிஞ்சும் பேரும் கொஞ்சம் உண்டு,
புரிந்துக் கொண்டேன் உன்னைக் கண்டு!

தஞ்சைக்குக் கொள்ளிடம் போல,
காஞ்சிக்குப் பாலாறு போல,
என் வாழ்விற்கு வளம் சேர்த்தாயே,
கல்வி தந்த என் இரண்டாம் தாயே!

கலைக் கற்று செல்கிறேன் இன்று,
சிலையாய் நீயும் வாழ்த்துகிறாய் நின்று!
எழுத்து & எண்ணம்,
அருண் பாரதி சுவாமிநாதன்
Note : Situational Poetry

கடவுள் யார்?


சிலையும் சிலுவையும் பரம்பொருள் என்றும்,
கதையின் நாயகன் கடவுள் என்றும்,
காவி துறவி சாமி என்றும்,
மதத்திற்காக கலவரம் என்றும்,
தன்னைத் தானே தேவன் என்றும்,
கூவும் மாந்தர் மெய்யும் கேளும்!

மண் செழிக்க மழைத்துளி தரும்,
வான் என்னும் பகவான் பாரும்.
தேனி வாழ தேனைத் தரும்,
ஒரு நாள் தெய்வம் பூவும் பாரும்.
மரம் வளர உரமாய் மாறும்,
நரகல் கூடக் கடவுள் பாரும்!

சேய்க்காக பத்து மாதம் வாடும்,
தாய் என்னும் தெய்வம் பாரும்.
மெய்க் காக்க அன்னம் தரும்,
விவசாயி என்னும் சாமி பாரும்.
நோய் அண்டா அண்டம் தரும்,
ஆய் அள்ளும் ஆண்டவன் பாரும்!

தேவன் என்பவன் ஒருவன் அல்ல...
ஒவ்வொருவனும் தான்!
எழுத்து & எண்ணம்,
அருண் பாரதி சுவாமிநாதன்.

Mareesan - a slow burn suspense thriller backed by a brilliant Vadivelu and an effortless FaFa

Mareesan is a suspense thriller that has Vadivelu and Fahadh Faasil sharing screen space for the second time. Velayudham (Vadivelu), an Alzh...