பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் நித்யா,போர்டிங் ஸ்கூல் கழிவறையில் குழந்தை பெற்றெடுக்கும் காட்சியில் தொடங்குகிறது கதை. இதில் சம்பந்தப்பட்ட இருவரும் நிதானமாக ஒரு முடிவை எடுக்க முற்படும்போது, அந்த முடிவுக்கு அவர்களது குடும்பமும் இந்தச் சமூகமும் ஆற்றும் எதிர்வினை என்ன?
இரு வேறு காலகட்டங்கள். இரு வேறு மனிதர்கள். ஒரே சூழ்நிலை. அந்தச் சூழ்நிலையை ஞானசேகரன், அருண் ஆகிய இரு கதைமாந்தர்களும் அவரவர் காலகட்டத்தில் எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்பதைப் பேசுகிறது இக்குறுநாவல்.
ஒருவன் தனக்குள் இருக்கும் இரகசியங்களையும் உண்மைகளையும் உற்றார் உறவினருக்காக மறைத்து, முகமூடி அணிந்த வாழ்க்கையை வாழ்வதிலிருந்து விடுபட்டு, உண்மையான முகத்துடன் வெளிவர முற்படும்போது, இந்தச் சமூகம் பெரும்பாலும் அவனை ஏற்றுக்கொள்வதில்லை. அவன் சமூகத்திற்காகக் கட்டமைத்த பிம்பம் உடையும்போது, சமூகத்துடன் சேர்ந்து அவனது குடும்பமும் அவனைத் தனிமைப்படுத்தினால், அவன் எதிர்கொள்ளும் கையறு நிலையையே இக்கதை வெளிப்படுத்துகிறது.
நின்று நிதானமாகப் பயணிக்கும் கதை, இறுதிச் சில பக்கங்களில் ஏனோ சட்டென முடிந்துவிடுகிறது. நித்யாவின் மனமாற்றத்திற்கான காரணமும் தெளிவாகச் சொல்லப்படவில்லை. எனினும், எளிய மொழிநடையில் விறுவிறுப்பாக நகரும் கதை.
லக்ஷ்மி சரவணகுமாரின் “வாக்குமூலம்” ஒரு மனிதனின் உள்ளப்போராட்டத்தையும், redemption தேடி அலையும் அவனது மனநிலையையும் பேசும் கதை.




















