Showing posts with label Poet. Show all posts
Showing posts with label Poet. Show all posts

Saturday, 31 January 2026

கவிஞர் மு.மேத்தாவின் "ஆகாயத்துக்கு அடுத்த வீடு"

கவிஞர் மு.மேத்தாவை நான் அறிந்தது திரைப்பாடல்கள் மூலமே. ரெட்டை வால் குருவி திரைப்படத்தில் வரும் "ராஜ ராஜ சோழன் நான்" பாடலும், காசி திரைப்படத்தில் வரும் "என் மன வானில்" பாடலும் தான் மு.மேத்தாவை எனக்கு அறிமுகப்படுத்தின. 

"""கள்ளுர பார்க்கும் பார்வை உள்ளுர பாயுமே
துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே
வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே
பெண் பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே"""

“""இறைவனிடம் வரங்கள் கேட்டேன்…
ஸ்வரங்களை அவனே கொடுத்தான்…
மனிதரில் இதை யாரும் அறிவாரோ…

நான் பாடும் பாடல் எல்லாம்…
நான் பட்டபாடே அன்றோ…
பூமியில் இதை யாரும் உணர்வாரோ…

மனதிலே மாளிகை வாசம்…
கிடைத்ததோ மர நிழல் நேசம்…
எதற்கும் நான் கலங்கியதில்லை இங்கே…

ராகம் உண்டு தாளம் உண்டு…
என்னை நானே தட்டிக்கொள்வேன்…
என் நெஞ்சில் உண்மையுண்டு…
வேறென்ன வேண்டும்…”""

- போன்ற வரிகளில் ஈர்க்கப்பட்ட நான், மு.மேத்தாவின் கவிதைகளை வாசிக்க எத்தனித்தேன். "ஆகாயத்துக்கு அடுத்த வீடு" கவிதைத் தொகுப்பை புத்தகக் கண்காட்சியில் தேர்ந்தெடுத்தேன். 


இந்த கவிதைத் தொகுப்பில் காதல், இயற்கை, மனித இயல்பு ஆகியவற்றைப் பற்றிய கவிதைகளிருந்தும், அரசியல் நையாண்டியும், சமூக அவலநிலை பற்றிய கோபமும் பல கவிதைகளில் பிரதானமாக தென்படுகின்றன. சமகால அரசியல் நிகழ்வுகளையும் கவிதைகள் மூலம் பதிவு செய்கிறார் மு. மேத்தா. இன்றைய சூழலுக்கும் அக்கவிதைகள் பொருந்திப் போகின்றன. பழகிப்போன கற்பனைகள் ஆங்காங்கே இருந்தாலும் மக்களுக்கு நெருக்கமான மொழியில், வாசகர்களைத் திணரடிக்காமல் எளிய சொற்களை கையாள்கிறார் கவிஞர்.



என்னை கவர்ந்த சில வரிகள் -

***இந்தியா என் காதலி***

....
உன் மைய மண்டபத்தில்
குயில்களின் குரலை
அவைக் குறிப்பிலிருந்து
நீக்க வேண்டுமென்று
காக்கைகள்
கலகம் செய்கின்றன.
....
இராம ஓவியம் 
தீட்டுவதற்கு 
இரத்தம் போதவில்லை
என்று
சத்தம் போடுகின்றன
தூரிகைகள்...

நீயோ 
"தூரிகை வாழ்க" என்று
பேரிகை கொட்டுகிறாய்!
....
எந்த நேரத்தில் 
இடிப்பார்களோ
எந்த நேரத்தில் 
வெடிப்பார்களோ
என்று
ஊர் ஊராகக்
கடவுள்
ஒளிந்து வாழ்கிறான்...

அன்னிய முதலாளிகளின் 
கோப்பைகளை எமது
குருதியால் நிரப்பிவிட்டு
அவர்களது
குளிர்பானங்களால்
எம்மைக்
குளிரவைக்கப் பார்க்கிறாய்...

ராமராஜ்யக்
கனவுகள்
மெல்ல மெல்ல
ரோம ராஜ்யக்
கனவுகளாய் 
மாறிவருகின்றன...


***எழுத்தெனப் படுவது***
அதை நான் 
எழுதி முடிக்கும் போது
அதற்கான சுவடுகள்
அழிந்து போயிருக்கும்...
அவற்றின் சுவடுகளாய்
என்
எழுத்துக்கள் இருக்கும்!

எழுதும் முன்
எது என்னை வதைத்ததோ
அது உங்களை
வதைக்கத் தொடங்கும் போது
நான் எழுதப்பட்டிருப்பேன்...



***விளக்குகளின் விழா***
...
ஒற்றை விழிச்சுடரால்
விளக்கு
உற்றுப் பார்க்கிறது...
இருட்டு எங்கேனும் 
ஒளிந்துள்ளதா
என்று.

திடீரென்று
சோகம் விளக்கைச்
சூழ்ந்து கொள்கிறது.

நிழலாய் உடன் நிற்கும்
சொந்த இருட்டினைத்
துரத்த முடியவில்லையே...


***ஓர் உரையாடல்***
(2002-2003 காவிரி பிரச்சினை)

“செப்புத் தகட்டில்
எழுதுவதா?
கல்லில் 
செதுக்குவதா?
எதில் எழுதிவைத்தால் 
நிலைக்கும் 
இந்திய ஒருமைப்பாடு?"
என்றார்.

தயங்காமல் சொன்னேன்
"தண்ணீரில் எழுதுங்கள்"
என்று.

"நீர்மேல் எழுத்து 
நிலைக்காதே" என்றார்.

"நீரில் எழுதாவிட்டால் 
இந்திய ஒருமைப்பாடு 
நிலைக்காதே" என்றேன்.

"எந்த நீரில் 
எழுதச் சொல்வது?" என்றார்.

"கிருஷ்ணாவைக் கூப்பிட்டுக்
காவிரியில்
எழுதச் சொல்லுங்கள்"
என்றேன்.

Saturday, 22 October 2022

கவிஞர் நா. முத்துக்குமாரின் "வேடிக்கை பார்ப்பவன்"

சிறு வயதில் பேருந்தின் ஜன்னலோர இருக்கைக்காக ஏங்கி, சண்டையிட்டு இடம்பிடித்த நாம் தான் இன்று பேருந்து கிளம்பி அடுத்த நிமிடமே தூங்கி விழுகிறோம் - அது எவ்வளவு சிறிய பயணாமாயினும். வேடிக்கை பார்ப்பது வெளி உலகத்தையும், இயற்கையையும் நமக்கு சிறு வயதில் அறிமுகம் செய்தது. இன்றோ வெளி உலகையும் இயற்கையையும் ரசிக்க நேரமில்லாமல், பல நேரங்களில் சோர்வின் சாயல் முகமுழுதும் படர,  இலக்கில்லாமல் ஓடிக்கொண்டிருக்கோம். தனது வாழ்வையே தள்ளி நின்று வேடிக்கை பார்க்கும் கவிஞர் இந்த தன் வரலாற்று நூலில் பல இடங்களில் நம்மையும் நம் வாழ்க்கையை திரும்பிப் பார்க்க வைக்கிறார்.


நா. முத்துக்குமார் தனது வாழ்க்கை அனுபவங்களைத் தொகுத்து எழுதியிருக்கும் "வேடிக்கை பார்ப்பவன்" அவரது அனுபவங்களின் மூலம் வாழ்க்கை தத்துவங்களை நம்மிடையே கடத்துகிறது. வாழ்க்கையையும், வாழ்க்கையோடு சேர்ந்து இயற்கையையும், நம்மோடு நடமாடும் மனிதர்களையும் ரசிக்கத் தூண்டுகிறது. எழுத்துப் புலமையைக் காட்டி வாசகனை மிரள வைக்காது, சாமானியனும் ரசிக்கும் எளிய மொழிநடையில் அமைகிறது இந்நூல். வாழ்விலும் சரி, எழுத்திலும் சரி எளிமை தான் நா.முத்துக்குமாருக்கு அடையாளம். அந்த எளிமையே அவரது திரையிசை பாடல்களிலும் பிரதிபலித்தது.

கவிஞரின் பள்ளி பருவத்திலும், கல்லூரி பருவத்திலும் நடந்த சம்பவங்களில் பல வாசகனின் வாழ்விலும் நடந்திருக்கும் - அவை வாசகனுக்கு ஒரு nostalgic experience ஆக அமைகின்றன. 

"ஒன்றைத் தொட்டு இன்னொன்று கிளை விரித்துச் செல்லும் ஒற்றையடிப் பாதைகள்தான் ஞாபகங்களோ?", 

"இன்னமும் இவனுக்கு லிஃப்ட்டில் செல்வது என்றால், அடிவயிற்றில் இருந்து ஒரு பயம் லேசாக எட்டிப் பார்க்கும். ஒவ்வொரு முறை லிஃப்ட்டுக்குள் நுழையும்போதும், திறந்து மூடும் சவப்பெட்டிக்குள் நுழைவதுபோலவே நினைத்துக் கொள்வான்.", 

"தூரத்தில் இருந்து பார்க்கையில் தங்க நிலவாகத் தெரிந்த சினிமாவின் மறு பக்கம் வேறுவிதமாக இருந்தது. மஞ்சள் வண்ணத்தில் தகதகத்த அந்த நிலவின் உள் பக்கம், ஆக்சிஜனற்று, தண்ணீரற்று, பள்ளம் பள்ளமாக இவன் முன் விரிந்தது. இவன் கனவின் கைகளைப் பிடித்துக்கொண்டு அந்தரத்தில் மிதந்தபடி வாய்ப்புகளைத் தேடிக் கொண்டிருந்தான்.",

"நட்சத்திரக் கால் பதிக்கும் வாத்துக் கூட்டம்", 

"காதல் தோல்விதானோ யார் அறியக்கூடும்? ஆட்டுத்தாடி புடிச்சிருக்கு" 

போன்ற வரிகளில் வரும் பிரம்மிப்பூட்டும் கற்பனைகள் எளிய மொழி வடிவத்தில் இந்த புத்தகம் நெடுக பரவிக்கிடக்கின்றன. இவையே நா. முத்துக்குமாரின் "Trademark". 

நாம் தினம்தினம் கடந்து போகும் மனிதர்களையும், நம் அருகினில் கவனித்த - கவனிக்க மறந்த தருணங்களையும், நமக்கு நெருக்கமான மொழியில், திரையில் தன் எழுத்தின் மூலம் படரவிட்ட சாமானியனின் பிரதிநிதி தான் நா. முத்துக்குமார். 

“Rich Blood” by Robert Bailey

A personal injury lawyer, Jason Rich, who is just out of rehab for alcoholism. His estranged sister, Jana Waters, charged with the murder of...