Showing posts with label Memoirs. Show all posts
Showing posts with label Memoirs. Show all posts

Sunday, 29 October 2023

அசோகமித்திரனின் "ஒற்றன்"

அசோகமித்திரன் அமெரிக்காவின் ஐயோவா மாநிலத்தில் பிறநாட்டு எழுத்தாளர்களுடன் தங்கியிருந்த அனுபவங்களையும், அங்கே அவருக்கு ஏற்பட்ட பயண அனுபவங்களையும் ஒரு புனைகதையுருவில் "ஒற்றன்" எனும் நாவலாய் கொடுத்திருக்கிறார். 


பயணக் கதைகளிலும், பயணக் கட்டுரைகளிலும் அந்தந்த இடங்களின் நிலப்பரப்பு, உணவு முறை, சுற்றுலா தளங்கள், கலாச்சாரம், பருவநிலை மாற்றம், அங்குள்ள மனிதர்களின் வாழ்வியல் போன்றவையே பிராதானமாக இடம்பெறுவன. ஆனால், அசோகமித்திரன் தான் சந்தித்த மனிதர்களின் உணர்வுகளை பிரதானப்படுத்துகிறார். வெளிநாடு சென்றடைந்தவுடன் வரும் பயம்,  பதட்டம், பழக்கமில்லாதலால் வரும் தயக்கம் ஆகியவற்றை தனது சொந்த அனுபவங்களின் மூலம் நம்மிடம் கடத்துகிறார். 

பருவநிலை மாற்றம் மற்றும் பழக்கப்படாத வானிலை ஒரு மனிதனின் மனநிலை மீது ஏற்படுத்தும் தாக்கம், எளிதாக தயாரிக்கப்படும் மேலைநாட்டு உணவு வகையே ஒருவனுக்கு காலை உணவாய் என்றென்றைக்கும் மாறிப்போகும் நிலை, வெளிநாட்டு பேரூந்துகளில் பயணச்சீட்டு பெறும் முறைக்கு பழக்கப்பட ஒருவன் படும் சிரமம் போன்றவற்றின் நுட்பமான வர்ணனை அசோகமித்திரனின் எழுத்தில் வெளிபடுகிறது.

சொந்தங்களை பிரிந்து வாடும் கடினமான நாட்கள், தாய் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு புலம்பெயர்ந்தவர்களின் அவல நிலை, உலக போர்களால் சராசரி மனிதர்களுக்கு உருவாகும் நிச்சயமற்ற வாழ்வு மற்றும் கடல் கடந்து வாழும் அவர்கள் சொந்தங்களின் மனநிலை என பிரிவின் வலியை பல இடங்களில் காட்சிப்படுத்துகிறார்.

தன்னுடன் தங்கி இருந்த சக எழுத்தாளர்களின் வாழ்வில் ஏற்பட்ட சம்பவங்களையும், அவர்களின் செயல்களையும், தனிமனித உறவுகளையும் விவரிக்கும் போது moral/immoral எனச் சுட்டிக்காட்டாமல் உள்ளதை உள்ளபடி மட்டும் கூறி வாசகர்களிடம் விட்டுவிடுவது அசோகமித்திரனுக்கே உரிய பாணி. 

ஆங்கிலத்தில் நடைபெறும் உரையாடல்கள் தமிழில் குறிப்பிடப்படுவதால் பல இடங்களில் செயற்கையாய் அமைகின்றன. மற்றபடி அசோகமித்திரனின் மற்றுமொரு அழுத்தமான படைப்பு. 

Saturday, 8 July 2023

திரு. கணேஷ் அவர்களின் "ஓம்... க்ரீம்... ஐஸ்கிரீம்..."

திரு. கணேஷ் அரசு பள்ளி மாணவர்களுடன் நடத்திய உரையாடல்களை புத்தகமாக தொகுத்து வழங்கியிருக்கிறார். நமது கல்வி முறையில் வகுப்பறையில் நடக்கும் உரையாடல்கள் மிகக் குறைவு. இப்புத்தகத்தில் இடம்பெறும் கற்பித்தல் முறை "உரையாடல் வழி கல்வி"யாக அமைகிறது. 

இங்கே பாடங்களாகவும், கருத்துக்களாகவும் இடம்பெறும் அனைத்தும் என்னை பள்ளி பருவத்திற்கு கூட்டிச் செல்லும் ஒரு nostalgic trip ஆக எனக்கு அமைந்தது - ஆனால் நான் இவ்வளவு எளிதாக அவற்றை உள்வாங்கிக் கொள்ளவில்லை. நமது கல்வி கற்பித்தல் முறையும் எளிமைப்படுத்தப்பட வேண்டும் என்பதை உணர்த்துகின்றன கணேஷ் அவர்களின் concepts. 



ஒரு சிறு மெழுகுவர்த்தியில் இருக்கும் அறிவியலில் துவங்கி, cyborg எனும் அறிவியல் முன்னேற்றம் மற்றும் அதை பயன்படுத்தும் தொலைநோக்கு பார்வை வரை இப்புத்தகம் மாணவர்களுக்கு பல்வேறு அறிவியல் கருத்துக்களை எளிதாக விளக்குகிறது. தமிழ் இலக்கணம், வரலாற்று நிகழ்வுகள் பற்றி தகவல்களும் இடம்பெறுகின்றன. அத்துடன் நில்லாமல் உரையாடல்களில் வெளிப்படும் சமூக அக்கறையும், சமகால சமூக அமைப்பின் மீதான விமர்சனமும் மாணவர்களிடையே பேசப்பட வேண்டியவையே.
 
இப்புத்தகம் நெடுக வரும் உரையாடல்களில் கலந்திருக்கும் நகைச்சுவையும் கூடுதல் பலம்.

Saturday, 22 October 2022

கவிஞர் நா. முத்துக்குமாரின் "வேடிக்கை பார்ப்பவன்"

சிறு வயதில் பேருந்தின் ஜன்னலோர இருக்கைக்காக ஏங்கி, சண்டையிட்டு இடம்பிடித்த நாம் தான் இன்று பேருந்து கிளம்பி அடுத்த நிமிடமே தூங்கி விழுகிறோம் - அது எவ்வளவு சிறிய பயணாமாயினும். வேடிக்கை பார்ப்பது வெளி உலகத்தையும், இயற்கையையும் நமக்கு சிறு வயதில் அறிமுகம் செய்தது. இன்றோ வெளி உலகையும் இயற்கையையும் ரசிக்க நேரமில்லாமல், பல நேரங்களில் சோர்வின் சாயல் முகமுழுதும் படர,  இலக்கில்லாமல் ஓடிக்கொண்டிருக்கோம். தனது வாழ்வையே தள்ளி நின்று வேடிக்கை பார்க்கும் கவிஞர் இந்த தன் வரலாற்று நூலில் பல இடங்களில் நம்மையும் நம் வாழ்க்கையை திரும்பிப் பார்க்க வைக்கிறார்.


நா. முத்துக்குமார் தனது வாழ்க்கை அனுபவங்களைத் தொகுத்து எழுதியிருக்கும் "வேடிக்கை பார்ப்பவன்" அவரது அனுபவங்களின் மூலம் வாழ்க்கை தத்துவங்களை நம்மிடையே கடத்துகிறது. வாழ்க்கையையும், வாழ்க்கையோடு சேர்ந்து இயற்கையையும், நம்மோடு நடமாடும் மனிதர்களையும் ரசிக்கத் தூண்டுகிறது. எழுத்துப் புலமையைக் காட்டி வாசகனை மிரள வைக்காது, சாமானியனும் ரசிக்கும் எளிய மொழிநடையில் அமைகிறது இந்நூல். வாழ்விலும் சரி, எழுத்திலும் சரி எளிமை தான் நா.முத்துக்குமாருக்கு அடையாளம். அந்த எளிமையே அவரது திரையிசை பாடல்களிலும் பிரதிபலித்தது.

கவிஞரின் பள்ளி பருவத்திலும், கல்லூரி பருவத்திலும் நடந்த சம்பவங்களில் பல வாசகனின் வாழ்விலும் நடந்திருக்கும் - அவை வாசகனுக்கு ஒரு nostalgic experience ஆக அமைகின்றன. 

"ஒன்றைத் தொட்டு இன்னொன்று கிளை விரித்துச் செல்லும் ஒற்றையடிப் பாதைகள்தான் ஞாபகங்களோ?", 

"இன்னமும் இவனுக்கு லிஃப்ட்டில் செல்வது என்றால், அடிவயிற்றில் இருந்து ஒரு பயம் லேசாக எட்டிப் பார்க்கும். ஒவ்வொரு முறை லிஃப்ட்டுக்குள் நுழையும்போதும், திறந்து மூடும் சவப்பெட்டிக்குள் நுழைவதுபோலவே நினைத்துக் கொள்வான்.", 

"தூரத்தில் இருந்து பார்க்கையில் தங்க நிலவாகத் தெரிந்த சினிமாவின் மறு பக்கம் வேறுவிதமாக இருந்தது. மஞ்சள் வண்ணத்தில் தகதகத்த அந்த நிலவின் உள் பக்கம், ஆக்சிஜனற்று, தண்ணீரற்று, பள்ளம் பள்ளமாக இவன் முன் விரிந்தது. இவன் கனவின் கைகளைப் பிடித்துக்கொண்டு அந்தரத்தில் மிதந்தபடி வாய்ப்புகளைத் தேடிக் கொண்டிருந்தான்.",

"நட்சத்திரக் கால் பதிக்கும் வாத்துக் கூட்டம்", 

"காதல் தோல்விதானோ யார் அறியக்கூடும்? ஆட்டுத்தாடி புடிச்சிருக்கு" 

போன்ற வரிகளில் வரும் பிரம்மிப்பூட்டும் கற்பனைகள் எளிய மொழி வடிவத்தில் இந்த புத்தகம் நெடுக பரவிக்கிடக்கின்றன. இவையே நா. முத்துக்குமாரின் "Trademark". 

நாம் தினம்தினம் கடந்து போகும் மனிதர்களையும், நம் அருகினில் கவனித்த - கவனிக்க மறந்த தருணங்களையும், நமக்கு நெருக்கமான மொழியில், திரையில் தன் எழுத்தின் மூலம் படரவிட்ட சாமானியனின் பிரதிநிதி தான் நா. முத்துக்குமார். 

Annihilation of Caste — Dr. B.R. Ambedkar

The Jat-Pat Todak Mandal, an organisation founded by members associated with the Arya Samaj, sought to challenge the caste system through in...