Saturday, 22 October 2022

கவிஞர் நா. முத்துக்குமாரின் "வேடிக்கை பார்ப்பவன்"

சிறு வயதில் பேருந்தின் ஜன்னலோர இருக்கைக்காக ஏங்கி, சண்டையிட்டு இடம்பிடித்த நாம் தான் இன்று பேருந்து கிளம்பி அடுத்த நிமிடமே தூங்கி விழுகிறோம் - அது எவ்வளவு சிறிய பயணாமாயினும். வேடிக்கை பார்ப்பது வெளி உலகத்தையும், இயற்கையையும் நமக்கு சிறு வயதில் அறிமுகம் செய்தது. இன்றோ வெளி உலகையும் இயற்கையையும் ரசிக்க நேரமில்லாமல், பல நேரங்களில் சோர்வின் சாயல் முகமுழுதும் படர,  இலக்கில்லாமல் ஓடிக்கொண்டிருக்கோம். தனது வாழ்வையே தள்ளி நின்று வேடிக்கை பார்க்கும் கவிஞர் இந்த தன் வரலாற்று நூலில் பல இடங்களில் நம்மையும் நம் வாழ்க்கையை திரும்பிப் பார்க்க வைக்கிறார்.


நா. முத்துக்குமார் தனது வாழ்க்கை அனுபவங்களைத் தொகுத்து எழுதியிருக்கும் "வேடிக்கை பார்ப்பவன்" அவரது அனுபவங்களின் மூலம் வாழ்க்கை தத்துவங்களை நம்மிடையே கடத்துகிறது. வாழ்க்கையையும், வாழ்க்கையோடு சேர்ந்து இயற்கையையும், நம்மோடு நடமாடும் மனிதர்களையும் ரசிக்கத் தூண்டுகிறது. எழுத்துப் புலமையைக் காட்டி வாசகனை மிரள வைக்காது, சாமானியனும் ரசிக்கும் எளிய மொழிநடையில் அமைகிறது இந்நூல். வாழ்விலும் சரி, எழுத்திலும் சரி எளிமை தான் நா.முத்துக்குமாருக்கு அடையாளம். அந்த எளிமையே அவரது திரையிசை பாடல்களிலும் பிரதிபலித்தது.

கவிஞரின் பள்ளி பருவத்திலும், கல்லூரி பருவத்திலும் நடந்த சம்பவங்களில் பல வாசகனின் வாழ்விலும் நடந்திருக்கும் - அவை வாசகனுக்கு ஒரு nostalgic experience ஆக அமைகின்றன. 

"ஒன்றைத் தொட்டு இன்னொன்று கிளை விரித்துச் செல்லும் ஒற்றையடிப் பாதைகள்தான் ஞாபகங்களோ?", 

"இன்னமும் இவனுக்கு லிஃப்ட்டில் செல்வது என்றால், அடிவயிற்றில் இருந்து ஒரு பயம் லேசாக எட்டிப் பார்க்கும். ஒவ்வொரு முறை லிஃப்ட்டுக்குள் நுழையும்போதும், திறந்து மூடும் சவப்பெட்டிக்குள் நுழைவதுபோலவே நினைத்துக் கொள்வான்.", 

"தூரத்தில் இருந்து பார்க்கையில் தங்க நிலவாகத் தெரிந்த சினிமாவின் மறு பக்கம் வேறுவிதமாக இருந்தது. மஞ்சள் வண்ணத்தில் தகதகத்த அந்த நிலவின் உள் பக்கம், ஆக்சிஜனற்று, தண்ணீரற்று, பள்ளம் பள்ளமாக இவன் முன் விரிந்தது. இவன் கனவின் கைகளைப் பிடித்துக்கொண்டு அந்தரத்தில் மிதந்தபடி வாய்ப்புகளைத் தேடிக் கொண்டிருந்தான்.",

"நட்சத்திரக் கால் பதிக்கும் வாத்துக் கூட்டம்", 

"காதல் தோல்விதானோ யார் அறியக்கூடும்? ஆட்டுத்தாடி புடிச்சிருக்கு" 

போன்ற வரிகளில் வரும் பிரம்மிப்பூட்டும் கற்பனைகள் எளிய மொழி வடிவத்தில் இந்த புத்தகம் நெடுக பரவிக்கிடக்கின்றன. இவையே நா. முத்துக்குமாரின் "Trademark". 

நாம் தினம்தினம் கடந்து போகும் மனிதர்களையும், நம் அருகினில் கவனித்த - கவனிக்க மறந்த தருணங்களையும், நமக்கு நெருக்கமான மொழியில், திரையில் தன் எழுத்தின் மூலம் படரவிட்ட சாமானியனின் பிரதிநிதி தான் நா. முத்துக்குமார். 

No comments:

Post a Comment

விட்டல் ராவின் "வண்ண முகங்கள்"

விட்டல் ராவின் "வண்ண முகங்கள்" நாடகத் தொழிலாளர்களின் வாழ்க்கையை பற்றிய நாவல். ஒரு நாடக கம்பெனியின் வீழ்ச்சியையும், அதை மீட்டெடுக்க...