Friday, 14 October 2022

அசோகமித்ரனின் "தண்ணீர்"

அசோகமித்ரனின் "தண்ணீர்" சமூகத்தில் வெவ்வேறு சூழ்நிலைகளால் வாழ்வில் தனிமைப்படுத்தப்பட்ட மூன்று பெண்களின் கதை. 


கனவுகளை துரத்திக்கொண்டு, சினிமா வாய்ப்புத் தேடும் பெண்ணை சினிமா உலகம் எவ்வாறு நடத்தும் என்பதற்கு சாட்சியாய் ஜமுனா. ராணுவத்திலிருக்கும் கணவனைப் பிரிந்து தனது வேலைக்காக தன் மகனையும் உறவினரிடம் விட்டுவிட்டு தனிமையில் வாழும் ஜமுனாவின் தங்கை சாயா. குடும்ப சூழ்நிலையால் நோயாளி கணவனையும், குடும்ப செலவுகளையும், சுமைகளையும் வேறு வழியின்றி தாங்கும் டீச்சரம்மா. 

கற்பு என்ற நிலையை பெண்களுக்கு மட்டும் சம்பந்தப்படுத்தும் நிர்ப்பந்தக் கற்புமுறையால் ஜமுனா சமூகத்தில் சந்திக்கும் சிக்கல்கள், அதன் விளைவாய் அவள் எடுக்கும் இடைக்கால முடிவுகள் பலவீனமானவை. ஜமுனாவின் போக்கு பிடிக்காமலும், கணவரின் இடமாற்றை எதிர்நோக்கியும் சாயா எடுக்கும் முடிவுகள் சுயநலமானவை. குழந்தையின்மையை பெண்ணின் குறையாக மட்டுமே கணிக்கும் சமூகத்தின் பார்வையால் டீச்சரம்மாவின் வாழ்வு பரிதாபமானது. 

இம்மூவரும் நகரத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை அவரவர் தேவைக்கேற்ப சமாளிக்க முற்படுகின்றனர். தண்ணீர் கிடைக்கும் பொருட்டு அவர்கள் பெறும் அனுபவங்களின் மூலம் அவர்களுள் நிகழும் உளவியல் மாற்றங்களும், அதன் விளைவாய் அவர்கள் வாழ்வில் எடுக்கும் தெளிவான முடிவுகளும் கதையை உயிர்ப்புடன் நகர்த்திச் செல்கிறது. 

தண்ணீர் கிடைக்க தெரு மக்கள் படும் பாடு, தெரு ஓர குழாயடி சண்டை, அரசாங்கத்தின் அலட்சியம், கிசுகிசுக்களின் களமாக மாறும் குழாயடி என பிண்ணனியில் நடக்கும் சம்பவங்கள் நடுத்தர மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கின்றன.

No comments:

Post a Comment

விட்டல் ராவின் "வண்ண முகங்கள்"

விட்டல் ராவின் "வண்ண முகங்கள்" நாடகத் தொழிலாளர்களின் வாழ்க்கையை பற்றிய நாவல். ஒரு நாடக கம்பெனியின் வீழ்ச்சியையும், அதை மீட்டெடுக்க...