Showing posts with label Ashokamithran Novels. Show all posts
Showing posts with label Ashokamithran Novels. Show all posts

Sunday, 29 October 2023

அசோகமித்திரனின் "ஒற்றன்"

அசோகமித்திரன் அமெரிக்காவின் ஐயோவா மாநிலத்தில் பிறநாட்டு எழுத்தாளர்களுடன் தங்கியிருந்த அனுபவங்களையும், அங்கே அவருக்கு ஏற்பட்ட பயண அனுபவங்களையும் ஒரு புனைகதையுருவில் "ஒற்றன்" எனும் நாவலாய் கொடுத்திருக்கிறார். 


பயணக் கதைகளிலும், பயணக் கட்டுரைகளிலும் அந்தந்த இடங்களின் நிலப்பரப்பு, உணவு முறை, சுற்றுலா தளங்கள், கலாச்சாரம், பருவநிலை மாற்றம், அங்குள்ள மனிதர்களின் வாழ்வியல் போன்றவையே பிராதானமாக இடம்பெறுவன. ஆனால், அசோகமித்திரன் தான் சந்தித்த மனிதர்களின் உணர்வுகளை பிரதானப்படுத்துகிறார். வெளிநாடு சென்றடைந்தவுடன் வரும் பயம்,  பதட்டம், பழக்கமில்லாதலால் வரும் தயக்கம் ஆகியவற்றை தனது சொந்த அனுபவங்களின் மூலம் நம்மிடம் கடத்துகிறார். 

பருவநிலை மாற்றம் மற்றும் பழக்கப்படாத வானிலை ஒரு மனிதனின் மனநிலை மீது ஏற்படுத்தும் தாக்கம், எளிதாக தயாரிக்கப்படும் மேலைநாட்டு உணவு வகையே ஒருவனுக்கு காலை உணவாய் என்றென்றைக்கும் மாறிப்போகும் நிலை, வெளிநாட்டு பேரூந்துகளில் பயணச்சீட்டு பெறும் முறைக்கு பழக்கப்பட ஒருவன் படும் சிரமம் போன்றவற்றின் நுட்பமான வர்ணனை அசோகமித்திரனின் எழுத்தில் வெளிபடுகிறது.

சொந்தங்களை பிரிந்து வாடும் கடினமான நாட்கள், தாய் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு புலம்பெயர்ந்தவர்களின் அவல நிலை, உலக போர்களால் சராசரி மனிதர்களுக்கு உருவாகும் நிச்சயமற்ற வாழ்வு மற்றும் கடல் கடந்து வாழும் அவர்கள் சொந்தங்களின் மனநிலை என பிரிவின் வலியை பல இடங்களில் காட்சிப்படுத்துகிறார்.

தன்னுடன் தங்கி இருந்த சக எழுத்தாளர்களின் வாழ்வில் ஏற்பட்ட சம்பவங்களையும், அவர்களின் செயல்களையும், தனிமனித உறவுகளையும் விவரிக்கும் போது moral/immoral எனச் சுட்டிக்காட்டாமல் உள்ளதை உள்ளபடி மட்டும் கூறி வாசகர்களிடம் விட்டுவிடுவது அசோகமித்திரனுக்கே உரிய பாணி. 

ஆங்கிலத்தில் நடைபெறும் உரையாடல்கள் தமிழில் குறிப்பிடப்படுவதால் பல இடங்களில் செயற்கையாய் அமைகின்றன. மற்றபடி அசோகமித்திரனின் மற்றுமொரு அழுத்தமான படைப்பு. 

Tuesday, 11 July 2023

அசோகமித்திரனின் "மானசரோவர்"

அசோகமித்திரனின் "மானசரோவர்" எனும் நாவல் கோபால், சத்யன் குமார் என இரு வேறு மனிதர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு பயணிக்கிறது. அவர்கள் இருவரின் மொழி வேறு, மதம் வேறு, பொருளாதார நிலை வேறு, அவர்கள் வாழும் நிலப்பரப்பு வேறு, குடும்ப சூழல் வேறு - அவர்களுக்கு இருக்கும் ஒரே ஒற்றுமை சினிமா துறையில் வேலை என்பதே. தொழில் ரீதியாக அறிமுகமாகும் இவர்கள் நண்பர்களாகின்றனர். அதன் பின்னர் அவர்கள் இருவரின் தனிப்பட்ட வாழ்விலும், தொழில்முறை வாழ்விலும் இந்த நட்பின் தாக்கம் தொடர்கிறது. 



இவ்விறு கதாப்பாத்திரங்களின் வாழ்வை மாற்றி அமைக்கும் சம்பவங்கள் நிகழ்கின்றன. அவற்றிலிருந்து மீளவும், தீர்வு காணவும் அவர்கள் ஆற்றும் எதிர்வினைகளும், எடுக்கும் முடிவுகளும் மனித இயல்பின் எல்லைக்குட்பட்டதாக இக்கதையில் அமைகின்றன. வாழ்வில் எதிர்படும் விளங்க முடியாத புதிர்களுக்கு விடைகளை பகுத்தறிவால் அடைய முற்பட்டு இயலாமல், கடைசியாக ஆன்மீகத்தால் அடைய விரும்பும் பெரும்பான்மை மக்களின் பிரதிபலிப்பாக இவ்விறு கதாப்பாத்திரங்கள் அமைகின்றன. கதையின் இறுதியில் கோபால், சத்யன் குமார் இடையே நடக்கும் உரையாடலில் அவர்களின் தேடல் முடிவடைகிறது. 

கதையில் வரும் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையும், அதன் விளைவாக இசுலாமிய மக்களின் நிலையும் மேம்போக்காக சொல்லப்பட்டாலும், குடும்பத்தைப் பிரிந்த ஒரு முஸ்லீமின் உளவியல் பாதிப்புகள் நுட்பமாக விவரிக்க படுகின்றன. சினிமா தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நிச்சயமற்ற வாழ்வும் இக்கதையில் பேசப்படுகிறது. 

ஆங்காங்கே சிறிது செயற்கை தன்மை தென்பட்டாலும், அசோகமித்திரனின் கதை சொல்லும் விதம் இந்நாவலை உயிர்ப்புடன் நகர்த்தி செல்கிறது. 

Friday, 28 October 2022

அசோகமித்ரனின் "கரைந்த நிழல்கள்"

வண்ணமையமான சினிமா உலகத்தின் வெளிப்புற தோற்றம் பார்வையாளனுக்கும் ரசிகனுக்கும் சினிமா துறையை பற்றி ஒரு கவர்ச்சிகரமான பிம்பத்தை இன்றும் ஏற்படுத்துகிறது. ஆனால், சினிமா துறையில் உழலும் ஊழியர்களின் இருளடைந்த வாழ்வும், அவர்களின் வலியும் தான் எதார்த்தமே. 


அசோகமித்ரனின் "கரைந்த நிழல்கள்" சினிமா துறையில் பல்வேறு மட்டங்களில் இருக்கும் மனிதர்களைப் பற்றிய கதை. படத் தயாரிப்பாளர், உதவி இயக்குனர், புரடக்க்ஷன் மேனேஜர், கோஷ்டி நடன பெண்கள், ஓட்டுநர்கள், செட் அஸிஸ்டன்ட், மற்ற கடைநிலை ஊழியர்கள் என பல மனிதர்களின் வாழ்க்கையையும், பசியையும், அவமானங்களையும், பொருளாதார நிலையையும் அப்பட்டமாக பதிவு செய்யும் நாவல். 

கோடி கணக்கில் பணம் புரளும் தயாரிப்பாளரின் சகல வசதிகள் கொண்ட வீட்டை விவரிக்கும் அதே சமயம் அவரின் நிம்மதியற்ற வாழ்வும், சிதைவுற்ற குடும்ப நிலையும், நிச்சயமற்ற வியாபாரமும் தரும் மன அழுத்தத்தையும் உள்ளது உள்ளபடி சொல்கிறது இந்நாவல். ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் வீழ்ச்சியால் வாழ்வாதாரம் இழக்கும் ஊழியர்கள்,  பின்னாளில் பிச்சை எடுக்கும் அந்த நிறுவனத்தின் சிறந்த புரடக்க்ஷன் மேனேஜர் போன்றோரின் நிற்கதியான நிலை நம் கண்முன் விரிகிறது. அந்த நிறுவனத்தின் அலுவலகம் காலி செய்யப்படும்போது, அவர்கள் கடைசியாக எடுத்த காட்சியின் கிளாப் போர்ட்டை ஒரு கடைநிலை ஊழியன் உரிமையாக பிடுங்கிக் கொள்ளும் காட்சி சிறிதும் melodramatic ஆக இல்லாமல் அசோகமித்ரனின் எழுத்தில் வெளிப்படுகிறது. இந்நாவல் 1960-களின் சினிமா பற்றிய விவரணையானாலும், தங்கள் பசியை தேநீரின் சூட்டிலும், அவமானங்களை சிகரெட்டின் கசப்பான புகையிலும் போக்கிக் கொள்ளும் உதவி இயக்குநர்களின் சித்தரிப்பு இன்றும் பொருந்தும்.  

சினிமாவில் உழலும் மனிதர்களின் தோல்வியை பற்றி பேசும் மிகச் சிறந்த நாவல் "கரைந்த நிழல்கள்". நாவலில் வரும் எந்த கதாப்பாத்திரத்திலும் தன் கருத்தை திணிக்க முற்படாமல், அவர்களின் செயல்களை மதிப்பிடாமல், அவர்களின் இயல்பை மட்டும் கூறி நமக்கு அவர்களின் உலகத்தை அறிமுகம் செய்கிறார் அசோகமித்ரன்.

Friday, 14 October 2022

அசோகமித்ரனின் "தண்ணீர்"

அசோகமித்ரனின் "தண்ணீர்" சமூகத்தில் வெவ்வேறு சூழ்நிலைகளால் வாழ்வில் தனிமைப்படுத்தப்பட்ட மூன்று பெண்களின் கதை. 


கனவுகளை துரத்திக்கொண்டு, சினிமா வாய்ப்புத் தேடும் பெண்ணை சினிமா உலகம் எவ்வாறு நடத்தும் என்பதற்கு சாட்சியாய் ஜமுனா. ராணுவத்திலிருக்கும் கணவனைப் பிரிந்து தனது வேலைக்காக தன் மகனையும் உறவினரிடம் விட்டுவிட்டு தனிமையில் வாழும் ஜமுனாவின் தங்கை சாயா. குடும்ப சூழ்நிலையால் நோயாளி கணவனையும், குடும்ப செலவுகளையும், சுமைகளையும் வேறு வழியின்றி தாங்கும் டீச்சரம்மா. 

கற்பு என்ற நிலையை பெண்களுக்கு மட்டும் சம்பந்தப்படுத்தும் நிர்ப்பந்தக் கற்புமுறையால் ஜமுனா சமூகத்தில் சந்திக்கும் சிக்கல்கள், அதன் விளைவாய் அவள் எடுக்கும் இடைக்கால முடிவுகள் பலவீனமானவை. ஜமுனாவின் போக்கு பிடிக்காமலும், கணவரின் இடமாற்றை எதிர்நோக்கியும் சாயா எடுக்கும் முடிவுகள் சுயநலமானவை. குழந்தையின்மையை பெண்ணின் குறையாக மட்டுமே கணிக்கும் சமூகத்தின் பார்வையால் டீச்சரம்மாவின் வாழ்வு பரிதாபமானது. 

இம்மூவரும் நகரத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை அவரவர் தேவைக்கேற்ப சமாளிக்க முற்படுகின்றனர். தண்ணீர் கிடைக்கும் பொருட்டு அவர்கள் பெறும் அனுபவங்களின் மூலம் அவர்களுள் நிகழும் உளவியல் மாற்றங்களும், அதன் விளைவாய் அவர்கள் வாழ்வில் எடுக்கும் தெளிவான முடிவுகளும் கதையை உயிர்ப்புடன் நகர்த்திச் செல்கிறது. 

தண்ணீர் கிடைக்க தெரு மக்கள் படும் பாடு, தெரு ஓர குழாயடி சண்டை, அரசாங்கத்தின் அலட்சியம், கிசுகிசுக்களின் களமாக மாறும் குழாயடி என பிண்ணனியில் நடக்கும் சம்பவங்கள் நடுத்தர மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கின்றன.

“Rich Blood” by Robert Bailey

A personal injury lawyer, Jason Rich, who is just out of rehab for alcoholism. His estranged sister, Jana Waters, charged with the murder of...