Showing posts with label Tamil Novels. Show all posts
Showing posts with label Tamil Novels. Show all posts

Wednesday, 18 December 2024

விட்டல் ராவின் "வண்ண முகங்கள்"


விட்டல் ராவின் "வண்ண முகங்கள்" நாடகத் தொழிலாளர்களின் வாழ்க்கையை பற்றிய நாவல். ஒரு நாடக கம்பெனியின் வீழ்ச்சியையும், அதை மீட்டெடுக்க முயற்சிக்கும் வாழ்வியல் இழந்த தொழிளாலர்களின் கதையையும் உண்மைக்கு நெருக்கமாக சித்தரிக்கிறது இந்நாவல். நாடக கம்பெனிகளுக்கிடையே நிலவும் போட்டியையும், மக்களை தங்கள் நாடகங்களுக்கு வரவழைக்க கையாளும் யுக்திகளையும் விட்டல் ராவ் விவரிக்கிறார்.   


நடிகர்கள், அரங்கம் அமைக்கும் பணியாளர்கள், ட்ராலி ஆப்பரேட்டர்கள், ஒப்பனையாளர்கள் ஆகியோரின் நிலையற்ற வாழ்வை, பொருளாதார நிலையை பிரதிபலிக்கிறது இந்நாவல். ஊர் ஊராய் அலையும் நாடக கம்பெனிக்காரர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வியை பற்றி கூட முடிவெடுக்க முடியாத சூழலில் இதர வேலைகளை தேட முற்படுகின்றனர். நாடக கம்பெனி முதலாளியாக கடனில் தத்தளிக்கும் நிலையிலும் நாடகங்களை விடாமல் இறுதி வரை பற்றிக்கொள்ளும் கிருஷ்ணப்பாவின் பிடிவாதம் ஒரு கலைஞன் தன் கலை மீது வைத்திருக்கும் பற்றை உணர்வுபூர்வமாக பேசுகிறது.

நாடக கம்பெனி நாடகம் நடத்த ஊரை தேர்ந்தெடுத்தல், நாடக மேடை அமைப்பு முறை, இடம்பெயர்ந்து செல்ல எடுக்கப்படும் நடவடிக்கைகள், பெனிஃபிட் ஷோ நடத்தும் முறை என பலவற்றை இந்நாவல் காட்சிப்படுத்தி நமக்கு நாடக உலகத்தையும், அதன் திரையின் பின்னால் இருக்கும் உழைப்பையும் அறிமுகப்படுத்துகிறது. 

நாடக நடிகர்களின் சினிமா கனவையும், வெள்ளித்திரையின் மோகத்தால் நலிவடையும் நாடக சபாக்களைப் பற்றிய ஆதங்கமும் நாவல் நெடுக ஒலிக்கிறது. சில சமயங்களில் நாடகக் குழுவிலிருக்கும் ஒரே ஒரு நபரின் எதிர்மறையான முடிவு மொத்த கம்பெனியின் மேல் உண்டாக்கும் தாக்கத்தை காட்சிப்படுத்தி எவ்வளவு நிச்சயமற்ற வாழ்வை நாடக சபாக்களில் பணிபுரிவோர் கொண்டுள்ளனர் என விவரிக்கிறார் விட்டல் ராவ்.


நாடக நடிகர்களின் மகிழ்ச்சியையும், காதலையும், கனவுகளையும், துயரங்களையும், அவர்கள் சந்திக்கும் துரோகங்களையும் பேசும் இந்நாவல் எங்குமே melodramatic ஆக மாறாமல் உள்ளதை உள்ளபடி பிரதிபலிக்கிறது.

Sunday, 25 August 2024

பட்டுக்கோட்டை பிரபாகரின் "ஒரு ஏர்கண்டிஷன்ட் குற்றம்"

பட்டுக்கோட்டை பிரபாகரின் "ஒரு ஏர்கண்டிஷன்ட் குற்றம்" எனும் குறுநாவல் இரு பெரும் கார்ப்பொரேட் கம்பெனிகளுக்கிடைய நடக்கும் business rivalry-யை மையமாக கொண்டது. 


கிங் இண்டியா என்ற கம்பெனி நஷ்டத்திலிருந்து மீள ஜப்பானிய இஞ்சினியர் ஒருவரின் ஐடியாவை வைத்து புதுரக air conditioner ஒன்றை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்த முயற்சிக்கிறது. அதன் competitor கம்பெனியான நிக்கி பிரைவேட் லிமிடெட் தன்னுடைய உளவாளியை கிங் இண்டியாவில் plant செய்ய, இரகசியங்கள் கசிகின்றன. இரு கம்பெனிகளுக்கு இடையேயான rivalry, ego clashes, reciprocation என ஒரு cat-and-mouse game ஆக நீள்கிறது இந்நாவல். 

Pattukottai Prabhakar


சற்றும் நேரத்தை கடத்தாமல் முதல் பக்கத்திலிருந்தே மையக் கதை ஆரம்பமாகிறது. எங்கும் மையக் கதையை விட்டு விலகாமல், கிளைக் கதைகளுக்குள் சிக்கிக் கொள்ளாமல் ஒரு fast paced thriller ஆக அமைகிறது இந்நாவல். ஆர்ப்பாட்டமான action காட்சிகள், chase scenes, casualties என எதுவுமின்றி அரிதாக அமையும் simple ஆன espionage thriller.

Saturday, 24 February 2024

ராஜேஷ் குமாரின் "ஒரு துளி கடல்"

க்ரைம் மற்றும் மர்ம நாவல்களில் பிரசித்தி பெற்ற ராஜேஷ் குமாரின் ஒரு social drama இந்த நாவல். இருவேறு கதைக்களம், இருவேறு சூழ்நிலை, இரண்டு பெண் கதாப்பாத்திரங்கள் என இந்நாவல் தங்குதடையற்ற non-linear narrative ஆக பயணிக்கிறது.
 

சமூகம் பெண்களுக்கு விதிக்கும் கட்டுப்பாடுகளை மீற முற்படாத பெண்ணாக பூர்ணிமா - வேறு ஒரு கதைகளத்தில் தன் சுதந்திரத்தை உணர்ந்து சமூகம் மூர்க்கமாக கடைப்பிடிக்கும் கட்டுப்பாட்டுகளிலிருந்து விடுபட முயலும் பெண்ணாக ரோகிணி. ஒரு ஆணின் சுயநலத்தால் இவ்விரு பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளும், அவற்றை சமாளிக்க அவர்கள் எடுக்கும் முடிவுகளுமே கதையின் கரு. பிரச்சினைகளை எதிர்கொள்ள பூர்ணிமா தியாகம் செய்கிறாள், ரோகிணி சமரசமில்லாமல் எதிர்த்து நிற்கிறாள். 

இவ்விரு கதைகளின் பிண்ணனியில் இரத்த தானம், உடலுறுப்பு தானம், ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம், அடுத்த தெரு மருத்துவருக்கும் multi specialty மருத்துவமணையின் மருத்துவருக்குமான ethics ரீதியான வேற்றுமை ஆகியவை பற்றிய social commentary மேலோட்டமாய் அமைந்தாலும் கதையோடு பொருந்தி அமைகிறது.


பல திருப்புமுனைகளுடன் அமையும் கதையோட்டம், பேச்சுவழக்கான வார்த்தை பிரயோகம், எளிய மொழியில் அமையும் கதைசொல்லல் முறை ஆகியவை வெகுஜன மக்களிடம் ராஜேஷ் குமாரின் நாவல்களை சேர்த்துள்ளன. அதனால், இந்நாவலில் அமையும் "over the top” காட்சிகள் கூட கதையின் ஒட்டத்தை எந்தவிதத்திலும் பாதிக்காமல் நகர்கின்றன.

Monday, 20 November 2023

சுந்தர ராமசாமியின் "திரைகள் ஆயிரம்"

சுந்தர ராமசாமியின் "திரைகள் ஆயிரம்", நாளிதழ் ஒன்றில் வெளியாகும் ஒரு வல்லுறவு சம்பவத்தின் செய்தியில் தொடங்குகிறது. பாதிக்கப்பட்ட பெண் தொடரும் வழக்கில் பல பெரும் பணக்காரர்களும், அதிகாரிகளும் பெயரிடப்படுகின்றனர். அதிகாரத்தின் ஆதிக்கத்தாலும், ஊடக சுதந்திரத்தின் துஷ்பிரயோகத்தாலும் உண்மைகள் விற்கப்படுகின்றன. எது உண்மை என்பதை எழுத்தாளன் ஒருவன் தேட முற்படுகிறான், அவனது கதையாடலில் இந்நாவல் பல திருப்புமுனைகள் கொண்டு பயணிக்கிறது. 



எது உண்மை எது பொய் என்பதை தாண்டி சமூகத்தில் பெண்களின் நிலை, அதிகாரத்தின் வரம்பு மீறல், மக்களின் ஒருதலை சார்பு மற்றும் preconceived notion, அரசாங்கம் மற்றும் பண பலம் படைத்தோர் நீதிமன்றங்களின் மீது செலுத்தும் தாக்கம் என சமகால அரசியல் மற்றும் சமூக சூழலுக்கும் பொருந்தி போகிறது இந்நாவல். 

ஒரு sensitive subject-ஐ சுற்றி பயணித்தும், அழுத்தமான வசனங்கள் இல்லாமல் தட்டையாக அமைகிறது இக்கதை.

Thursday, 2 November 2023

கி.ராஜநாராயணனின் "கிடை"

"கிடை", கி.ரா அவர்களின் கரிசல் இலக்கிய படைப்புகளில் ஒன்று. இக்குறுநாவல் ஆடு மேய்ப்பவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு பயணிக்கிறது. 

ஆடுகளை காவல் காக்கும் முறையும், அதற்கு "கிடை"யில் கடைபிடிக்கப்படும் ஒழுங்கும் விவரிக்கப்படுகின்றன. அந்த "ஒழுங்கு" சமூகத்திலும் கடைபிடிக்கப்படுவதற்கு கிராமிய அமைப்பு சாதிய அடிப்படையில் நிறுவும் விதிகளையும், அவற்றை காப்பதற்கு ஆதிக்க சாதியினர் நேரடியாகவும், மறைமுகமாகவும் எடுத்துக்கொள்ளும் பிரயத்தனமும் தான் கதையின் கரு. 


எல்லப்பன்-செவனி இருவரின் காதல், சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வினால் அடையும் முடிவை சமகால கிராமிய பிண்ணனியில் காட்சிப்படுத்துகிறது இந்நாவல். அந்த ஏற்றத்தாழ்வு சில சமயம் சாதிய அடிப்படையிலும், சில சமயம் பொருளாதார அடிப்படையிலும் அமைகிறது. முடிவில் எல்லப்பனின் வீட்டில் நடக்கும் படலமும், செவனியின் வீட்டில் நடக்கும் படலமும் சமூக முரணை பிரதிபலிக்கின்றன.

Sunday, 29 October 2023

அசோகமித்திரனின் "ஒற்றன்"

அசோகமித்திரன் அமெரிக்காவின் ஐயோவா மாநிலத்தில் பிறநாட்டு எழுத்தாளர்களுடன் தங்கியிருந்த அனுபவங்களையும், அங்கே அவருக்கு ஏற்பட்ட பயண அனுபவங்களையும் ஒரு புனைகதையுருவில் "ஒற்றன்" எனும் நாவலாய் கொடுத்திருக்கிறார். 


பயணக் கதைகளிலும், பயணக் கட்டுரைகளிலும் அந்தந்த இடங்களின் நிலப்பரப்பு, உணவு முறை, சுற்றுலா தளங்கள், கலாச்சாரம், பருவநிலை மாற்றம், அங்குள்ள மனிதர்களின் வாழ்வியல் போன்றவையே பிராதானமாக இடம்பெறுவன. ஆனால், அசோகமித்திரன் தான் சந்தித்த மனிதர்களின் உணர்வுகளை பிரதானப்படுத்துகிறார். வெளிநாடு சென்றடைந்தவுடன் வரும் பயம்,  பதட்டம், பழக்கமில்லாதலால் வரும் தயக்கம் ஆகியவற்றை தனது சொந்த அனுபவங்களின் மூலம் நம்மிடம் கடத்துகிறார். 

பருவநிலை மாற்றம் மற்றும் பழக்கப்படாத வானிலை ஒரு மனிதனின் மனநிலை மீது ஏற்படுத்தும் தாக்கம், எளிதாக தயாரிக்கப்படும் மேலைநாட்டு உணவு வகையே ஒருவனுக்கு காலை உணவாய் என்றென்றைக்கும் மாறிப்போகும் நிலை, வெளிநாட்டு பேரூந்துகளில் பயணச்சீட்டு பெறும் முறைக்கு பழக்கப்பட ஒருவன் படும் சிரமம் போன்றவற்றின் நுட்பமான வர்ணனை அசோகமித்திரனின் எழுத்தில் வெளிபடுகிறது.

சொந்தங்களை பிரிந்து வாடும் கடினமான நாட்கள், தாய் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு புலம்பெயர்ந்தவர்களின் அவல நிலை, உலக போர்களால் சராசரி மனிதர்களுக்கு உருவாகும் நிச்சயமற்ற வாழ்வு மற்றும் கடல் கடந்து வாழும் அவர்கள் சொந்தங்களின் மனநிலை என பிரிவின் வலியை பல இடங்களில் காட்சிப்படுத்துகிறார்.

தன்னுடன் தங்கி இருந்த சக எழுத்தாளர்களின் வாழ்வில் ஏற்பட்ட சம்பவங்களையும், அவர்களின் செயல்களையும், தனிமனித உறவுகளையும் விவரிக்கும் போது moral/immoral எனச் சுட்டிக்காட்டாமல் உள்ளதை உள்ளபடி மட்டும் கூறி வாசகர்களிடம் விட்டுவிடுவது அசோகமித்திரனுக்கே உரிய பாணி. 

ஆங்கிலத்தில் நடைபெறும் உரையாடல்கள் தமிழில் குறிப்பிடப்படுவதால் பல இடங்களில் செயற்கையாய் அமைகின்றன. மற்றபடி அசோகமித்திரனின் மற்றுமொரு அழுத்தமான படைப்பு. 

Saturday, 29 July 2023

ராஜேஷ்குமாரின் "வெல்வெட் குற்றங்கள்"

2014-ல் காணாமல் போன மலேஷிய விமானம் MH370 இன்று வரை மர்மமாக உள்ள நிலையில், ராஜேஷ்குமாரின் "வெல்வெட் குற்றங்கள்" அந்த சம்பவத்தைச் சுற்றி ஒரு புனைவாக அமைந்துள்ளது. அந்த விமானம் விபத்துக்குள்ளானதா? இல்லை, கடத்தப்பட்டதா? அதில் பயணம் செய்த பயணிகளின் நிலை என்ன? இச்சம்பவத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? இச்சம்பவம் வல்லரசு நாடுகளின் விஞ்ஞான போட்டிகளின் விளைவா? என்ற கேள்விகளுக்கு விடை தேடுவதாக கதையின் போக்கு அமைந்துள்ளது. 



"Thriller” நாவல்களுக்கே உள்ள பாணியில் கதையின் மாந்தர்களில் யார் உண்மையின் பக்கம், யார் தீமையின் பக்கமென கணிக்க முடியாத திருப்பங்களுடன் இந்நாவல் வாசகனின் ஆர்வத்தை தக்க வைக்க முயல்கிறது. கேள்வி படாத பல அறிவியல் முன்னேற்றங்கள், தொழில்நுட்பங்கள் இந்நாவலில் பிரதானமாக இடம்பெறுவது, சிலவற்றை நமக்கு அறிமுகப்படுத்தினாலும், தேவைக்கு அதிகமாக அமைந்து சில இடஙகளில் சலிப்பு தட்டுகிறது. 

ஏராளமான கதாப்பாத்திரங்கள் வலம் வந்தும், கதையை விட்டு எங்கும் விலகி செல்லாமல் பயணிக்கிறது இந்நாவல். ஒவ்வொறு அத்தியாயத்தின் முடிவிலும் போடப்படும் முடிச்சு, அதை தொடர்ந்து கதையில் அமையும் காட்சிகளின் வேகம் ஆகியவையே இந்நாவலின் பலம். கதையின் climax கலவையான விமர்சனங்களை பெறலாம்.

ராஜேஷ்குமார் style-ல் ஒரு நல்ல thriller, a light read. 

Monday, 26 June 2023

ஜி. நாகராஜனின் "குறத்தி முடுக்கு"

ஜி. நாகராஜனின் "குறத்தி முடுக்கு" பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களைப் பற்றிய குறுநாவல். குறத்தி முடுக்கு எனும் கற்பனையாக உருவாக்கப்பட்ட விலைமாதர் தெருவில், விலைமாதரின் வாழ்வை உணர்வுபூர்வமாக சொல்கிறது இந்நாவல். செயற்கையாக இருட்டடிக்கப்பட்ட சாலையாக குறத்தி முடுக்கின் அறிமுகத்தில் துவங்கி, காவல் நிலையத்தில் விலைமாதர் மீது கட்டவிழ்க்கப்படும் வன்முறை வரை மிக நுட்பமான வர்ணனை இந்நாவலில் இடம்பெறுகிறது.



நாவலின் பெண் கதாப்பாத்திரங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பின்கதை அமைகிறது. எந்த ஒரு கதாப்பாத்திரத்தின் மீதும் தன் கருத்தை திணிக்க முற்படாமல், அவர்களின் செயல்களை மதிப்பிடாமல், அவர்களின் இயல்பையும் அனுபவங்களையும் மட்டும் பேசுகிறது இந்நாவல். இப்பெண்களின் வாழ்வில் காதலுக்கும் இடமுண்டு, வாழ்க்கை முழுவதும் உறவில்லாமல் வாடி ஒரு குழந்தைக்காக ஆசைப்படும் ஏக்கத்துக்கும் இடமுண்டு என நமக்கு அவர்களின் உலகத்தை அறிமுகம் செய்கிறார் ஜி. நாகராஜன்.

நம் சமூகத்தின் பார்வையில் பாலியல் தொழிலாளியான ஒரு பெண்ணின் மீது சுமத்தப்படும் கண்ணியமற்றவள் எனும் பிம்பம், கற்பை பெண்களுக்கு மட்டும் உரித்தாக்கும் நிர்பந்த கற்பு முறையின் விளைவே. கற்பை புனிதப்படுத்தும் சமூகத்தின் பார்வையிலிருந்து விலகி, பாலியல் தொழிலை மற்றுமொரு தொழிலாக பார்க்கும் மனநிலையை இந்நாவல் கொடுக்கும். 

Mareesan - a slow burn suspense thriller backed by a brilliant Vadivelu and an effortless FaFa

Mareesan is a suspense thriller that has Vadivelu and Fahadh Faasil sharing screen space for the second time. Velayudham (Vadivelu), an Alzh...