Showing posts with label Karisal literature. Show all posts
Showing posts with label Karisal literature. Show all posts

Thursday, 2 November 2023

கி.ராஜநாராயணனின் "கிடை"

"கிடை", கி.ரா அவர்களின் கரிசல் இலக்கிய படைப்புகளில் ஒன்று. இக்குறுநாவல் ஆடு மேய்ப்பவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு பயணிக்கிறது. 

ஆடுகளை காவல் காக்கும் முறையும், அதற்கு "கிடை"யில் கடைபிடிக்கப்படும் ஒழுங்கும் விவரிக்கப்படுகின்றன. அந்த "ஒழுங்கு" சமூகத்திலும் கடைபிடிக்கப்படுவதற்கு கிராமிய அமைப்பு சாதிய அடிப்படையில் நிறுவும் விதிகளையும், அவற்றை காப்பதற்கு ஆதிக்க சாதியினர் நேரடியாகவும், மறைமுகமாகவும் எடுத்துக்கொள்ளும் பிரயத்தனமும் தான் கதையின் கரு. 


எல்லப்பன்-செவனி இருவரின் காதல், சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வினால் அடையும் முடிவை சமகால கிராமிய பிண்ணனியில் காட்சிப்படுத்துகிறது இந்நாவல். அந்த ஏற்றத்தாழ்வு சில சமயம் சாதிய அடிப்படையிலும், சில சமயம் பொருளாதார அடிப்படையிலும் அமைகிறது. முடிவில் எல்லப்பனின் வீட்டில் நடக்கும் படலமும், செவனியின் வீட்டில் நடக்கும் படலமும் சமூக முரணை பிரதிபலிக்கின்றன.

Monday, 12 December 2022

கி. இராஜநாராயணனின் "கோபல்ல கிராமம்"

கி.ரா. எழுதிய "கோபல்ல கிராமம்" நிசாம் ஆட்சியின் பிடியிலிருந்து தப்பிக்க புலம்பெயரும் ஒரு தெலுங்கு பேசும் நாயக்கர் குடும்பத்தைப் பற்றிய கதை. புலம்பெயர்ந்து தெற்கே வரும் அந்த குடும்பம் கரிசல் காட்டை எரித்து "கோபல்லா" எனும் கிராமத்தை உருவாக்குகின்றனர்.

நாயக்கர் குடும்பம் புலம்பெயர்ந்த காரணம், புலம்பெயர அவர்கள் மேற்கொண்ட நீண்ட பயணம், வழியில் அவர்கள் சந்தித்த மனிதர்கள் ஆகியவையே பிரதானமாய் இந்நாவலில் சிறுசிறு நிகழ்வுகளாக தொகுக்கப்பட்டுள்ளன. இதன் நடுவே ஒரு கொலை குற்றமும் இடம்பெறுகிறது - ஆனால் நாவலின் போக்கில் அது பின்னுக்குத் தள்ளப்படுகிறது. நாவலின் இறுதியில் அந்த கொலை குற்றமும், கொலையாளிக்கான தண்டனையும் முற்று பெற்றாலும் கிளைக் கதைகளின் ஆதிக்கத்தால் அக்கதை துண்டிக்கப்பட்டு தாக்கம் ஏதும் ஏற்படுத்தவில்லை. 


19-ம் நூற்றாண்டின் இடையில், ஆங்கிலேய ஆட்சியின் ஆரம்பக் காலத்தில், கிராம முக்கியஸ்தர்களாக இருக்கும் சில நாயக்கர்கள் எவ்வாறு விக்டோரியா ராணியின் ஆட்சியை ஏற்கிறார்கள் என்பதை விவரிக்கிறது இந்நாவல். விக்டோரியா மகாராணியை இராணி மங்கம்மாவுடன் ஒப்பிட்டு ஏற்பதும், பின்னர் அந்த மனநிலை மாறி கிராமத்தில் சுதந்திர வேட்கை துளிர் விடுவதுடன் முடிகிறது இந்நாவல். 

கிராமம் உருவாக காட்டை தீக்கு இரையாக்கும் முறை, தீவட்டி கொள்ளையர்களின் திருடும் முறை - அவர்களை சமாளிக்க நாயக்கர்கள் கையாளும் திட்டங்கள், வெட்டுக்கிளி படையெடுப்பு ஆகியவை பற்றிய வர்ணனை அந்த காட்சிகளை நம் கண்முன் விரிக்கிறது. 

நிசாம் ஆட்சியில் உயர்சாதி நாயக்கர் குடும்ப பெண்ணைக் கண்டு மயங்கும் இசுலாமிய மன்னன் அவளை மாட்டுக்கறி சாப்பிடச் சொல்வது போன்ற பொதுமைப்படுத்தும் காட்சிகள், குற்றவாளிக்கு தரப்படும் கொடுமையான கழுவில் ஏற்றும் தண்டனையை ஏற்க மறுக்கும் மனது மொத்த கிராமத்தில் ஒரு இராமபக்தனிடம் மட்டும் இருப்பதாக காட்சிப்படுத்துதல் ஆகியவை எதார்த்தமாக அமையாமல் திணிக்கப்படுகின்றன. 

கதைக்கான களமிருந்தும் தொடர்ச்சியான கதைப் போக்கில்லாமல் தொகுக்கப்பட்ட நிகழ்வுகளை மட்டும் பிராதான படுத்தியதால் இந்நாவல் நிறைவான வாசிப்பாக அமையவில்லை. 

பட்டுக்கோட்டை பிரபாகரின் "குற்றச் சுரங்கம்"

ஒரு அரசியல்வாதி. ஒரு உயர்நிலை போலீஸ் அதிகாரி. இவர்களை மிரட்டும் ஒரு blackmailer. முதலமைச்சருக்கு அடுத்த நிலையில் இருக்கும் அமைச்சருக்கும், ஒ...