Monday, 12 December 2022

கி. இராஜநாராயணனின் "கோபல்ல கிராமம்"

கி.ரா. எழுதிய "கோபல்ல கிராமம்" நிசாம் ஆட்சியின் பிடியிலிருந்து தப்பிக்க புலம்பெயரும் ஒரு தெலுங்கு பேசும் நாயக்கர் குடும்பத்தைப் பற்றிய கதை. புலம்பெயர்ந்து தெற்கே வரும் அந்த குடும்பம் கரிசல் காட்டை எரித்து "கோபல்லா" எனும் கிராமத்தை உருவாக்குகின்றனர்.

நாயக்கர் குடும்பம் புலம்பெயர்ந்த காரணம், புலம்பெயர அவர்கள் மேற்கொண்ட நீண்ட பயணம், வழியில் அவர்கள் சந்தித்த மனிதர்கள் ஆகியவையே பிரதானமாய் இந்நாவலில் சிறுசிறு நிகழ்வுகளாக தொகுக்கப்பட்டுள்ளன. இதன் நடுவே ஒரு கொலை குற்றமும் இடம்பெறுகிறது - ஆனால் நாவலின் போக்கில் அது பின்னுக்குத் தள்ளப்படுகிறது. நாவலின் இறுதியில் அந்த கொலை குற்றமும், கொலையாளிக்கான தண்டனையும் முற்று பெற்றாலும் கிளைக் கதைகளின் ஆதிக்கத்தால் அக்கதை துண்டிக்கப்பட்டு தாக்கம் ஏதும் ஏற்படுத்தவில்லை. 


19-ம் நூற்றாண்டின் இடையில், ஆங்கிலேய ஆட்சியின் ஆரம்பக் காலத்தில், கிராம முக்கியஸ்தர்களாக இருக்கும் சில நாயக்கர்கள் எவ்வாறு விக்டோரியா ராணியின் ஆட்சியை ஏற்கிறார்கள் என்பதை விவரிக்கிறது இந்நாவல். விக்டோரியா மகாராணியை இராணி மங்கம்மாவுடன் ஒப்பிட்டு ஏற்பதும், பின்னர் அந்த மனநிலை மாறி கிராமத்தில் சுதந்திர வேட்கை துளிர் விடுவதுடன் முடிகிறது இந்நாவல். 

கிராமம் உருவாக காட்டை தீக்கு இரையாக்கும் முறை, தீவட்டி கொள்ளையர்களின் திருடும் முறை - அவர்களை சமாளிக்க நாயக்கர்கள் கையாளும் திட்டங்கள், வெட்டுக்கிளி படையெடுப்பு ஆகியவை பற்றிய வர்ணனை அந்த காட்சிகளை நம் கண்முன் விரிக்கிறது. 

நிசாம் ஆட்சியில் உயர்சாதி நாயக்கர் குடும்ப பெண்ணைக் கண்டு மயங்கும் இசுலாமிய மன்னன் அவளை மாட்டுக்கறி சாப்பிடச் சொல்வது போன்ற பொதுமைப்படுத்தும் காட்சிகள், குற்றவாளிக்கு தரப்படும் கொடுமையான கழுவில் ஏற்றும் தண்டனையை ஏற்க மறுக்கும் மனது மொத்த கிராமத்தில் ஒரு இராமபக்தனிடம் மட்டும் இருப்பதாக காட்சிப்படுத்துதல் ஆகியவை எதார்த்தமாக அமையாமல் திணிக்கப்படுகின்றன. 

கதைக்கான களமிருந்தும் தொடர்ச்சியான கதைப் போக்கில்லாமல் தொகுக்கப்பட்ட நிகழ்வுகளை மட்டும் பிராதான படுத்தியதால் இந்நாவல் நிறைவான வாசிப்பாக அமையவில்லை. 

No comments:

Post a Comment

விட்டல் ராவின் "வண்ண முகங்கள்"

விட்டல் ராவின் "வண்ண முகங்கள்" நாடகத் தொழிலாளர்களின் வாழ்க்கையை பற்றிய நாவல். ஒரு நாடக கம்பெனியின் வீழ்ச்சியையும், அதை மீட்டெடுக்க...