Wednesday, 18 December 2024

விட்டல் ராவின் "வண்ண முகங்கள்"


விட்டல் ராவின் "வண்ண முகங்கள்" நாடகத் தொழிலாளர்களின் வாழ்க்கையை பற்றிய நாவல். ஒரு நாடக கம்பெனியின் வீழ்ச்சியையும், அதை மீட்டெடுக்க முயற்சிக்கும் வாழ்வியல் இழந்த தொழிளாலர்களின் கதையையும் உண்மைக்கு நெருக்கமாக சித்தரிக்கிறது இந்நாவல். நாடக கம்பெனிகளுக்கிடையே நிலவும் போட்டியையும், மக்களை தங்கள் நாடகங்களுக்கு வரவழைக்க கையாளும் யுக்திகளையும் விட்டல் ராவ் விவரிக்கிறார்.   


நடிகர்கள், அரங்கம் அமைக்கும் பணியாளர்கள், ட்ராலி ஆப்பரேட்டர்கள், ஒப்பனையாளர்கள் ஆகியோரின் நிலையற்ற வாழ்வை, பொருளாதார நிலையை பிரதிபலிக்கிறது இந்நாவல். ஊர் ஊராய் அலையும் நாடக கம்பெனிக்காரர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வியை பற்றி கூட முடிவெடுக்க முடியாத சூழலில் இதர வேலைகளை தேட முற்படுகின்றனர். நாடக கம்பெனி முதலாளியாக கடனில் தத்தளிக்கும் நிலையிலும் நாடகங்களை விடாமல் இறுதி வரை பற்றிக்கொள்ளும் கிருஷ்ணப்பாவின் பிடிவாதம் ஒரு கலைஞன் தன் கலை மீது வைத்திருக்கும் பற்றை உணர்வுபூர்வமாக பேசுகிறது.

நாடக கம்பெனி நாடகம் நடத்த ஊரை தேர்ந்தெடுத்தல், நாடக மேடை அமைப்பு முறை, இடம்பெயர்ந்து செல்ல எடுக்கப்படும் நடவடிக்கைகள், பெனிஃபிட் ஷோ நடத்தும் முறை என பலவற்றை இந்நாவல் காட்சிப்படுத்தி நமக்கு நாடக உலகத்தையும், அதன் திரையின் பின்னால் இருக்கும் உழைப்பையும் அறிமுகப்படுத்துகிறது. 

நாடக நடிகர்களின் சினிமா கனவையும், வெள்ளித்திரையின் மோகத்தால் நலிவடையும் நாடக சபாக்களைப் பற்றிய ஆதங்கமும் நாவல் நெடுக ஒலிக்கிறது. சில சமயங்களில் நாடகக் குழுவிலிருக்கும் ஒரே ஒரு நபரின் எதிர்மறையான முடிவு மொத்த கம்பெனியின் மேல் உண்டாக்கும் தாக்கத்தை காட்சிப்படுத்தி எவ்வளவு நிச்சயமற்ற வாழ்வை நாடக சபாக்களில் பணிபுரிவோர் கொண்டுள்ளனர் என விவரிக்கிறார் விட்டல் ராவ்.


நாடக நடிகர்களின் மகிழ்ச்சியையும், காதலையும், கனவுகளையும், துயரங்களையும், அவர்கள் சந்திக்கும் துரோகங்களையும் பேசும் இந்நாவல் எங்குமே melodramatic ஆக மாறாமல் உள்ளதை உள்ளபடி பிரதிபலிக்கிறது.

No comments:

Post a Comment

விட்டல் ராவின் "வண்ண முகங்கள்"

விட்டல் ராவின் "வண்ண முகங்கள்" நாடகத் தொழிலாளர்களின் வாழ்க்கையை பற்றிய நாவல். ஒரு நாடக கம்பெனியின் வீழ்ச்சியையும், அதை மீட்டெடுக்க...