Sunday, 9 October 2022

கவிஞர் யுகபாரதியின் "இசை அல்லது இளையராஜா"

கவிஞர் யுகபாரதியின் "இசை அல்லது இளையராஜா" எனும் நூல் இளையராஜா அவர்களின் இசையை புதியதோர் கண்ணோட்டத்தில் அணுகுகிறது. இளையராஜாவின் இசைப் புலமையையும், திரையிசைப் பாடல்களிலும், பிண்ணணி இசையிலும் அவர் நிகழ்த்தும் அற்புதங்களையும் பல இயக்குனர்களின் மேடைப் பேச்சுகளின் மூலம் அறிந்திருப்போம். 

இளையராஜா அவர்கள் பாடல் வரிகளுக்கு தரும் முக்கியத்துவத்தையும், அவரது இசையில் கேட்கும் வார்த்தைகளின் தெளிவையும் பல பாடல்களில் உணர்ந்திருப்போம். அதன் காரணம் இளையராஜாவுக்கு இருந்த மொழிப் புலமை. அந்த மொழிப் புலமையையே இந்நூல் எடுத்துக்காட்டுக்களுடன் கையாள்கிறது. 


தமிழ் வார்த்தைகளின் சந்தத்தை வைத்துக்கொண்டு அவர் கட்டமைத்த இசை வடிவத்தையும், அதை சிரமமில்லாமல் கிராமத்தின் கடைக்கோடி ரசிகனுக்கும் சென்றடையும் வகையில் கடத்தியதையும் நமக்கு பரிச்சயமான பாடல்களைக் கொண்டு விவரிக்கிறார் கவிஞர். 

பாடலாசிரியராக இளையராஜாவின் வார்த்தை பிரயோகம், மற்ற பாடலாசிரியர்களின் வரிகளில் அர்த்தம் பிரழாமல் செய்யும் மாற்றங்கள், அதில் அவர் புகுத்தும் எளிமை ஆகியவற்றை கவிஞர் அவர் ரசித்த பாடல்களிலிருந்தும், அவருடன் பணியாற்றிய அனுபவத்திலிருந்தும் பகிர்கிறார். 

எளிய மக்களிடம் தனது இசைப் புலமையைக் காட்டி மிரள வைக்காது, அவர்கள் தேவைக்கேற்றவாறு, கதை நடக்கும் நிலப்பரப்பின் வட்டார மொழியின் வாயிலாக உணர்வுகளை கடத்துவதே இளையராஜாவின் அசாத்திய திறமை.

ஒரு பாடலாசிரியர் ஒரு இசையமைப்பாளரின் மொழிப் புலமையை பற்றி எழுதுவது இளையராஜா திரையிசையில் நிகழ்த்திய புரட்சிக்கும், யுகபாரதியின் திறந்த மனதிற்கும் - தெளிவான சிந்தனைக்கும் சான்று.

No comments:

Post a Comment

விட்டல் ராவின் "வண்ண முகங்கள்"

விட்டல் ராவின் "வண்ண முகங்கள்" நாடகத் தொழிலாளர்களின் வாழ்க்கையை பற்றிய நாவல். ஒரு நாடக கம்பெனியின் வீழ்ச்சியையும், அதை மீட்டெடுக்க...