டி. செல்வராஜ் எழுதிய "தோல்" எனும் நாவல் தோல் பதனிடும் தொழிலாளர்களின் வாழ்வியலை பதிவு செய்து, நம்மை அவர்களின் உலகுக்கு இழுத்துச் செல்கிறது. அடிமை வாழ்விலிருந்து விடுபட அதிகார வர்க்கத்திற்கு எதிராகவும், சாதிய அடக்குமுறைக்கு எதிராகவும் அறவழி போராட்டங்கள் மூலமாக எவ்வாறு தொழிலாளர்கள் தங்கள் அடிப்படை உரிமைகளை மீட்டெடுக்கின்றனர் என்பதே இந்நாவலின் மையக்கரு.
பல்வேறு ஊர்களிலிருந்து பிழைப்புக்காக வந்த மக்கள் முறி எழுதி கொடுத்து தோல் ஷாப்புகளில் சேர்வது வழக்கம். வாங்கிய கடனையும் அடைக்க முடியாமல், கூலி அனைத்தும் அன்றாட தேவைகளுக்கும், சாராயத்துக்கும் தீரும் நிலையில் வட்டியும் கட்ட முடியாமல், அடிமைகளாக மரணிப்பதே இவர்களின் வாழ்க்கை. சாராயம் அவர்கள் உடல் வலியைப் போக்கிக்கொள்ள அத்தியாவசியமாகிறது. தோல் பதனிடும் முறையால் அவர்கள் நோயுற்று மரணிப்பதும் சகஜமான ஒன்று. ஊருக்குள் மாடு செத்து விழுந்தால் வந்து தூக்க கீழ்சாதியினரே பணிக்கப்படுவர். தோல் ஷாப்புத் தொழிலாளர்களும் அதே சாதியினர் தான். வர்க்க பேதம், சாதிய அடக்குமுறை இரண்டையும் இம்மக்கள் அனுபவிக்கும் அவலம். தீண்டாமையின் உச்சமாக காற்று கூட சேரியின் வாயிலாக போகாமல் ஊருக்குள் வருமளவுக்கான திட்டமிடல் ஊரையும் சேரியையும் பிரிப்பதில் இருந்திருக்கிறது.
தோல் ஷாப் ஒன்றில் அபலைப் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் முதலாளியின் மைத்துனனை ஓசேப்பு எனும் தொழிலாளி தாக்குகிறான். முதலாளியின் அடியாட்கள் அவனைத் தேட ஆரம்பிக்க, வெளியூருக்கு தப்பிச் செல்ல எத்தனித்து ஓசேப்பு இரயில் நிலையத்தின் பொது கழிப்பறையில் மறைகிறான். பராமரிப்பில்லாத அந்த கழிவறையில் தேங்கி நிற்கும் மலத்தை சாக்கடையில் இருந்து வெளிவந்த பன்றி சுவைக்கிறது. அந்த காட்சியும், அந்த நாற்றமும் அவனை வெளியே துரத்தியிருக்க வேண்டும். அது தான் வாசகனின் எதிர்ப்பார்ப்பும். ஆனால், மலக்கழிவின் வாடை குடலைப் பிடுங்கினாலும், தோல் ஷாப்பின் ரத்தம் கலந்த நிணக்கழிவின் அழுகல் வாடையை விட மோசமாக அவனுக்குத் தெரியவில்லை. இந்த ஒரு காட்சி தோல் ஷாப்பு வேலையின் கடினத்தையும், கொடூரத்தையும் விளக்கி நம்மை கலங்கடிக்கிறது.
அடியாட்களிடம் பிடிபடும் ஓசேப்புக்கு ஆதரவாக வரும் கிருத்துவ பாதிரியாருடன் சேர்ந்து தொழிலாளர்கள் திரள்வதே தங்கள் முதலாளிகளுக்கெதிராக அவர்கள் எழுப்பும் முதல் குரல். தோல் ஷாப்பில் நடக்கும் உழைப்புச் சுரண்டலுக்கும், பாலியல் துன்புறுத்தலுக்கும் எதிராக குரல் கொடுக்கும் தொழிலாளர்களை ஒன்றிணைக்க தொழிற்சங்க அமைப்புகள் உருவாகின்றன. அவை அவர்களின் ஊதிய உயர்வு, முறி ரத்து ஆகியவையோடு அவர்கள் சுயமரியாதையையும் மீட்டெடுக்க உதவுகின்றன. அனைவரும் ஒரு அமைப்பாய் அதிகார அத்துமீறல்களையும் மீறி முதலாளித்துவத்தையும், சாதிய முரணையும் சட்டத்தின் துணை நின்று எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்பதே நாவல் நெடுக பரவிக் கிடக்கிறது.
உயர்சாதி வக்கீல் சங்கரன், சுப்புவாடன் போன்ற துப்புரவு பணியாளர்கள், ஓசேப்பு போன்ற தோல் ஷாப் பணியாளர்கள் சங்கத்தில் இணைந்த பிறகு அவர்களுள் நிகழும் உளவியல் ரீதியான மாற்றங்களை பற்றிய விவரணை தொழிற்சங்கங்களின் பலத்தை பிரதிபலிக்கிறது. அனைவரையும் சமமாய் பார்த்தும் சேரி தெருவின் சகதிக்காடான நிலை, தோல் பதனிடும் மற்றும் மலம் அள்ளும் பணியாளர்கள் மீது வீசும் நாற்றம், அவர்களின் அழுக்குத் தோற்றம் அனைத்துக்கும் பழக சங்கரனுக்கு காலம் தேவைப்டுகிறது. சுப்புவாடன் போன்ற துப்புரவு தொழிலாளர்கள் தங்கள் சாதியின் விளைவாக வரும் தாழ்வு மனப்பான்மையிலிருந்து வெளிவர முடியாமல் சமூகத்தில் நிலவும் சாதிய கட்டமைப்பு தடுக்கிறது. ஆயிரமாயிரம் வருடங்களாக இவ்விருவர் நடுவே உடைபடாத மதில்களை "தோழர்" என்ற ஒற்றைச் சொல் உடைத்தெரிகிறது.
நாவலில் தனிமனித நாயக சாகசங்கள் ஏதும் இடம்பெறாது, உண்மைக்கு நெருக்கமாக, உணர்வு பூர்வமாக அமைகிறது கதையின் போக்கு. தொழிலாளர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பே நாவலின் நாயகன், அமைப்புக்கான கொள்கையின் துணையோடு நடத்தப்படும் சட்ட போராட்டங்களே சாகசங்கள்.
பொதுவுடைமை இயக்கங்களின் தேவையை உணர்த்தும் இந்நாவல் பல இடங்களில் மாக்ஸிம் கார்கியின் "தாய்" நாவலை நினைவூட்டுகிறது.