2014-ல் காணாமல் போன மலேஷிய விமானம் MH370 இன்று வரை மர்மமாக உள்ள நிலையில், ராஜேஷ்குமாரின் "வெல்வெட் குற்றங்கள்" அந்த சம்பவத்தைச் சுற்றி ஒரு புனைவாக அமைந்துள்ளது. அந்த விமானம் விபத்துக்குள்ளானதா? இல்லை, கடத்தப்பட்டதா? அதில் பயணம் செய்த பயணிகளின் நிலை என்ன? இச்சம்பவத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? இச்சம்பவம் வல்லரசு நாடுகளின் விஞ்ஞான போட்டிகளின் விளைவா? என்ற கேள்விகளுக்கு விடை தேடுவதாக கதையின் போக்கு அமைந்துள்ளது.
"Thriller” நாவல்களுக்கே உள்ள பாணியில் கதையின் மாந்தர்களில் யார் உண்மையின் பக்கம், யார் தீமையின் பக்கமென கணிக்க முடியாத திருப்பங்களுடன் இந்நாவல் வாசகனின் ஆர்வத்தை தக்க வைக்க முயல்கிறது. கேள்வி படாத பல அறிவியல் முன்னேற்றங்கள், தொழில்நுட்பங்கள் இந்நாவலில் பிரதானமாக இடம்பெறுவது, சிலவற்றை நமக்கு அறிமுகப்படுத்தினாலும், தேவைக்கு அதிகமாக அமைந்து சில இடஙகளில் சலிப்பு தட்டுகிறது.
ஏராளமான கதாப்பாத்திரங்கள் வலம் வந்தும், கதையை விட்டு எங்கும் விலகி செல்லாமல் பயணிக்கிறது இந்நாவல். ஒவ்வொறு அத்தியாயத்தின் முடிவிலும் போடப்படும் முடிச்சு, அதை தொடர்ந்து கதையில் அமையும் காட்சிகளின் வேகம் ஆகியவையே இந்நாவலின் பலம். கதையின் climax கலவையான விமர்சனங்களை பெறலாம்.
ராஜேஷ்குமார் style-ல் ஒரு நல்ல thriller, a light read.