"முனியாண்டி விலாஸ்" என கவிதை தொகுப்பிற்கு பெயரிட்டதே இப்புத்தகத்தைப் படிக்கும் ஆர்வத்தை தூண்டியது. இன்று முனியாண்டி விலாஸ் நலிந்து பல கிளைகளை மூடி வந்தாலும், எஞ்சி இருக்கும் கிளைகள் மேற்கத்திய உணவை இங்கே பரப்பி வரும் கேஎஃப்சி-களையும், மெக்டோனால்ட்ஸ்-களையும் எதிர்த்து நிற்கும் தனித்துவம் கொண்டவை. அதே தனித்துவம் இக்கவிதை தொகுப்பில் தென்படுகிறதா?
இத்தொகுப்பில் இடம்பெறும் கவிதைகள் உணவு, உடை, உறவுகள், உணவகம், மழை, கல்வி நிலையங்கள், காதல், காமம், சமூக நிலை, சாதி, அரசியல் ஆகியவை பற்றிய கருத்துகளுடன் கவிஞரின் கருத்தியலையும் தாங்கி நிற்கின்றன. அரசியல் தலைவர்களை பற்றிய விமர்சனங்களுடன் தேர்தல் அரசியல் நகர்வுகளையும், வாக்காளர் மனநிலையையும் அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றன சில கவிதைகள். அரசியல் சார்ந்த கவிதைகளை தாண்டி உணவு, காதல் பற்றிய கவிதைகளிலும் அவற்றை சுற்றிய அரசியல் இடம்பெற்று சமகால சமூக சூழலை பிரதிபலிக்கிறது.
பொது இடங்களில் சாதிய பாகுபாட்டையும், வர்க்க வேறுபாட்டையும் தூக்கிப் பிடிக்கும் நிலையை உணவகங்கள் பற்றிய கவிதை பேசுகிறது. அசைவ உணவின் மணம் பல கவிதைகளில் வீசுகிறது. அடுக்கக வாழ்க்கை பற்றிய கவிதை அடுக்கு மாடி வீடுகளில் வாழும், நிற்க கூட நேரமில்லாமல் ஓடும் மனிதர்களின் அவல நிலையை பேசுகிறது.
பல கவிதைகள் முற்போக்கு சிந்தனைகளை வெளிப்படுத்தினாலும், ஆங்காங்கே சில கவிதைகள் பொதுவான மனநிலையில் தென்படுகின்றன.
நம்மைச் சுற்றி நிகழும், நாம் கவனித்த-கவனிக்க மறந்த தருணங்களை நமக்கு நெருக்கமான மொழியில் இப்புத்தகம் வழங்குகிறது.
என்னை கவர்ந்த சில வரிகள் -
அடுக்கக வாழ்க்கை
"மனித வாடையைத் தவிர்க்கலாம்
தனித்திருக்கலாம்
அழைப்பு மணிக்கு மட்டும்
கதவைத் திறந்தால் போதும்
சொந்தங்கள் வந்தாலும்
இரண்டொரு நாளில் ஊருக்குக்
கிளம்பிவிடுவார்கள்
கோழிச் சண்டையோ
குழாயடிச் சண்டையோ வராது
பாதங்கள் தரையில் பாவாத
கால் நகங்களில் அழுக்கேறாத
சவத்திற்கு ஒப்பான
ஒரு வாழ்வை மேற்கொள்ள
அடுக்கக வாழ்க்கை
அற்புத வாழ்க்கை"
முனியாண்டி விலாஸ்
"முனியாண்டி விலாஸ்
ஓர் அசைவ உணவகம். ஆனாலும்
அங்கே, சைவத்திற்கு இடமில்லாமல்
போவதில்லை
முனியாண்டி விலாஸ்
எளிய மனிதர்களின் கூடாரம்
பகட்டும் பம்மாத்தும் கொண்டவர்களை
அங்கே பார்க்க முடியாது
நெடிய காத்திருப்பிற்குப் பின்தான்
வயிறு நிறையும் என்கிற தந்திரங்களை
முனியாண்டி விலாஸ் செய்வதில்லை
அங்கே, ஆங்கில மெனுக்கார்டு கிடையாது
ஆர்டர் எடுத்துக்கொள்ளபவர்,நம்மிலும்
வறிய வாழ்வை மேற்கொள்பவராயிருப்பார்
மேசைத்துடைப்பவர் மேலாளர் என்னும்
பாகுபாடுகள் அங்கே இல்லை
எல்லாரும் எல்லா வேலைகளையும்
இழுத்துப்போட்டு செய்வர்
அங்கே,
சீர்காழியும் சிதம்பரம் ஜெயராமனும்
கார நெடிகளுக்கு ஏற்ப தங்கள் கமகங்கள் மெருகேற்றிக்கொள்வர்
கொல்வது பாவிமாயிற்றே என்று
அங்கே யாரும் குமைவதில்லை
...
முனியாண்டி விலாஸுக்குப் பழகிய நாக்கு
கிர்ல்டு சிக்கனுக்கோ தந்தூரி சிக்கனுக்கோ அலையாது
இறக்குமதி செய்யப்பட்ட
சமையற்குறிப்புகளை அங்கே உள்ள மாஸ்டர்கள் பழகிக்கொள்ள விரும்புவதில்லை
...
முனியாண்டி விலாஸ்
தன்னிடம் பசியாறிப்போகும் அனைவரையும் முனியாண்டியாகவே பார்க்கிறது
கணினிக்கும் டிஸ்யூ பேப்பருக்கும்
மயங்காத முனியாண்டி விலாஸ் தன்
அசலான முகத்தை எதற்காகவும் மாற்றிக்கொள்வதில்லை
முனியாண்டிகளுக்காக
முனியாண்டிகளால் நடந்தப்படும்
முனியாண்டி விலாஸ்
ஒரு சமூகத்தின் செயல்பாடு
ஒரு சமூகத்தின் அடைபாளம்
ஒரு சமூகத்தின் சங்கிலித்தொடர்
முனியாண்டிகளாய்த் தங்களை
உணராதவர்கள் அங்கே வருவதில்லை முனியாண்டிகளை உணராதவர்களும்
அங்கே வருவதில்லை"
உணவகம்
"அசைவ உணவகத்தில்
எக்ஸ்ட்ரா வாங்காதவன்
தலித்தாக நடத்தப்படுவான்
மெல்லிய போதையோடு
வருகிறவர்களுக்கு
ராஜமரியாதை
ஒரே ஒரு ஆம்லெட் என்றதும்
முகம் சுருங்கி
யாருக்கோ வைப்பதுபோல
வைத்துவிட்டுப் போகிறவனுக்குத்
தெரியாது
நான் வேறொரு உணவகத்தில்
கோப்பை கழுவுபவனென்று."
வேதாள தேவதை
"அதிகாரம் கைக்குவந்த பிறகு
ஒவ்வொரு
தேவதையும் வேதாளமாகிவிடுவதாகப் பேசிக்கொள்கிறார்கள்
அவர்களால்
நம்பவே முடியாத இன்னொன்று :
தம்மால் வென்ற வேதாளம்
தம்மை வீழ்த்துவதற்கு தேவதையாக
வேடமிட்ட விஷயம்தான்."
ஒரு சின்ன கற்பனை
"கடவுள் என்று சொல்லப்படுபவர்
நம் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்தால்
எப்படி இருக்கும்?
இரவல் வாங்கலாம்
தேவையெனில் கடன் கேட்கலாம்
எங்கே காணோமே எனலாம்
வீட்டில் விருந்தாளியா எனச் சிரிக்கலாம்
இன்று விடுமுறையா
உங்கள் லைனிலாவது கரண்ட் இருக்கிறதா
பேப்பர் பார்த்தீர்களா என
எதையாவது கேட்டுக்கொண்டே
இருக்கலாம்
பக்கத்தில் இருக்க வேண்டிய ஒருவர்
உள்ளே இருந்து ஒரு பிரயோசனமும்
இல்லை."