திரு. ஜான் சுந்தரின் "நகலிசைக் கலைஞன்" மேடைக் கலைஞர்களின் வாழ்க்கையை உணர்வுபூர்வமாக சொல்லும் ஒரு அனுபவத் தொகுப்பு.
இசையும், இசைக்கருவிகளும் வாழ்வாகவும், வாழ்வாதாரமாகவும் ஆகிப்போன மெல்லிசைக் கச்சேரிக் கலைஞர்களின் சிரிப்பு, கண்ணீர், கோபம், பசி, கேலி, கொண்டாட்டம், வலி, பயணம் என அனைத்தையும் அவர்களின் அன்றாட வாழ்வின் நிகழ்வுகளை வைத்து எதார்த்தமான மொழிநடையில் விவரிக்கிறார் எழுத்தாளர்.
மேடைக் கலைஞர்களின் பொருளாதார நிலையால் அவர்களின் குடும்பச் சிக்கல்களையும், சோகங்களையும், அவற்றை அவர்கள் இசையாலும், கிண்டல்-கேலியாலும் கடக்க முற்படுவதையும் துள்ளியமாக விவரித்து நம்மை அவர்கள் உலகிற்கு இழுத்துச் செல்கிறார்.
கச்சேரி ஏற்பாட்டிலும், ரிகர்சல்களிலும், மேடைகளிலும் நடக்கும் குழப்பங்களையும், தவறுகளையும், சமாளிப்புகளையும் நகைச்சுவையுடன் எடுத்துக்கூறுகிறார் எழுத்தாளர். பாடல் வரிகளை மறப்பதும், அதற்கு பதில் வேறு வரிகளை மாற்றி பாடுவதும், அப்படிப் பாடும்போது நா பிறழ்வால் ஏடாகூடமாவதும், அவற்றை சமாளிக்க முடியாமல் கலைஞர்கள் திண்டாடுவதும் போன்ற காட்சிகளின் விவரனையில் நம்மை கண்கள் நனைய சிரிக்க வைக்கிறார் ஜான் சுந்தர்.
பல இடங்களில் வரும் இசைஞானி இளையராஜா, எஸ்.பி.பி ஆகியோரின் பாடல்களால் இந்நூல் அவர்களுக்கான "tribute" ஆக அமைகிறது. கச்சேரிக் கலைஞர்கள் இளையராஜாவையும், எஸ்.பி.பியையும் ஏதோ அவர்கள் கூட்டாளிகள் போல பேசிக்கொள்ளும் உரையாடல்கள் எதார்த்தத்தின் உச்சம்.
புத்தகத்தின் நெடுக பல இடங்களில் நம்மை மறந்து சிரிக்க வைத்ததே ஜான் சுந்தரின் வெற்றி. நிறைவான அனுபவம் இந்த வாசிப்பு.