Tuesday, 18 January 2022

ஸ்டாலின் ராஜாங்கம் எழுதிய "தமிழ் சினிமா - புனைவில் இயங்கும் சமூகம்"

திரு. ஸ்டாலின் ராஜாங்கம் எழுதிய இப்புத்தகம் தமிழ் சினிமாவில் சாதிய ரீதியான சித்தரிப்புகளைப் பற்றிய விரிவான ஒரு ஆய்வு. தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக படமாக்கபடும் வெளிப்படையான மற்றும் மறைமுகமான சாதி ரீதியான காட்சிகளை மேற்கோள் காட்டி அவற்றை சமூக சூழலோடு பொருத்திப் பார்க்கிறது இந்த ஆய்வு.

சாதிய அமைப்பு அழுத்தமாக வேரூன்றியிருக்கும் கிராமங்களையும், தென் தமிழக வட்டாரங்களையும் திரைப்படங்கள் எவ்வாறு பிரதிபலிக்கின்றன என்பதுடன் சாதிய அமைப்பை எப்படிப் பேணிக் காக்கின்றன என்பதையும் விவரிக்கிறது. பெரும்பாலும் எதார்த்தம் என ஊடகங்களாலும் விமர்சகர்களாலும் கூறப்படும் படங்கள் உண்மையில் இடைநிலை ஆதிக்க சாதியின் வழக்கங்களை கிராமிய வழக்கம் என பொதுமைப்படுத்தி நிருவிச் செல்வதையும், அவற்றை மீண்டும் மீண்டும் உற்பத்திச் செய்து அதையே எதார்த்தம் எனும் பிம்பமாய் கட்டமைப்பதையும், அவை இடைநிலை சாதிகளுக்குத் தரும் உளவியல் ரீதியான பலத்தையும் எளிமையாய் விளக்குகிறது.

சுய சாதி விமர்சனமின்றி எடுக்கப்படும் இப்படங்களில் ஒடுக்கப்பட்டோரின் நிலை உண்மைக்குப் புறம்பாகவோ வசதிக்கேற்ப மொளனப்படுத்தியோ கடத்திச் செல்வதும் வழக்கம் என எடுத்துக்காட்டுகளுடன் வரும் கட்டுரைகள் பார்வையாளனாக நம்மையும், நம் ரசனையையும் சுய மதிப்பீடு செய்யத் தூண்டுகின்றன. தியேட்டர்களுக்குச் சென்று விசிலடித்து, ஆர்ப்பரித்து, சில்லறைகளை சிதறவிட்டுப் பார்த்த காட்சிகளுக்குப் பின்னால் சுய சாதி பெருமையும், சாதிய குறியீடுகளும் இருப்பதை எழுத்தாளர் விளக்கி அந்தக் காட்சிகளில் வரும் நாயக சாகசங்களை, நரம்பு புடைக்கப் பேசும் வசனங்களை அடித்து உடைத்தெறிகிறார்.

இப்புத்தகத்தில் வரும் கட்டுரைகளில் ஆகச் சிறந்த கட்டுரை வடிவேலுவின் நகைச்சுவை பற்றிய பார்வை. அதிகார அடையாளங்கள் மற்றும் சாதிய அமைப்பு மீது எவ்வாறு வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் தாக்குதல் செய்கின்றன என்பதை ஆராய்கிறது. படத்தில் வரும் சாகச காட்சிகள் நம்பகத்தன்மையோடும், அதே சமயம் நகைச்சுவைக் காட்சிகள் நம்ப முடியாதவையாகவும் பார்க்கும் மனநிலை இங்கே உருவாகியிருப்பது அபத்தம் என தெள்ளத் தெளிவாய் காட்டுகிறது. உண்மையில் நகைச்சுவைக் காட்சிகளில் வரும் பாத்திரங்களே உண்மையான, எதார்த்தத்திற்கு நெருக்கமான பாத்திரங்கள். அதை வடிவேலு தன் எதார்த்தமான உடல்மொழியாலும், வட்டார வழக்காலும் திரையில் சிரமமின்றி கடத்துகிறார். இதை மீண்டும் நமக்கு வசனங்களையும், காட்சிகளையும் எடுத்துக்காட்டி நினைவூட்டுகிறது இக்கட்டுரை. இக்கருத்தை அப்பட்டமாக பிரதிபலிக்கும் தாமோ நாகபூஷனம் என்பவர் வரைந்த அட்டைப்படம் அட்டகாசம்.

இறுதியாக அண்மையில் வந்த தலித்துகளின் வாழ்வை பதிவு செய்து அவர்கள் குரலாய் ஒலித்த சில படங்களை விமர்சனத்திற்கு உட்படுத்தி, அதே சமயம் அவை சாதிய சினிமாக்களில் இருந்து எவ்வாறு விலகி நிற்கின்றன என்பதைக் காட்டுகிறார்.

இந்தப் புத்தகம் வாசித்தது ஒரு புது அனுபவம்.

No comments:

Post a Comment

விட்டல் ராவின் "வண்ண முகங்கள்"

விட்டல் ராவின் "வண்ண முகங்கள்" நாடகத் தொழிலாளர்களின் வாழ்க்கையை பற்றிய நாவல். ஒரு நாடக கம்பெனியின் வீழ்ச்சியையும், அதை மீட்டெடுக்க...