அசோகமித்திரன் அமெரிக்காவின் ஐயோவா மாநிலத்தில் பிறநாட்டு எழுத்தாளர்களுடன் தங்கியிருந்த அனுபவங்களையும், அங்கே அவருக்கு ஏற்பட்ட பயண அனுபவங்களையும் ஒரு புனைகதையுருவில் "ஒற்றன்" எனும் நாவலாய் கொடுத்திருக்கிறார்.
பயணக் கதைகளிலும், பயணக் கட்டுரைகளிலும் அந்தந்த இடங்களின் நிலப்பரப்பு, உணவு முறை, சுற்றுலா தளங்கள், கலாச்சாரம், பருவநிலை மாற்றம், அங்குள்ள மனிதர்களின் வாழ்வியல் போன்றவையே பிராதானமாக இடம்பெறுவன. ஆனால், அசோகமித்திரன் தான் சந்தித்த மனிதர்களின் உணர்வுகளை பிரதானப்படுத்துகிறார். வெளிநாடு சென்றடைந்தவுடன் வரும் பயம், பதட்டம், பழக்கமில்லாதலால் வரும் தயக்கம் ஆகியவற்றை தனது சொந்த அனுபவங்களின் மூலம் நம்மிடம் கடத்துகிறார்.
பருவநிலை மாற்றம் மற்றும் பழக்கப்படாத வானிலை ஒரு மனிதனின் மனநிலை மீது ஏற்படுத்தும் தாக்கம், எளிதாக தயாரிக்கப்படும் மேலைநாட்டு உணவு வகையே ஒருவனுக்கு காலை உணவாய் என்றென்றைக்கும் மாறிப்போகும் நிலை, வெளிநாட்டு பேரூந்துகளில் பயணச்சீட்டு பெறும் முறைக்கு பழக்கப்பட ஒருவன் படும் சிரமம் போன்றவற்றின் நுட்பமான வர்ணனை அசோகமித்திரனின் எழுத்தில் வெளிபடுகிறது.
சொந்தங்களை பிரிந்து வாடும் கடினமான நாட்கள், தாய் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு புலம்பெயர்ந்தவர்களின் அவல நிலை, உலக போர்களால் சராசரி மனிதர்களுக்கு உருவாகும் நிச்சயமற்ற வாழ்வு மற்றும் கடல் கடந்து வாழும் அவர்கள் சொந்தங்களின் மனநிலை என பிரிவின் வலியை பல இடங்களில் காட்சிப்படுத்துகிறார்.
தன்னுடன் தங்கி இருந்த சக எழுத்தாளர்களின் வாழ்வில் ஏற்பட்ட சம்பவங்களையும், அவர்களின் செயல்களையும், தனிமனித உறவுகளையும் விவரிக்கும் போது moral/immoral எனச் சுட்டிக்காட்டாமல் உள்ளதை உள்ளபடி மட்டும் கூறி வாசகர்களிடம் விட்டுவிடுவது அசோகமித்திரனுக்கே உரிய பாணி.
ஆங்கிலத்தில் நடைபெறும் உரையாடல்கள் தமிழில் குறிப்பிடப்படுவதால் பல இடங்களில் செயற்கையாய் அமைகின்றன. மற்றபடி அசோகமித்திரனின் மற்றுமொரு அழுத்தமான படைப்பு.