Tuesday, 24 January 2023

சி.சு. செல்லப்பாவின் "வாடிவாசல்”

சி.சு. செல்லப்பாவின் "வாடிவாசல்" தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை மையமாக கொண்ட குறுநாவல். கடந்த சில வருடங்களாக தொலைக்காட்சிகளிலும், சமூக வலைதளங்களிலும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் நேரலை வந்துவிட்டது. அதற்கு முன், மறுநாள் செய்தித்தாள்களும், இரவு நேர செய்திகளும் மட்டுமே ஜல்லிக்கட்டு பற்றிய வர்ணனையை நம்மிடம் வழங்கின. இந்த வர்ணனைகளும், ஜல்லிக்கட்டு பற்றிய கதைகளும் நம்மிடையே அந்த விளையாட்டை நேரில் பார்வையிட வேண்டும் எனும் ஆவலை ஒரு கட்டத்தில் தூண்டியிருக்கக்கூடும். சி.சு. செல்லப்பா அவர்களின் எழுத்தில் அந்த பார்வையாளனின் அனுபவத்தை தருகிறது இந்நாவல். 


களத்தில் மாடு அணையும் வீரர்களின் தயார் நிலை, மிருக வெறியுடன் சீறி வரும் காளைகளின் வகைகள், அவற்றின் பலம்-பலவீனம், மாடு வெளிவரும் குறுகிய பாதையான திட்டிவாசலின் அமைப்பு, முக்கிய பிரமுகர்களுக்கான மேடை அமைப்பு, வீரர்கள் கையாளும் யுக்தி, காளையின் எதிர்பாரா அசைவுகளை சமாளிக்கும் அவர்களின் சாமர்த்தியம் ஆகியவற்றை பற்றிய நுட்பமான விவரணை இடம்பெற்றுள்ளது. 

சமூகத்தின் சாதியக் கட்டமைப்பின் பிரதிபலிப்பாய் ஜல்லிக்கட்டு களத்தில் ஒரே சாதிக்குள் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை சுட்டிக்காட்டுகிறது இந்நாவல். அதிகாரம் மற்றும் சாதிய ஆதிக்கத்தின் அடையாளமாய் வரும் ஜமீன்தார் - சாதிய அமைப்பு மற்றும் வர்கக பேதம் தரும் தாழ்வு மனப்பான்மையின் அடையாளமாய் வரும் பிச்சி இவர்களிடையே நிகழும் உரையாடல் மிக நுட்பமாய் சமூகத்தின் நிலையை பிரதிபலிக்கிறது. 

ஜமீன்தாரின் காரி எனும் காளையை வென்ற வீரனே இல்லை என்ற நிலையில் பிச்சி காரியை எதிர்த்து களத்தில் நிற்கிறான். மற்ற மாடு அணைபவர்கள் காரியின் போக்கு அறிந்து அஞ்சி விலகி நிற்கின்றனர். ஆனால் பிச்சிக்கோ காரியை எதிர்க்க காரணம் இருக்கிறது - அதனுடன் அவனுக்கு இருக்கும் கடந்த கால தொடர்பு. பிச்சி - காரி மோதலை களத்தின் பரபரப்புடன் சி.சு.செல்லப்பாவின் எழுத்து வெளிப்படுத்துகிறது. 

ஜல்லிக்கட்டை பிரதானமாக கொண்டு பயணிக்கும் இந்நாவல் கிராமங்களில் நிலவும் கடவுள் வழிபாடு, சாதிய பெருமை, கிராம மக்களிடையே தோன்றும் இனம்புரியா பாசம் ஆகியவற்றையும் பேசுகிறது. 

வெற்றிமாறன் இயக்கத்தில் திரைப்படமாக உருவாகும் இந்நாவல் இதே தாக்கத்தை ஏற்படுத்தினால் வெற்றி தான்.

No comments:

Post a Comment

விட்டல் ராவின் "வண்ண முகங்கள்"

விட்டல் ராவின் "வண்ண முகங்கள்" நாடகத் தொழிலாளர்களின் வாழ்க்கையை பற்றிய நாவல். ஒரு நாடக கம்பெனியின் வீழ்ச்சியையும், அதை மீட்டெடுக்க...