Saturday, 28 January 2023

வண்ணநிலவனின் "கம்பா நதி"

நதிக்கரை மக்களை கதையின் மாந்தர்களாக்கி அவர்களின் வாழ்வையும், மனநிலையையும் பதிவு செய்யும் "கம்பா நதி", அவர்கள் எதிர்கொள்ளும் தனிமனித பிரச்சினைகள், சமூகச் சிக்கல்கள் மூலம் சமூக எதார்த்தவாதத்தை நிறுவிச் செல்கிறது.

திருநெல்வேலியை கதையின் களமாக்கி அந்த நிலப்பரப்பை தன் எழுத்தின் மூலம் நம் கண்முன் கொண்டுவருகிறார் வண்ணநிலவன். அங்கே உள்ள மத வழிப்பாட்டுத் தளங்கள், நதிக்கரை, குறுகிய தெருக்கள், பேரூந்து வழித்தடங்கள், கடைத்தெரு, வீடுகளின் அமைப்பு ஆகியவற்றின் துள்ளியமான வர்ணனையுடன் வட்டார வழக்கில் வரும் உரையாடல்களை சேர்த்து உள்ளதை உள்ளவாரே சித்தரிக்கிறார். சினிமாவும் அவர்களின் வாழ்வின் அங்கமாய் மாறிப் போனதையும் காண்கிறோம்.



குடும்ப உறவுகளின் விரிசல்களையும், உடைந்த குடும்பங்களில் பெண்களின் நிலையையும், அவர்கள் சந்திக்கும் பொருளாதார நெருக்கடியும், தனிமனித ஒழுக்கமின்றி சுயநலத்துடன் அலையும் சங்கரன் பிள்ளையின் குடும்பம் காட்டுகிறது. சமூக அமைப்பு விதிக்கும் நெறி பெண்களுக்கு மட்டும் பொருந்துவதை சரி எனும் ஏற்கும் பொதுவான மனநிலை பெண்களிடம் இருப்பதை சிவகாமி, மரகதம் கதாப்பாத்திரங்கள் பிரதிபலிக்கின்றன. சிவகாமி தன் விருப்பு வெறுப்புகளை மறைத்து குடும்பச் சூழலை சரிகட்ட வேலைக்குச் செல்கிறாள். மரகதமோ "ஆண் என்றால் அப்படித்தான்" என்று ஏற்றுக்கொள்ளும் நிலையில் இருக்கிறாள். 

வேலையில்லா திண்டாட்டத்தின் தீவிரத்தையும், சிபாரிசில்லாமல் வேலைதேடும் போராட்டத்தையும்  கோமதி, பாப்பையா கதாப்பாத்திரங்களின் காத்திருப்பு பிரதிபலிக்கிறது. பலமுறை ஆட்தேர்வில் ஏமாற்றமடையும் பாப்பையா மூடநம்பிக்கைகளை துணைக்குத் தேடி அதிலும் ஏமாறுகிறான். பாப்பையா இறுதியில் திடீரெனக் கிட்டும் ராணுவ வாய்ப்பை ஏற்கிறான். கோமதியோ தன் விருப்பம் கேட்காமல் அமையும் திருமண ஏற்பாட்டுக்கு மௌனமாக சம்மதிக்கிறாள். இங்கேயும் கூட வேலையின்மையின் அடுத்தக்கட்டம் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறு வேறாக அமைகிறது. சமகால அரசியல் சூழல், அரசு அலுவலகங்களின் ஆட்தேர்வு முறை, மனிதர்கள் மூடநம்பிக்கைகளில் தஞ்சம் அடையும் வழக்கம் ஆகியவை கேள்விக்குள்ளாகின்றன.

இதைத்தவிர சமூகத்தின் சாதிய மனநிலை, அரசு அதிகாரிகளின் அதிகார வரம்புமீறல் ஆகியவையும் உள்ளது உள்ளபடி பேசப்படுகின்றன. 

மொழிநடையில் மிளிரும் இந்நாவல் அதிகமான கதாப்பாத்திரங்களை அறிமுகப்படுத்தி ஆங்காங்கே கிளைக்கதைகளில் சிக்கிக்கொள்கிறது. அதையும் மீறி தாக்கத்தை ஏற்படுத்த தவரவில்லை.

No comments:

Post a Comment

விட்டல் ராவின் "வண்ண முகங்கள்"

விட்டல் ராவின் "வண்ண முகங்கள்" நாடகத் தொழிலாளர்களின் வாழ்க்கையை பற்றிய நாவல். ஒரு நாடக கம்பெனியின் வீழ்ச்சியையும், அதை மீட்டெடுக்க...