Sunday 27 December 2015

இப்படிக்கு சிவன்

தற்செயலா? தன் செயலா?

காலை 10 மணி அளவில், காந்தி  மண்டபம் சாலை...

திங்கள் முதல் வெள்ளி வரை, இந்நேரத்தில் இச்சாலை மகிழுந்துகளாலும், இருசக்கர வாகனங்களாலும் நிரம்பி, அவை கீழே புகையைக் கக்கி, மேலே ஒலியைத் துப்பிக் கொண்டிருக்கும் காட்சியை நாம் காணலாம். கக்கலும், துப்பலும், அவை நடுவில் மக்களும் என விளங்கும் சாலை இன்றோ காலியாய்க் கிடந்தது. அங்கே மிகப் பிரம்மாண்டமாய் உயர்ந்து நின்றது "அண்ணா நூற்றாண்டு நூலகம்". நூலகத்தின் நுழைவு வாயிலிலிருந்து, இரண்டு நபர்கள் வெளியே வந்தனர்.

"தமிழ் இலக்கிய வரலாறு - இந்த புக் (book) படிச்சேன் டா இன்னிக்கு.. சங்க காலத் தமிழ் இலக்கியங்களோட ஹிஸ்டரியத் (history) தொகுத்துருக்காங்க.." என்றான் சூர்யா.

"டேய்... எவன் டா இவன்? ஹிஸ்டரி ஆம் ஹிஸ்டரி... நீ தனியா போகும் போதே டவுட் (doubt) ஆனேன். I was reading this Dan Brown novel - Digital Fortress. Fast paced. இப்போ தான் இண்டர்மிசன் (intermission) வர போய் இருக்கு, டைம் போறதே தெரில.." என்று தான் படித்த ஆங்கில நாவல் ஒன்றின் பெருமையை அளந்து விட்டான் தேவா.

"ஹிஸ்டரியும் முக்கியம் தான். இன்னிக்கு நடக்கறது நாளைக்கு ஹிஸ்டரி. ஹிஸ்டரி நால தான் இன்னிக்கு நீ சொல்ற digital fortress ல வர கம்ப்யுடேர்ஸ் எல்லாம். சார்லஸ் பாபேஜ் (charles babbage) ஒரு ஹிஸ்டரி, அவர் கண்டுப்பிடிச்சது ஒரு ஹிஸ்டரி"

"இப்படியே பேசிட்டு இரு... கவெர்மெண்ட் ஆர்ட்ஸ் காலேஜ் ல ஹிஸ்டரி வாத்தியார் வேல கெடச்சுரும்..." என்றுக் கிண்டல் அடித்தான் தேவா.

"போடா டேய் போடா... நீ எல்லாம் செத்தாலும் புரிஞ்சுக்க மாட்ட..."

<<பீப்... பீப்...>> தேவாவின் கைப்பேசி ஒலித்தது. தேவா தன் பாக்கெட்டில் இருந்துக் கைப்பேசியை எடுத்தான். ஒரு மெசேஜ் (message) வந்திருந்தது.

"வரலாற்றைப் பழித்து வரலாறாகும் வரிசையின் ஆதி நீ தான்...
அழிப்பவன் நான்! உன்னை அழிக்க வருகிறேன்!"
- கடவுள்
செய்தியைப் படித்தவுடன் தேவா இடி இடியெனச் சிரித்தான். "ஹாஹாஹாஹாஹா... மெசேஜப் பாரேன்... செம காமெடி... வழ வழ கொழ கொழனு.... வரலாற்றைப் பழித்து?? ஹாஹாஹா..."

"என்னடா கடவுள்னு போட்ருக்கு?" என்று சிறிதாக சிரித்தான் சூர்யா.

"ஹாஹாஹா... ஆமா மச்சா... என் பேரு வரலாறு-ல வருமாம், என்ன அழிக்க வரானாம்" என்று ஏளனம் செய்துக்கொண்டே நடைமேடையை (platform / sidewalk) விட்டுக் கீழே ரோட்டில் இறங்கினான் தேவா.

அவன் இறங்கிய அடுத்த கணமே, பின்னால் வேகமாக வந்துக் கொண்டிருந்தக் கார் (car) ஒன்று அவன் பின்னால் வந்துச் சரட்டென்றுப் பிரேக் (brake) பிடித்து நின்றது. மகிழ்வூந்தின் ஓட்டுனர் மட்டும் பிரேக் அழுத்தாமல் இருந்திருந்தால் கன நேரத்தில் தேவாவிற்கு விபரீதம் நடந்திருக்கும். சூர்யா அத்ரிச்சியில் உறைந்தான். வண்டி நின்ற விதத்தைப் பார்த்து தேவா ரோட்டுத் தரையில் விழுந்திருந்தான்.

"ஏய் பொறம்போக்கு... சிரிச்சுனே போயிருப்ப... என் வண்டி தான் கெடச்சுசா?" என்றுத் திட்டினான் வண்டியின் டிரைவர். பயத்தால் ஏதும் பேசாது அவன் முகத்தையே நோக்கினான் தேவா. சூர்யா அவன் கையைப் பிடித்து மீண்டும் அவனை நடைமேடையில் ஏற்றினான். கார் விரைந்தது. சுற்றி வேடிக்கைப் பார்த்த மக்களும் கலைந்துச் சென்றனர். சிறிது நேரம் அமைதியாய் நடைமேடையின் நுனியில் அமர்ந்திருந்தத் தேவா எழுந்தான். தன் கையிலிருந்தக் கைப்பேசியின் பொத்தான்களை வேகமாக அழுத்தி, மீண்டும் அந்த மெசேஜைப் படித்தான். அவன் செய்கைகளை கவனித்துக் கொண்டே நின்றான் சூர்யா.

"சிரிக்க வேண்டிய விஷயம் இல்ல மச்சா... ஏதோ நடக்குது"

"சீ! ஏதோக் கொயின்சிடென்ஸ் டா!" என்றான் சூர்யா. 

"இல்ல டா.  நெனச்சுப் பாரு. நம்ம ரெண்டு பேரும் ஹிஸ்டரி பத்திப் பேசினோம். அத ஒருத்தன் மெசேஜ்-ல அனுப்புறான், வார்ன் (warn) பண்றான். அதே மாறி சாவு என்னத் தேடி வருது... ஜஸ்ட் மிஸ் மச்சி... போயிருப்பேன்..." என்றான் தேவா.

அவன் முகத்திலிருந்த பயத்தையும் குழப்பத்தையும் பார்த்தான் சூர்யா. அவன் நிலையைப் புரிந்துக் கொண்டான். அவனுக்கும் தேவா சொன்னதில் அர்த்தம் இருப்பதாகவேத் தெரிந்தது. தேவாவின் கையிலிருந்து கைப்பேசியை வாங்கி மீண்டும் செய்தியைப் படித்தான் சூர்யா. "இதுல ஒன்னும் இல்ல... மொட்டையா கடவுள்-னு இருக்கு... நம்பர் இல்ல... ஹ்ம்ம்..."

<<பீப் பீப்>> தேவாவின் கைப்பேசியில் இரண்டாவது செய்தி!

அழிப்பவன் யார்?

தேவாவும் சூர்யாவும் கைப்பேசியில் வந்திருந்த செய்தியை உற்று நோக்கினர்.
"அழிப்பவன் உன்னை அடையும் முன்,
  அழிப்பவன் வாசல் நீ அடைந்து,
  பிழைக்கத் தேடு வழி!"
- கடவுள்  
தேவாவின் மனதில் பயம் நீங்கி வெறுப்பும் கோபமும் தோன்றியது. எனினும் அவனைப் பின்தொடர்பவனை அவன் பிடிக்க வேண்டும் என நினைத்தான். சுற்றும் முற்றும் பார்த்தான். சந்தேகம் எழும் விதமாக எவரும் இல்லை. சூர்யா செய்தியை மீண்டும் மீண்டும் படித்தான். இரண்டு செய்திகளையும் மாற்றி மாற்றிப் படித்தான். முதலில் வந்த நம்பரும் இப்போது வந்த இரண்டாவது மெசேஜின் நம்பரும் வேறு வேறு. மொபைல் நெட்வொர்க் ஹாக்கிங்?
 
"அழிப்பவன்... கடவுள்..." என்று முணுமுணுத்தான் தேவா.

"என்ன சொன்ன?" என்ற சூர்யாவின் கேள்வி தேவாவை யோசனையிலிருந்து வெளியே இழுத்தது.

"ஹான்?" என்றான்.

"அழிப்பவன்... கடவுள்... யெஸ்!" என்றுச் சொல்லிக் குதித்தான் சூர்யா.

"என்ன?"

"அழிப்பவன்... கடவுள்... அழிக்கும் கடவுள் யாரு?"

"சிவன்...?" என்று யோசனையோடு இழுத்தான் தேவா.

"யெஸ்!"

"சிவனா? கடவுளா? என்னடா சொல்ற...." என்று குழம்பினான் தேவா.

"அது இல்ல டா... நமக்குக்  கெடச்ச மொதக் (முதல்) குளு (clue) டெசிபெர் (decipher) பண்ணியாச்சு... உன்னை அழிக்க வரும் கடவுள் சிவன்... இப்போ ரெண்டாது clue-வ பாப்போம்... அழிப்பவன் உன்னை அடையும் முன், அழிப்பவன் வாசல் நீ அடைந்து, பிழைக்கத் தேடு வழி. Done!" என்று சொடுக்குப் போட்டான் சூர்யா.

"என்னது?"

 "டேன் பிரவுன்" - நக்கலாகக் கூறினான் சூர்யா.

ஏதோ பேச வந்த தேவாவைக் கை உயர்த்தி நிறுத்தி "அழிப்பவன்... சிவன்... சிவன் உன்னை அடையும் முன்...இல்ல இல்ல... அழிப்பவன் வாசல் நீ அடைந்து... நம்மள ஏதோ ஒரு எடத்துக்கு வழிக் காட்டுது..." என்று புதிரை உடைக்க முற்பட்டான் சூர்யா.

"அழிப்பவன் வாசல்னா என்னவா இருக்கும்?" ஒன்றும் புரியாது நின்றான் தேவா.

"நாம இருக்குறது மெட்ராஸ் ல... அழிப்பவன் வாசல்... அழிப்பவன் - சிவன்... சிவனுடைய வாசல்... கைலாசம்... மத்தியக் கைலாஷ்!" என்றுப் புதிரை உடைத்தான் சூர்யா.

"ஒரு வேள... அதுவா இல்லேனா...?" என்று தேவா சந்தேகத்துடன் கேட்டான்.

"History, you will be..! இருந்துச்சுனா... History, we will be..!"


கைலாசம் சொல்லும் விலாசம்!

எண்ணிக்கையில் பூதாகரம் எடுத்து நிற்கும் ஐ.டி (IT) மக்களின் சன்னதிக்குப் பிரகாரமாக அமைந்திருக்கும் ஐ.டி எக்ஸ்பிரஸ் ஹைவேயின் (I.T Express Highway) ஆதியில் அமைந்திருப்பது "மத்தியக் கைலாஷ்". மத்தியக் கைலாஷ் கோவிலின் எதிரில் உள்ளக்  "கஸ்தூரிபா நகர்" பறக்கும் இரயில் நிலையத்தின் படிகளில் அமர்ந்திருந்தான் சூர்யா. அவனுக்கு முன் குறுக்கும் நெடுக்கும் நடந்துக் கொண்டிருந்தான் தேவா. தேவாவின் கைப்பேசி சூர்யாவின் கையிலிருந்தது.
"வர சொன்னான் சரி... வந்தப் பெறகு? அத எங்க சொன்னான்?" கேட்டன் தேவா.

"இப்போ சொல்வான்!"

<<பீப்... பீப்...>> தேவாவின் கைப்பேசியை உயர்த்திக் காட்டினான் சூர்யா. தேவா சூர்யாவிற்கு அருகில் விரைந்தான்.

"உன் பாவம் கழுவ, வழி உண்டு! அவ்வழியே பெயராய் பெற்றதே வழிக் காட்டும்"
- கடவுள்
செய்தியைச் சூர்யா உன்னிப்பாக கவனித்தான். தேவாவோ அடுத்த கட்ட நடவடிக்கையைத் தீர்மானித்தான். அடையாளம் தெரியாத அந்த "அழிப்பவனை"த் தேடிப் பிடிப்பதே இந்த விளையாட்டிற்கு முற்றுப்புள்ளி என்றுத் தீர்மானித்த தேவா, சூர்யாவிற்கானத் திட்டத்தையும் வகுத்தான்.

"இப்போ இந்தக் குறிய ஒடைக்கணும்" என்று எழுந்தான் சூர்யா.

"அது மட்டும் இல்ல..."

 "வேற என்ன?" என்றுச் சற்று ஆச்சர்யத்துடன் கேட்டான் சூர்யா.

"சிவன் யாருன்னுக் கண்டுப்பிடிக்கணும்..."

பாவம் கழுவும் வழி!

"உன் பாவம் கழுவ... மச்சா... கூகிள் (google) பண்ணிப் பாரு... ஒவ்வொரு சாமிக்கும் பூஜை பண்ணும் போது, ஒவ்வொரு வழில பாவம் போகும்னு நம்புவாங்க... ஏசுக்கு ஹோலி வாட்டர் மாறி (holy water)... சிவனுக்கு?"

தேவா சூர்யாவின் கைப்பேசியை வாங்கி வேகமாக பொத்தான்களை (buttons) அழுத்தினான். கூகிளில் நிறைய முடிவுகள் வந்தன. அதில் ஒன்றை அழுத்தினான்.

"Bilva tree is sacred. Hindus believe Bilva tree leaf as a offering to Lord Shiva is a destroyer of terrible karma. Touching it, frees one from his/her sins"  படித்துக் கொண்டிருந்த தேவாவை சூர்யா நிறுத்தினான்.
"ஹ்ம்ம்... வில்வ மரம்-னு சொல்வாங்கத் தமிழ்-ல. சிவனுக்கு ரொம்ப உகந்தது. எல்லாச் சிவன் கோவிலையும் வில்வ மரம் இருக்கும். அத்தோட எலை (இலை) சிவபெருமான் கையில உள்ளத் திருசூலம் வடிவத்துல இருக்கும். இப்போ தான் ஏன் எல்லாச் சிவன் கோவிலையும் வில்வ மரம் இருக்குனு புரிது..." என்று விளக்கினான் சூர்யா.

"இது சொல்ற இடம்?"
ஒரு பெருமூச்சு விட்டான் சூர்யா. யோசித்தான். "பாவம் கழுவ வழி - வில்வம். அந்த வழியே பெயராய் பெற்றதே வழிக் காட்டும். வில்வத்த பெயரா பெற்றது... ஹ்ம்ம்... போலாமா?"

"எங்க?" என்றான் தேவா.

"19B"

"டி. நகரா?"

"மாம்பலம்" என்றுத் திருத்தினான் சூர்யா.

சைதாபேட்டை பேருந்து நிறுத்தத்தில் இறங்கிவிட்ட தேவா, மத்தியக் கைலாஷிலிருந்து சைதாபேட்டை வரும் வரை சூர்யாவுடன் நடந்த உரையாடலையும், அது தந்த வியப்பையும் எண்ணி நடந்துச் சென்றது, அவன் கால் போனப் போக்கில் நடத்துச் செல்வது போல் இருந்தது. "எப்படி மாம்பலம்-னு சொல்ற?" என்று தான் கேட்டக் கேள்விக்கு சூர்யாவிடம் இருந்து வந்தப் பதில் அவனை வியப்பில் ஆழ்த்தி இருந்தது.

மாம்பலம் என்பது திரிந்த சொல். உண்மையானச் சொல் - மகா வில்வம். வில்வம் மரம் அடர்த்தியாக இருந்தப் பகுதி அது. மகா வில்வம் என்பது திரிந்து திரிந்து இப்போது மாம்பலம் ஆனது. இந்த விளக்கத்தைச் சொல்லி சூர்யா "தமிழ் இனி மெல்லச் சாகும்" என்னும் மொழியைக் கூறியதும் தேவாவிற்குச் சரி என்றேப் பட்டது.

தேவாவின் கால்கள் நின்றன. அவன் நின்ற இடம், கால் போனப் போக்கில் அவன் போகவில்லை என்பதை உறுதிச் செய்தது. "சைதாபேட்டை காவல் நிலையம்". 

யார் இந்த சிவன்?

காவல் நிலையத்தின் உள்ளே நுழைந்த சூர்யா அரை மணி நேரத்தில் உதவி ஆணையரிடம் பேசிக்கொண்டிருந்தான். அரசியல்வாதியான தேவாவின் தந்தை  மூலம் உதவி ஆணையரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆணையரிடம் தொலைப்பேசியில் பேசிய போது இருந்த அலட்சியம் இப்போது அவரிடம் இல்லாததை கவனித்தான் தேவா. முதலில் உதவி ஆணையர் அவனைச் சந்திக்க மறுத்ததையும், பின்னர் அவன் சிக்கலைக் கேட்டவுடன் ஒப்புக்கொண்டதையும் நினைவுக் கூர்ந்தான். அதற்குக் காரணம் உதவி ஆணையரிடம் இருந்தே வந்தது. அதைக் கேட்ட அவனது இதயத் துடிப்புச் சற்று  நின்றது. அவர் சொன்னதாவது...

"இது ரெண்டாது கேஸ் எங்களுக்கு... நீங்க சொல்ற இந்தக் கடவுள்... சிவன்... அந்த அடையாளம் தெரியாத நபர்... நாங்க தேடிட்டு இருக்கோம்... எட்டு மாசமா..." என்றுத் துவங்கினார் உதவி ஆணையர்.
 
எட்டு மாதத்திற்கு முன் நடந்தக் கொலை வழக்கின் முக்கியக் குற்றவாளியாக தேடப் பட்டு வரும் அடையாளம் தெரியாத நபர் - சிவன். கங்கா என்னும் பெண்ணைக் கொலைச் செய்தக் குற்றத்திற்காகத் தேடி வருகின்றனர். கங்கா கொலை செய்யப் பட்டதற்கு இரண்டு நாள் முன்னதாக அவள் கைப்பேசியில் வந்த மெசேஜ் ஒரு முக்கிய ஆவணம். கங்காவின் கணவரிடம் பெற்ற வாக்குமூலத்தின் படி கங்காவின் கைப்பேசிக்கு வந்தச் செய்தியை அவள் சட்டம் செய்யவில்லை என்றும், அவள் கணவரும் அதை ஒரு பொருட்டாக எண்ணவில்லை என்பதும் தெரிந்திருந்தது. கங்கா ஏன் கொலைச் செய்யப்பட்டாள் என்பது இன்று வரை மர்மமாகவே இருக்கிறது. ஆனால் கங்கா கொலைச் செய்யப்பட்ட இடத்தில் கிடைத்த ஆவணம் ஒரு "ருத்ராட்சை". அதைக் கொலைகாரன் வேண்டும் என்று விட்டுச் சென்றிருந்தால், கங்காவின் கைப்பேசியில் வந்தச் செய்திக்கும் கொலைகாரனுக்கும் சம்பந்தம் உண்டு என்பதை காவல் நிலையக் கோப்பில் எழுதினர் என உதவி ஆணையர் கூறினார். மேலும், தொலைப்பேசியில் தேவா தனது கைப்பேசிக்கு வந்ததாக உரைத்த முதல் செய்தியும், கங்கா கைப்பேசிக்கு வந்த செய்தியும் ஒன்றே என்று உதவி ஆணையர் கூற வியப்பின் எல்லையை அடைந்தான் தேவா.

இப்போது தேவாவை வைத்துத் தான் சிவனைப் பிடிக்க இயலும் என்று கணக்குப் போட்ட உதவி ஆணையர் தேவாவைச் சந்திக்க திட்டமிட்டார். தேவாவின் கைப்பேசியைக் கேட்ட உதவி ஆணையர், அது தேவாவிடம் இல்லை என்பதை அறிந்தவுடன் திடுக்கிட்டார். ஆனால், தேவாவின் திட்டத்தைக் கேட்டவுடன் எழுந்து வந்து தேவாவின் தோளில் தட்டி அவனதுத் தொலைநோக்குப் பார்வையைப் பாராட்டினார். அரை மணி நேரத்திற்கு முன்பாக, சூர்யாவும் தேவாவும் பேருந்தில் ஏறுவதற்கு முன் தேவா தனது திட்டத்தைச் சூர்யாவிடம் கூறினான். சூர்யாவும் திட்டத்திற்கு ஒப்புக் கொண்டான். அவன் கூறியத் திட்டமாவது -

சிவன் கைப்பேசித் தொழில்நுட்பங்களை நன்கு அறிந்திருந்ததால், அவன் அவர்கள் பின்னால் வந்து இவர்கள் போகும் இடத்தை அறிந்திருக்க வாய்ப்புக் குறைவு. மொபைல் ஜி.பி.எஸ் (mobile GPS) மூலமாகவே அவர்களைப் பின் தொடர வேண்டும் என யூகித்தான். சிவனின் கைப்பேசிச் செய்திகளில் வரும் குறிகளைத் தன்னை விட சூர்யா அதிவேகமாக உடைத்ததையும் கண்டிருந்தான். சிவன் தன்னைத் தேடிப் பிடிப்பதற்குள், சிவனை அவன் தேடிப் பிடிக்க முடிவெடுத்தான்.

சிவனின் செய்திகள் தேவாவின் கைப்பேசியிலேயே வருவதால், அதைச் சூர்யாவின் கையில் ஒப்படைத்தான். சிவன் தேடும் தேவாவாகச் சூர்யா மாறுகிறான். சிவனின் செய்திகளைத் தொடர்ந்து, சிவனின்  வலையைத் தேடிச் செல்கிறான் சூர்யா. தேவாவோத் தொலைப்பேசியில் பேசிய உதவி ஆணையரின் உதவி தேடிச் செல்கிறான். சூர்யா மூன்றாவதுக் குறியை உடைத்து மாம்பலம் சென்றிருக்கிறான். அடுத்த குறி வந்தாலும், அதை அவன் உடைத்தாலும் அந்த இடத்தை விட்டு அவன் விலகக் கூடாது என தேவா கூறியிருந்தான். தேவா மாம்பலத்தை அடைந்து, சூர்யாவைச் சந்தித்தால் தான் அங்கிருந்து அடுத்த இடத்திற்கு அவர்கள் செல்வார்கள் என முடிவு செய்யப் பட்டிருந்தது. இந்த முடிவுகள் அனைத்தும் சிவன் தேவாவைத் தேடி மாம்பலம் வரமாட்டான் என்ற யூகத்தின் பெயரிலே கட்டப்பட்டிருந்தது.

சிவன் தேவா என எண்ணிச் சூர்யாவை துரத்துகிறான். தேவா சிவனைத் துரத்திப் பிடிக்க ஆயத்தமாகிறான் உதவி ஆணையரின் உதவியோடு. இரு துரத்தல்களும் சங்கமிக்கும் இடம் மிக விரைவில் வரும் !

உதவி ஆணையர் "Cyber Crime" பிரிவிற்கு தேவாவின் கைப்பேசியின் தகவல்களை அனுப்பி வைத்தார். தேவாவின் கைப்பேசிக்கு சிவனிடம் இருந்து வரும் செய்திகளை வைத்து, சிவனை எளிதாக ட்ராக் (track) செய்யலாம் எனத் திட்டம். "சைபர் கிரைம்" வேலையில் இறங்கினர். தேவாவின் கைப்பேசிக்கு வரும் ஒவ்வொரு அழைப்பையும், மெசேஜையும் ட்ராக் செய்தனர். இறுதியில் வந்தது சிவனின் செய்தி. செய்தி வந்திருந்த எண்ணை ட்ராக் செய்ய ஆரம்பித்தது கணினி. தேவாவோ, சூர்யாவோ, உதவி ஆணையரோ எதிர்பாராத முடிவைத் தந்தது கணினி.


சிவன் விஜயம்!


தேவாவிடம் இருந்து வாங்க வேண்டியத் தகவல்களை எல்லாம் வாங்கிக் கொண்டிருந்தார் உதவி ஆணையர். அப்போது அவருக்கு கைப்பேசியில் சைபர் கிரைம் பிரிவிலிருந்து அழைப்பு வந்தது. அந்த அழைப்பு அவரைத் திடுக்கிட வைத்தது. காவல் நிலையத்திலிருந்த ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகியோருக்கு கட்டளைகள் பறந்தன. தேவா எழுந்து "என்ன ஆச்சு?" என்றான்.

"சைபர் செல்-ல இருந்து கால் (call from cyber cell)... சிவன் இப்போ இருக்கிற இடம் - மாம்பலம் இரங்கநாதன் தெரு பக்கத்துல"

அதிர்ச்சியில் உறைந்தான் தேவா. சூர்யாவை இவ்வளவு சீக்கிரமாக சிவன் நெருங்குவான் என அவன் நினைக்கவில்லை.

"சார்... வாங்க சார் போலாம்... சூர்யாவ காப்பாத்தணும்"

"டோன்ட் வொர்ரி... டி.நகர் போலீஸ் இந்நேரம் அந்த இடத்தைச் சுத்தி இருப்பாங்க... அது மட்டும் இல்ல... நாமளும் அங்க தான் போறோம்..." என்று தேவாவை அழைத்து ஜீப்பிற்கு விரைந்தார் உதவி ஆணையர்.

அடுத்தப் பத்து நிமிடங்களில், தேவா மாம்பலத்தை அடைந்தான். உதவி ஆணையர் தேவாவை  ஜீப்பிலேயே இருக்கும்படிக் கூறினார். ஜீப்பில் இருந்தபடியே சூர்யாவைப் பார்த்தான். சூர்யா தேவாவின் கைப்பேசியை பார்த்துக்கொண்டே நின்றான். திடீரென மாறிய அந்தச் சுழல், வந்துக் குவிந்த போலீஸ் வேன்கள் இவையனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தன இரு கண்கள்.

அந்தக் கண்களில் ஏமாற்றம் தெரிந்தாலும், சில நொடிகளில் அதே கண்களில் திருப்தி தெரிந்தது. சிவன் தேடிக் கொண்டிருந்த தேவாவின் அடையாளம் சற்று நேரத்தில் தெரியவரும். ஆனால், தேவாவின் இடத்தில் நின்றுக் கொண்டிருந்ததோ சூர்யா. இறந்துப் போன கங்காவின் கேசை நடத்திய உதவி ஆணையரைத் தொலைக்காட்சியில் பார்த்திருந்தான் சிவன். சுற்றும் முற்றும் பார்த்தபடி, உதவி ஆணையர் சூர்யாவை நோக்கி நடந்தார். உதவி ஆணையர் சூர்யாவை அழைத்து ஜீப்பிற்கு வந்தார். இரங்கநாதன் தெருவை ஓர் பார்வைப் பார்த்த உதவி ஆணையர், அங்கு இருந்தக் கூட்டத்தைப் பார்த்து நம்பிக்கை இழந்தார். அந்தக் கூட்டத்தில், அடையாளம் தெரியாத நபரை, மொபைல் ட்ராகிங் மட்டுமே வைத்துத் தேடிப் பிடிப்பது கடினம் என உணர்ந்தார். மேலும், அப்பட்டமாக வந்தப் போலிஸ் வேன்களை சிவன் கவனித்திருக்க இயலும் என்பதால் காத்திருப்பது தேவையற்றது என்று எண்ணினார். ஜீப் சைதாபேட்டை காவல் நிலையம் வந்தடைந்தது.

திரிசூலத்தில் விரியும் பழங்கதை!

காவல் நிலையத்தின் உள் அறையில் கங்கா மற்றும் தேவாவின் கேசுகளை சல்லடைப் போட்டுக் கொண்டிருந்தனர் உதவி ஆணையரால் நிர்ணயிக்கப் பட்டக் குழு. சிவன், தேவா, கங்கா - இவர்கள் மூவரையும் இணைக்கும் புள்ளி எது? யார்?

கங்காவின் சொந்த ஊர், பள்ளிப் படிப்பு, கல்லூரிப் படிப்பு எதுவும் தேவாவுடன் ஒத்துப்போகவில்லை. சிவனைப் பற்றிப் போதியத் தகவல்கள் இல்லாததால், கங்கா - சூர்யா இவர்கள் இருவரின் ரெகார்ட்ஸ் மட்டுமே பெரும்பாலும் உருண்டது. அவர் அவர் கைப்பேசிக்கு சிவன் அனுப்பிய முதல் செய்தியே ஒற்றுமை. கடைசியில், போலிஸ் குழு இன்னொரு ஒற்றுமையைக் கண்டனர். தேவாவிற்கும் கங்காவிற்கும். அது அவர்களுக்கு கிடைத்த இரண்டாம் குறி -  திரிசூலம் அருகில் ஒரு கிரவுண்ட் இடம். இப்போது உள்ள ஏர்போர்டின் பின்புறம்.

முதலில் அந்த இடம் லிங்கேஸ்வரர் என்பவரின் பெயரில் பதிவு செய்யப் பட்டிருந்தது. பலக்  கைகள் மாறி ஒரு வருடம் முன்னதாக கங்கா என்பவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஒருவரிடத்தில் இரண்டுக் கைகள் மாறி தேவாவின் பெயரில் பதிவாகி இருக்கிறது. கங்கா, தேவா இவர்களுக்கு இடையில் இரண்டுப் பேர் - ராஜா மற்றும் ரவிச்சந்திரன். இவர்கள் இருவருக்கும் அழைப்புப் பறந்தது. நிலத்தைப் பற்றி விசாரித்த போது ராஜா மற்றும் ரவிச்சந்திரன் கூறியதாவது -

ராஜா - ஆமா சார் ! ஒரு எட்டு மாசத்துக்கு முன்னாடி வாங்கினேன். அதுக்கு முன்னாடி வாங்கின பொண்ணுக் கொலை செய்யப்பட்டது வாங்குன பெறகு தான் தெரிஞ்சுச்சு. உடனே ஒரே மாசத்துல வித்துட்டேன். சகுனம் சரி இல்லாத நெலத்த வெச்சு வியாபாரம் செய்ய முடியாது சார்...

ரவிச்சந்திரன் - ஆமா சார் ! நல்ல வெலைக்கு வந்துச்சு வித்துட்டேன்... ஆமா நான் வித்தது அரசியல்வாதிட்ட தான்...

தேவாவின் தந்தை ஓர் அரசியல்வாதி. பத்திரப் பதிவு தேவாவின் பெயரில் நடந்துள்ளது. தேவாவிடம் கேட்டப்போது அவனும் "ஆமாம்" என்றான். உதவி ஆணையரின் முகத்தில் சிவனை நெருங்கி விட்டதற்கான மகிழ்ச்சி சற்று வந்தது. அந்த நிலம் யார் யார் பெயரில் பதிவு செய்யப் பட்டிருந்ததோ அவர்களின் பெயர் பட்டியலைக் கேட்டார் உதவி ஆணையர். பட்டியலை ஒரு முறைக்கு இரு முறை அலசினார். தன் விரலை பட்டியலின் மேல் நகர்த்திக் கொண்டு வந்த உதவி ஆணையர் ஓர் இடத்தில் சட்டென நிறுத்தினார்.

23.10.1995 - பரமசிவன்

பரமசிவன் என்பவர் 1995-ல் அந்த நிலத்தை வாங்கி இருக்கிறார். பரமசிவன் ஏன் நாம் தேடும் சிவனாக இருக்கக் கூடாது எனக் கேட்டார் உதவி ஆணையர். உடனடியாக பரமசிவனின் விலாசம், தொலைப்பேசி எண் போன்ற விவரங்களைத் தேடச் சொன்னார். இரண்டே மணி நேரத்தில் பரமசிவனின் விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

மேலும், சிவன் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பணி புரிகிறார் என்றும் விவரங்கள் சேகரித்தனர். சிவனின் தமிழ் புலமைக்கு இதுக் கூட ஒரு காரணமாய் இருக்கலாம் என்று எண்ணினார் உதவி ஆணையர்.

அவன் விலாசத்திற்கு ஒரு போலிஸ் படைப் பறந்தது.

பரமசிவன் வீட்டைச் சோதனை செய்தக் காவல் துறையினர் அங்கு இருந்து சிலப் பத்திரங்களையும், இரண்டு விரலிகளையும் (விரலி - pen drive) காவல் நிலையத்திற்கு எடுத்து வந்தனர். அவற்றை பார்த்ததில், பரமசிவன் திரிசூலத்தில் இருந்த இடத்தை வாங்கியதின் பின்னணி தெரிய வந்தது. விரலிகளில் இருந்தப் பவர்பாய்ன்ட் ப்ரெசண்டேசன்கள் அதைத் தெரிவித்தன. பரமசிவன் "சென்னைவாசி" என்ற பிரபலத் சங்கத்தினுடன் சேர்ந்து திரிசூலத்தில் "சென்னையின் வரலாறு" எனும் தனியார் அருங்காட்சியகத்தை ஏற்பாடு செய்ய இருந்தது தெரிய வந்தது. பத்திரங்கள் பலவும் திரிசூலத்தில் உள்ள அந்த நிலத்தையேக் குறித்தன.

"சென்னையின் வரலாறு" எனும் அருங்காட்சியகம் என்பது சிவனின் செயல்களை ஒத்துப்போனது. அவன் கங்காவிற்கும், தேவாவிற்கும் அனுப்பியச் செய்திகளும், சென்னையின் பழமையான வரலாற்றைக் குறிப்பதாகவே இருந்தது. மேலும், அவன் வீட்டைச் சோதனைச் செய்ய போனக் காவல் துறையினர் முக்கியமான இன்னொரு தகவலும் தெரிந்து வந்தனர். பரமசிவன் வீட்டில் இருந்த மருத்துவச் சீட்டு.

மருத்துவரிடம் பேசிய போது தெரிய வந்தது பரமசிவனின் மனோதத்துவ நிலை. பரமசிவன் அடிக்கடி சைக்கோ போல் நடந்துக் கொள்வதாகவும், சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிய வந்தது. பரமசிவன் சைக்கோ போல் நடந்துக் கொண்டால், அவன் மிகவும் ஆபத்தானவன்  என்றும், அவனை மிக விரைவில் பிடிக்க வேண்டும் என்றும் நினைத்தனர் காவல் துறையினர்.



அழிப்பவனின் சக்தியா? காப்பவனின் யுக்தியா?

சூர்யாவிடம் காவல் நிலையத்தில் நடந்தது, அவன் உதவி ஆணையரிடம் கேள்விப்பட்டது அனைத்தையும் கூறினான் தேவா. தேவாவிற்கு ஏற்பட்ட அதே அதிர்ச்சி, அதே பாதிப்பு சூர்யாவிடமும் வெளிப்பட்டது. சூர்யா தேவாவின் கைப்பேசியை எடுத்துச் சிவனின் அடுத்த குறியைக் காட்டினான். சிவன் அனுப்பிய மெசேஜ் -

"உன்னை அழிக்க சக்தி சேர்க்கிறேன்...
சக்தி சேர்ந்து மண்ணுக்குப் பெயரானது...
மண்ணோடு மண்ணாகும் முன் அம்மண்ணைத் தேடி வா!"
- கடவுள்
"கஷ்டம் தான்... யோசிப்போம்" என்று பெருமூச்சு விட்டான் சூர்யா.

"சக்தி-னா ஒரு வேள பார்வதிய குறிக்குதோ?" என்று கேட்டான் தேவா.

"யெஸ்... இருக்கலாம்.."

"சிவன்... உன்னை அழிக்க சக்தி சேர்க்கிறேன். பார்வதி..." என்று குழம்பினான் தேவா. அவன் முனுமுனுத்ததைப் பிடித்தான் சூர்யா.

"இல்ல, உன்னை அழிக்க சக்தி சேர்க்கிறேன்... சேருது... சிவனோட சக்தி சேருது... அர்த்தநாரீ... திருநங்கை... ஹ்ம்ம் அடுத்து நம்மப் போக வேண்டியது நங்கநல்லூர்..." என்றுக் கூறி சொடுக்கிட்டான் சூர்யா.

"நங்கை நல்லூரா?"

"காஞ்சி சங்கராச்சார்யா வெச்ச பேருனு கூட சொல்றாங்க. எந்த அளவுக்கு உண்மையோ? நெறய கோவில் இருக்குற நாலச் சின்னக் காஞ்சினு கூட சொல்வாங்க. நங்கை நல்லூர்!" என்றான் சூர்யா.

"போலாம்" என்றுக் கிளம்பிய தேவாவை நிறுத்தினார் உதவி ஆணையர்.

நங்கநல்லூர் செல்லும் சூர்யா, தேவாவை,  மறைமுகமாக போலிஸ் பின்தொடர்வார்கள் என்றும், சிவன் தோன்றினால் உடனே பிடிக்க வேண்டும் எனக் கூறினார். இந்த முறை எந்த வித ஆர்பாட்டமுமின்றி போலிஸ் நுழைய வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தனர் காவல் துறையினர். சிவன் மாம்பலத்தில் சுதாரித்திருந்தால் நங்கநல்லூரில் அவனைப் பிடிப்பது கடினமே. எனினும் உதவி ஆணையர் நம்பிக்கை இழக்கவில்லை. மேலும் பலக் கட்டளைகளை தேவாவிற்கும், சூர்யாவிற்கும் கொடுத்தார். 

"Operation Siva Starts!"


Operation Siva

நங்கநல்லூர் எல்லை ஆரம்பத்தில் ஒரு டாக்ஸி (taxi) வந்து நின்றது. மாம்பலம், மத்தியக் கைலாஷ் ஆகிய இடங்களில் பிரதானமானப் பகுதிகளில் நின்ற சூர்யா, இங்கு நங்கநல்லூர் எல்லையில் உள்ள காலி இடத்தில் டாக்ஸியை நிப்பாட்டினான். உதவி ஆணையரின் ஆணை. காலி இடம் பல ஏக்கர்கள் இருக்கும். ஆளில்லா இடம் அது. தங்கள் திட்டத்தின் வெற்றி எவ்வளவுச் சாத்தியமோ, சிவனின் திட்டம் வெற்றி அடைவதும் அவ்வளவுச் சாத்தியமே. தேவா டாக்ஸியை விட்டு கீழே இறங்கினான். அவன் சட்டை பட்டனில் ஓர் கேமரா (camera) பொருத்தப்பட்டிருந்தது. டாக்ஸியின் உள்ளே சூர்யா தேவாவின் கேமராவில் விரிந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான். உதவி ஆணையரும் அவனருகில் இருந்தார். மப்டியில் ஐந்து போலீசார் அந்தக் காலி இடத்தைச் சுற்றி இருந்தனர். புதருக்குள் மறைந்தும் மரத்தின் மேல் ஏறியும் படர்ந்திருந்தனர். தேவாவை இறக்கி விட்ட அடுத்த கணமே டாக்ஸி பின்வாங்கியது. தேவா இருந்த இடத்தை விட்டு அரைக் கிலோமீடர் தூரத்தில் ஒரு போலிஸ் வேன் நின்றது. அதனுள் சூர்யாவும் உதவி ஆணையரும் நுழைந்தனர். பலக் கணினிகள் உள்ளே இயங்கிக் கொண்டிருந்தன. ஒரு கணினியில் ட்ராக்கிங், ஒரு கணினியில் கேமரா வீடியோ, ஒரு கணினியில் சிவன் கொடுக்கும் குறிகளுக்கு வேண்டிய இணையதளப் பக்கங்கள் என கணினிகளின் சப்தம் மனிதர்களின் சப்தத்தை விட ஓங்கிக் கேட்டது.

தேவா காலிக் கிரவுண்டின் நடுவில் நடந்துச் சென்றான். காலிக் கிரவுண்டில் வெளிச்சமிருந்த ஒரே இடத்தில் சென்று நின்றான். போலீசார் துப்பாக்கியை உபயோகிக்கும் சூழ்நிலை ஏற்பட்டால் அவர்களுக்கு வெளிச்சம் தேவை என்பதால் அந்த முடிவு. கையில் கைப்பேசியை பார்த்தான். நேரம் இரவு எட்டு மணி ஆகிவிட்டது என்பதைக் கைப்பேசி சொன்னது. தேவா திடுக்கிட்டான் - கையில் இருந்தக் கைப்பேசியில் செய்தி. கைப்பேசியில் மெசேஜைப் பார்த்தான். கேமரா மூலம் போலிஸ் வேனில் இருந்த சூர்யாவிற்கும் அது தெரிந்தது.
 "அந்தம் அடைந்து நிற்கும் உந்தன் வினாவிற்கு,
   முந்தன் எந்தன் ஆயுதம் சொல்லும் விடை!"
அதைப் படித்த சூர்யா "சிவன் வருகிறான்" என்றான். அதே சமயத்தில் தேவாவும் "சிவன் வருகிறான்" என்றான். அவன் சொன்னது கேமராவில் கேட்டது. அவனும் கைப்பேசிச் செய்தியைப் பார்த்தே அதைச் சொன்னான். இருவரும் செய்தியைப் புரிந்துக் கொண்டனர். இது தான் முடிவு என்று "அந்தம் அடைந்து நிற்கும்" சொன்னது. "ஏன்" என்ற அவர்களின் கேள்விக்குப் பதில் தேடி வந்திருக்கின்றனர். அந்தக் கேள்விக்கு முந்தனின் (கடவுள்) ஆயுதம் பதில் சொல்லும் எனக் குறிப்பிட்டிருந்தது. "முந்தன் எந்தன்" என்றதால் அது சிவனையேக் குறிக்கிறது. சிவனின் ஆயுதம் என்ன? திரிசூலம்!

15 நிமிடங்கள் கடந்தன. தேவா சுற்றும் முற்றும் பார்த்த படி நின்றான். உதவி ஆணையர் மற்றும் சூர்யாவின் கண்கள் கேமராவில் விரியும் காட்சிகளின் மேல் பொருந்தியிருந்தன. காலடிச் சப்தம் கேட்டு தேவா திரும்பினான். ஒரு உருவம் தன்னை நோக்கி வந்துக் கொண்டிருந்தது. அந்த உருவத்தைப் பார்த்து அவன் திடுக்கிட்டான். 


திரிசூலம் சொன்ன பதில்!

"நீ... நீ...?" என இழுத்தான் தேவா. அவனது முகத்தை எங்கேயோ பார்த்த ஞாபகம் இருந்தது. சற்று நிதானித்தான். அவன் கண் முன் சிலக் காட்சிகள் வந்துச் சென்றன. அவன் தரையில் விழுந்துக் கிடக்கிறான். அவன் தலையின் பக்கத்தில் கார் ஒன்று நின்றுக் கொண்டிருக்கிறது. "ஏய் பொறம்போக்கு... சிரிச்சுனே போயிருப்ப... என் வண்டி தான் கெடச்சுசா?" என்றான் கார் டிரைவர். ஆம், காலையில் அவன் பார்த்த கார் டிரைவர் அவன் முன் நின்றுக் கொண்டிருந்தான்.

அந்த மனிதனுக்கும் அதேக் காட்சி நினைவுக்கு வந்தது. காலையில் தன் காரில் கைப்பேசியைப் பார்த்துக்கொண்டே ஒருவன் மீது மோதப் போன அந்த நிமிடம் நினைவுக்கு வந்தது. காலைத் தற்செயலாகச் சந்தித்த ஒருவன்  இப்போதுத் தன் செயலால் அவன் எதிரில் நிற்பதைக் கண்டான். கயோஸ் தியரி போல் இருந்தது.

"தேவா எங்க?" என்றான் அந்த மனிதன். ஆம். சிவன் வந்துவிட்டான். தேவா என்றுச் சொன்னதும் அவன் தான் சிவன் என முடிவு கட்டினான் தேவா.

"நான் தான் தேவா!"

"போலிஸ்?"... சூர்யாவையே தேவா என எண்ணி இருந்த சிவனுக்கு போலீஸாக இருக்குமோ என்று ஐயம் வந்து, தன் சட்டைக்கு அடியிலிருந்தக் கைத்துப்பாக்கியொன்றை எடுத்துத் தலைக்கு நீட்டினான். தேவா அதிர்ந்து பின்னால் நகர்ந்தான். ஒரு புதரின் நடுவிலிருந்து துப்பாக்கிக் குண்டு ஒன்று பறந்தது. சிவனின் கையில் பாய்ந்தது. அவன் கைத்துப்பாக்கியை இழந்தான். ஐந்து போலீசார் அவனை நோக்கி விரைந்தனர். சிவனைக் குழப்பவே உதவி ஆணையர் தேவாவை அனுப்பி வைத்திருந்தார். போலிஸ் வருவதைக் கண்ட சிவன் தன் சட்டைப் பையில் இருந்து ஒரு கத்தியை உருவி தேவாவின் மீதுப் பாய்ந்தான். தேவா விலக விலக சிவன் சராமாரியாகக் கத்தியைப் பாய்ச்சி தேவாவைக் கீற முற்ப்பட்டான். போலிஸ் 20 அடி தூரத்தில் இருந்த போது, தேவாவின் இடுப்பில் பாய்ந்தது கத்தி. தேவாக் கீழே விழுந்தான்.

சிவன் ஓட ஆரம்பித்தான். ஐந்து போலீசாரும் சராமாரியாக சிவனை நோக்கிச் சுட்டனர். வெளிச்சம் இருந்த இடத்தை அவன் கடந்து விட்டதால், அவர்கள் குண்டுகள் அவன் அருகில் வெடித்தன. அவனை காயமாக்கவில்லை. சிவன் அவர்களிடம் இருந்துத் தப்பித்தான். உதவி ஆணையர் சிவனைத் துரத்துமாறு வேன் டிரைவருக்கு ஆணையிட்டார். அரைக் கிலோமீட்டர் ஓட்டத்திற்குப் பிறகு சிவனை மறித்தனர். சிவனின் நெத்தியில் துப்பாக்கியை வைத்தார் உதவி ஆணையர். விலங்கு எடுத்து வரக் கூறினார். வேனினுள் சூர்யாவை கவனித்து விட்ட சிவன், கண் இமைக்கும் நேரத்தில் உதவி ஆணையரைத் தாக்கினான், அவர் கீழே விழுந்துப் புரண்டார். அவர் கையில் இருந்தத் துப்பாக்கியைப் பிடிங்கினான். சூர்யா இருந்தத் திசையை நோக்கிச் சுட்டான். தேவா என நினைத்து சூர்யாவைக் கொள்ள முற்பட்டான். சூர்யா மயிரிழையில் தப்பித்தான். உதவி ஆணையர் நிதானித்து எழுந்து சிவன் மீதுப் பாய்ந்தார். சிவன் துப்பாக்கியை அழுத்தினான், இரண்டாம் குண்டு வேனினுள் பாய்ந்தது. சூர்யாவின் நெற்றியில் பாய்ந்தது.

சிறிது நேரத்தில் அந்த இடமே பிளாஷ் லைட்டுகளில் மின்னியது. மீடியா கவரேஜ்!

பழங்கதை தொடர்ச்சி!

விசாரணை அறையில் சிவன் உட்கார்ந்திருந்தான். உதவி ஆணையர் உள்ளே நுழைந்தார். மருத்துவச் சோதனை எல்லாம் அப்போது தான் சிவனுக்கு முடிவடைந்திருந்தது. சிவன் மிகவும் சோர்ந்திருந்தான்.


"சொல்லு... இதெல்லாம் எதுக்காக?" என்றார் உதவி ஆணையர்.

"அதான்..  மோப்பம் பிடிச்சு வீடு வரப் போய் இருப்பீங்களே...  என்ன நான் சொல்றது..?"

"அந்த நிலத்துக்கும் நீ கொலைச் செய்றதுக்கும் என்ன சம்பந்தம்?"

"கோதண்டம்..." என்றான் சிவன்.

"யாரு அது?"

"எனக்கு அடுத்து அந்த நெலம் அவன் பேரு-ல தான் இருக்கும்.. ஆனா அது உண்மையில்ல.. ரெஜிஸ்டரேசன் பத்திரம் எல்லாமே ஃபேக் (fake).. என்கிட்ட இருந்து அவன் வாங்கினதா பத்திரம் ரெடி செஞ்சுட்டான்".

"கோர்ட்-ல கேஸ் ஏன் போடல?" என்று கேட்டார் உதவி ஆணையர்.

"கேஸ் போட்டா நிக்காது... அரசியல்வாதி ஈசியா தப்பிச்சுருவான்..."

சிவனை ஏமாற்றி நிலத்தை அபகரித்ததாகச் சிவன் குற்றம் சாட்டுவது முன்னாள் மந்திரி கோதண்டம். உதவி ஆணையர் சற்றுச் சிந்தித்து விட்டு "இப்போ நீ கொலை செய்யுற ஆட்களுக்கும் இதுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்ல" என்று எவ்வளவோ எடுத்துக் கூறியும் சிவனின் மனதில் அதுப் பதியவில்லை. அரசு மனோதத்துவ மருத்துவர் ஒருவரிடம் அவன் ஒப்படைக்கப் பட்டான்.

திரிசூலத்தில் உள்ள அந்த நிலத்தை வாங்கும் அனைவரையும் சிவன் கோதண்டத்தின் உருவத்தில் நினைத்துக் கொள்கிறான் என்றும், அவர்களைக் கொலை செய்ய அவன் நிலையில்லாத மனம் சொல்கிறது என்றும் மருத்துவர் ஆய்வில் அறிந்தார். அவனது அறிவிற்கு அவர்களின் பெயரை வைத்து வித்தியாசம் அறிய தெரிந்தும், சில நேரங்களில் அவர்களின் உருவம் கோதண்டம் போல் மாறி மாறித் தெரிவதால் குழப்பம் அடைகிறான். குழப்பத்தின் உச்சியில் கொலைகாரனாகிறான் என்று மருத்துவர் ஆய்வு முடிவை எழுதினார்.


இதுவும் கடந்துப் போகும்!

தேவா இடுப்பில் கட்டுடன் சூர்யாவின் வீட்டிற்குள் நுழைந்தான். அவனுக்கு சுற்றி நடக்கும் எதுவும் காதில் விழவில்லை. வீட்டினுள் நுழைந்ததும், சூர்யாவைக் கண்டான். வெள்ளை உருவமாக கண்ணாடிக் குளிர் பெட்டியில் உறங்கிக் கொண்டிருந்தான். அவனது தலைச் சிதைக்கப் பட்டதைக் கண்ட தேவாவின் கண்ணில் கண்ணீர் பெருக்கெடுத்து வந்தது. சட்டெனத் திரும்பி வீட்டை விட்டு வெளியே ஓடினான். தேவாவை நோக்கி வந்த ஆபத்து சூர்யாவிற்கு முடிவாய் இருந்தது.

சூர்யா, தேவா, சிவன், கோதண்டம், கங்கா - இவர்கள் தான் ஒரு வாரமாக தொலைக்காட்சியில் தெரிந்தனர். விவாதங்கள், பேட்டிகள், விமர்சனங்கள், கட்சி மோதல்கள் எனப் பல நடந்தன. பரமசிவன் கூறியது உண்மையா இல்லையா என்றும் பல விவாதங்கள் நடந்தன. கோதண்டம் சிவனின் குற்றச்சாட்டை பொய் என்று கூறி உதறித் தள்ளினார். யாருக்கும் நிரூபிக்க அவருக்கு அவசியமில்லை என்றுக் கூறி விலகினார். அந்த வாரத்தின் இறுதியில் தொலைக்காட்சி நிறுவனங்கள் பரமசிவன் செய்தியை ஒளிபரப்ப நிறுத்தினர். டி.ஆர்.பி-க்காக அலையும் தொலைகாட்சி நிறுவனங்களுக்கு வேறு ஒரு செய்திக் கிடைத்தது. மக்களும் மீடியாவும் இச்செய்தியை மறந்தனர்.

தேவா தன் தொலைகாட்சியில் சேனலை மாற்றினான்.

"மன்னிக்குறோமோ இல்லையோ மறந்தறோம்! மறதி - ஒரு தேசிய வியாதி!" என்று கமல் ஹாசனின் வசனம் கேட்டது!

"இதுவும் கடந்துப் போகும்" 

எழுத்து & உருவாக்கம்,
அருண் பாரதி சுவாமிநாதன்


நன்றி - கமல் ஹாசன், டேன் பிரவுன், இணையதளம்

No comments:

Post a Comment

“The Metamorphosis” by Franz Kafka

“The Metamorphosis” by Franz Kafka is a novella about a salesman Gregor who one morning wakes up and finds himself transformed into a venomo...