Sunday, 20 December 2015

"பே" தனமா!


"இவைங்களால கடைசி வரைக்கும் வேலவெட்டிக்குப் போகாம வாழ்ந்துற முடியுமானு நம்மளப் பத்தி ஊருக்குள்ள ஒரு கேவலமான டாக் (talk) இருக்கு! அந்தட் டாக்க (talk) நம்ம நொறுக்கணும்"..........................

"எவளோப் பெரியக் கேவலம் வந்தாலும் சரி, ஒரு செருப்ப வாய்லக் கவ்வக் குடுத்துக்கிட்டு இன்னொரு செருப்பச் சாணில முக்கி உச்சாந்தலையில நச்சு நச்சுனு அடிச்சாலும் சரி, கடைசிவரைக்கும் நம்ம வேலைவெட்டிக்குப் போகாம வாழ்ந்துக் காட்டணும்"........................

"அதுக்கு முன்னாடி, ஒண்ட வந்தப் பிடாறி ஊர் பிடாறிய வெரட்டுனக் கதையா, என்ன வெரட்ட வந்துருக்கான் அந்தத் தமிழரசு. அவன இந்த ஊர விட்டு ஓட ஓட வெரட்ட ஏதாவதொரு ஐடியா குடுங்க".......

[அல்லக்கை] "எல்லாரும் அவன் முன்னாடிப் போய் நின்னுக் கொடூரமா மொரைப்பொம் பாஸ்!"

அதுக்கும் மசியிலேனா ?

[அல்லக்கை] "கண்ணீர் விட்டு அழுதுப் பாப்போம் பாஸ்!"

அதுக்கும் எறக்கப்படலேனா ?

[அல்லக்கை] "கால்ல விழுந்துக் கதறுவோம் பாஸ்!"

அதுக்கும் போடா ***** னா ?

[அல்லக்கை] "ஆளுக்கு ஒரு தெசயாப் பாத்து ஓடுவோம் பாஸ்..!"

என்னடா சுத்தப் "பே" தனமாப் பேசிட்டு இருக்க?

பே தனமா... பே தனமா... பே தனமா....

"பே" தனமா! 

மாலை 5 மணி அளவில்...

மாணிக்கம் வீட்டின் டி.வி-யில் வைகைப்புயல் வடிவேலுவின் காமெடி ஓடிக்கொண்டிருந்தது. இங்கிலிஷ்காரன் என்றப் படத்தில் வரும் அந்தக் காட்சியை மாணிக்கம் சோபா மீதுப் படுத்துக்கொண்டு ரசித்தான்.அன்று அவனுடன் தங்கி இருந்த அவன் நண்பன் அன்வர் வீட்டில் இல்லை, ஊருக்குச் சென்றிருந்தான். அவன் இருந்திருந்தால் இதையெல்லாம் பார்க்க விட்டிருக்க மாட்டான். அதனால் வாய் விட்டுச் சிரித்து ரசித்துக் கொண்டிருந்தான்.

மாணிக்கம் தன் வீட்டுச் சமையலறையில் நுழைந்தான். தீக்குச்சியை எடுத்துக் கொழுத்தினான். எரியும் தீக்குச்சியை அடுப்பின் அருகில் கொண்டுச் சென்றான். அடுப்பின் ஒரு குமிழைத் திருப்பியதும் தீ அடுப்பின் மீதுப் படர்ந்தது. அடுப்பின் மேல் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் பாலை ஊற்றினான்.

சிறிது நேரத்தில், ஒரு டம்ளர் (குவளை) காப்பியுடன் (குழம்பி) ஹாலில் வந்து அமர்ந்தான். இரண்டு மடக்குகளே மீதமிருந்த நிலையில் அவன் முகம் சிறிது மாறியது. மூக்கைச் சுழித்து லேசாக முகர்ந்தான். ஏதோ ஒரு வாடை வந்துக்கொண்டிருந்தது. மெதுவாகக் கையிலிருந்த  டம்ளரை கீழே வைத்தான். எழுந்து நடந்தான். சமையலறையை அடைந்தான். சமையலறையின் வாயிலை அடைந்த உடனே அவன் கால்கள் விரைந்தன. அடுப்பின் மீதுப் பால் பொங்கி வழிந்தோடிக் கொண்டிருந்தது. வேகமாகச் சென்று அடுப்பை அணைத்தான் மாணிக்கம். அணைத்தப்பின், அவன் மனம் குழம்பியது. காப்பி எடுத்துச் செல்லும் முன் அவன் அடுப்பை அணைத்தானா? இல்லையா? அவன் நினைவுக் கூற முனைந்தான். முக்கால் டம்ளர் காப்பிக் குடித்தும் அந்தக் குழப்பமான மனநிலையில் அவன் அறிவு சற்று மெதுவாகவே இயங்கியது. நினைவுக் கூற முடியாததால், அவனது மறதியை நிந்தித்துக் கொண்டு வெளிவந்தான். அடுப்பை அணைக்க மறந்திருப்பேன் என்ற முடிவுக்கு வந்தான். மீண்டும் ஹாலில் வந்து அமர்ந்தான்.

அவனது முடிவு எவ்வளவு தவறானது என்பது காலையில் அவனுக்குப் புலப்படும். அவனிருக்கும் இடத்திலிருந்து 2 தட்டுகள் நாம் கடந்தோம் என்றால் காலை மாணிக்கம் அடையப் போகும் அதிர்ச்சியை அறியலாம். சமையலறையின் கோடியிலிருந்த கதவுச் சரியாகத் தாளிடாததை அவன் கவனிக்கவில்லை. அவனிருந்த இடத்திலிருந்து 5 அடிகளில் சமையலறை வந்து விடும். ஹாலின் இடப்புறத்தில் அமைந்தச் சமையலறையின் கோடியில் சர்வீஸ் வெரண்டா இருக்கிறது. சர்விஸ் வெரண்டாவின் கதவு லேசாகத் திறந்து காற்றில் அசைந்துக் கொண்டிருக்கிறது. மணி ஏழானதால் இருள் படர்ந்திருக்கிறது. பின் தெருவின் விளக்கின் வெளிச்சத்தில் மங்கிய ஒளியில் இருக்கிறது சர்விஸ் வெரண்டா. சர்விஸ் வெரண்டாவின் மூலையில் கிடக்கிறது ஓர் முக்காலி. முக்காலியின் மேல் சற்று நோக்கினால் ஓர் டம்ளரின் விழிம்பில் இருந்து லேசாக புகை வந்துக் கொண்டிருக்கிறது.

அடுத்த நாள் காலை 10 மணி அளவில்....

படுக்கை அறையிலிருந்து சோம்பல் முறித்துக் கொண்டே ஹாலில் நுழைந்த மாணிக்கம், தரையில் டம்ளரிலிருந்து சிறிது காப்பிக் கொட்டிக்கிடக்கக் கண்டான். முகம் சுழித்தான். டம்ளரை கீழேக் குனிந்து எடுத்துச் சமையலறைக்குச் சென்றான். சர்விஸ் வெரண்டாவிற்குச் செல்லும் முன் அமைந்திருந்தது சிங்க் (sink). சிங்கிள் டம்ளரை போடக் குனிந்த மாணிக்கம் வெடுக்கெனப் பின் வாங்கினான். பின் வாங்கிய வேகத்தில் அவன் தலைப் பின்னால் இருந்தச் சுவற்றில் மோதியது. தூக்கம் இப்போது அவனுக்கு முற்றிலுமாகக் கலைந்தது. அவன் முகத்தில் பயத்தின் சாயைப் படர்ந்தது. மீண்டும் மெதுவாக முன் வந்து சிங்கினுள் பார்த்தான். சிங்கின் உட்புறம் கொஞ்சம் கொஞ்சமாக அவன் கண்ணுக்குத் தெரியத் துவங்கியது. முழுவதும் தெரிந்ததும் அவன் வியப்பு பன்மடங்கு அதிகரித்தது. உள்ளே ஒரு டம்ளர் சற்று அடிமண்டிக் காப்பியுடன் கிடந்தது. அவன் கையின் பிடியிலிருந்த தனது டம்ளரை சிங்கிள் விசிறியடித்து சமையலறையிலிருந்து வெளி வந்தான். "ஒரு வேளை நான் ரெண்டு கிளாஸ் எடுத்து இருப்பேனோ?" என்று நினைத்தவாரே தன் வீட்டின் மாடிக்குச் சென்றான். சிறிது நேரம் மாடியில் உலாவி விட்டுக் கீழே இறங்கினான். அவன் மனது மிகவும் குழம்பிக்கிடந்தது அன்று. அவனைச் சுற்றி ஏதும் அமானுஷ்யம் இருக்குமோ என்ற எண்ணம் அவனை யோசனையிலேயே வைத்தது.

மதியம் 3 மணி அளவில்...

மாணிக்கத்தின் முகம் காலையை விட இப்போதுத் தெளிவாய் இருந்தது. அவன் முன்னாடி ஒரு மேசையில் சதுரங்கப் பலகை இருந்தது. சதுரங்கக் காய்கள் ஆங்காங்கே நின்றன. யாருடன் அவன் விளையாடுகிறான்? தன் முன்னிருந்த கருப்பு இராணியைப் பக்கவாட்டில் நகர்த்திச் "செக்" என்று மேசையைச் சுழற்றினான். எதிரணியின் காய்கள் அவன் பக்கம் வந்தன. அவனே எதிரிக் காயையும் நகர்த்திச் "செக்"கை கலைத்தான். மீண்டும் ஒரு முறை மேசையைச் சுழற்றித் தனது காயை நகர்த்தினான். அப்போது அவன் கைப்பேசி அதிர்ந்தது. கைபேசியை எடுத்தவாறு வெளியே நடந்துப் பேசினான்.

மீண்டும் மாணிக்கம் அறையினுள் வந்தான். அவன் கண்டக் காட்சி அவனை அதிர வைத்தது, அதிர்ச்சியில் தரையில் விழுந்தான். எழுந்து சதுரங்க மேசையைப் பார்த்துச் "செக்மேட்" என்றான். அவன் உடல் அதீதமாக வியர்த்திருந்தது. தன் கைப்பேசியை எடுத்து வெளியே ஓடினான்.

அன்வருக்கு அழைப்புப் பறந்தது. அவன் நண்பனின் குரல் மறுமுனையில் ஒலிக்க, இவன் பேசுவதுக்கு நா எழவில்லை. மிகவும் சிரமப்பட்டு, "இங்க.. இங்.. ஏதோத் தப்பா இருக்கு டா.. இந்த வீடு வேணாம்.." என்றான். பின் முழுக் கதையும் அவனிடம் விவரித்தான்.

"ஒளரல டா. இதெல்லாம் நடந்துச்சு.."

...

"நீ இருப்ப டா... நான் இருப்பேனா? இந்தக் குழப்பம் வேணாம்.. நான் எல்லாத்தையும் எடுத்துப் போட்டுக் கெளம்புறேன். எங்கயாது ஒரு வீடுப் பாத்து இருக்றேன். நீ அங்க வா..."

இரண்டு நாட்கள் கழித்து...

அன்வர் தனது மெத்தை மேல் அமர்ந்து, மடிக்கணினியை (லேப்டாப்) மடியின் மீது வைத்து "GTA San Andreas" கேம் விளையாடிக் கொண்டிருந்தான். அவன் எதிரில் அமர்ந்து ஒரு சிக்கன் பிரியாணிப் பொட்டலத்தைப் பிரித்தான் மாணிக்கம். முன்னாடி இருந்த வீட்டின் நினைவுகள் மாணிக்கத்தை விட்டு அகலவில்லை. அன்வரிடம் புலம்பிக் கொண்டிருந்தான். தான் ஊரிலிருந்து வருவதற்குள்ளேயே மாணிக்கம் வீட்டைக் காலிச் செய்து, புது வீடுப் புகும் அளவிற்கு அவன் பயந்திருந்ததை எண்ணி அவன் அனுதாபப் பட்டான். ஆனாலும் கேலியும் கிண்டலும் இல்லாமல் இல்லை.

"சரியான தொடைநடுங்கி டா நீ!"

"நான் சுதாரிச்சு வீட்டையாது காலிப் பண்ணேன். நீ இருந்துருந்தா அங்கேயே மேலப் போயிருப்ப... நல்ல வேளை நீ இல்ல." என்று நக்கல் அடித்துக் கொண்டே கைக் கழுவ சமையலறைக்குச் சென்றான் மாணிக்கம்.

கை கழுவி விட்டு, மீண்டும் அறைக்குள் நுழைந்த மாணிக்கம், அறையின் வாசலில் திடுக்கிட்டு நின்றான். அவன் முன்னே மெத்தை மேல் அன்வர் இல்லை. ஆனால் அவன் அதிர்ச்சிக்குக்  காரணம் அது அல்ல. அவன் கண்டக் காட்சி...

மடிக்கணினிச் சற்றுத் தூக்கியவாறு அந்தரத்தில் நின்றது. கேம் ஓடிக்கொண்டிருந்தது. மடிக்கணினியில் உள்ள பொத்தான்கள் (button) யார் தயவும் இன்றித் தானாக இயங்கிக்கொண்டிருந்தன. மாணிக்கம் உடல் நடுநடுங்க பின்னால் சுவற்றில் சாய்ந்தான். மடிக்கணினியின் ஸ்க்ரீனில் "Game Over" என்று சிவப்பு நிறத்தில் மினுங்கியது. மூச்சுத் திணற வெளியே ஓடினான். ஓடிய வேகத்தில் ஹாலிலுள்ள சுவற்றில் இடித்து அவன் கைக் கடிகாரம் கீழே விழுந்தது. விழுந்த வேகத்தில் அது "கீங் கீங் கீங்" என சப்தம் எழுப்பியது. ஆனால் அவன் அதைச் சற்றும் கவனிக்காது அவன் கண் முன் விரிந்தக் காட்சியைக்  கண்டுத் திக் பிரமை அடைந்தான். அவன் கண்ணில் நீர் பொங்கியது. அவனால் எழ இயலவில்லை. அவன் கைக் கால்கள் கட்டிப் போட்டப்படி அவன் உணர்ந்தான். அவன் கண்ணில் சிவப்பு நிற நிழல் ஒன்று ஆடியது.

அவன் கண்கள் கொட்டாமல் எதிரே விரிந்தக் காட்சியையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் எதிரே ஓர் சிவப்பு நிறக் குர்தா (kurta) நின்றுக்கொண்டிருந்தது. உடலில்லாத அந்த குர்தா அவனைப் பார்த்து "வா" என்று அழைப்பது போல் அதன் கைகள் அசைந்தது. பின்னர் அதன் கைகள் அவன் கழுத்தை இறுக்க வந்தன. கைக்கடிகாரத்தின் "கீங் கீங்" ஒலியும் தன் கழுத்தை நெரிக்க வந்த அமானுஷ்யமும் அவனுக்கு கண் முன் நரகத்தை விரித்தன. "ஆ" என்ற கூச்சல் கேட்டது...

கைக் கடிகாரம் "கீங் கீங் கீங்" என ஒலித்துக் கொண்டிருந்தது. மூச்சுத் திணற திணற எழுந்து அமர்ந்தான் மாணிக்கம். சுற்றும் முற்றும் பார்த்தான். எதிரில் உள்ளச் சுவற்றில் சிவப்பு நிறக் குர்தா ஹாங்கரில் தொங்கியது. "கீங் கீங் கீங்" எனும் ஒலியை முதன்முறையாக அவன் கவனிக்கத் தரையை நோக்கினான். மெத்தையின் மேல் அவன் கைக் கடிகாரம் ஒலித்துக்கொண்டிருந்தது. எடுத்தான். மணி 6. அலாரம் அடித்துக் கொண்டிருந்தது.

மனிதனின் பயத்திற்குப் பலப் பரிமாணங்கள்.
அவற்றில் நல்லப் பரிமாணங்கள் "கடவுள்" ஆகின்றன.
தீயப் பரிமாணங்கள் "சாத்தான்" ஆகின்றன.
அப்படி ஒரு "சாத்தான்" பரிமாணம் தான் இந்தப் "பேய்".
அதீத பயத்தினால் பரிமாணங்கள் உருவம் கொள்கின்றன.
அடிக்கோடிடுகிறேன்.

உருவம் கொள்கின்றன, உயிர் கொள்வதில்லை!

அச்சம் தவிர்
!

எழுத்து & உருவாக்கம் 
அருண் பாரதி சுவாமிநாதன்.

 நன்றி : வைகைப்புயல் வடிவேலு

No comments:

Post a Comment

விட்டல் ராவின் "வண்ண முகங்கள்"

விட்டல் ராவின் "வண்ண முகங்கள்" நாடகத் தொழிலாளர்களின் வாழ்க்கையை பற்றிய நாவல். ஒரு நாடக கம்பெனியின் வீழ்ச்சியையும், அதை மீட்டெடுக்க...