சையது எனும் இளைஞனின் பார்வையில் இந்நாவலின் கதையாடல் அமைகிறது. ஒரு ஓவியத்தை வர்ணிக்கத் துவங்கும் சையது, அந்த வர்ணனையை முடிக்காமல் ஒரு கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறான். கதை அவனது பள்ளிப் பருவ நாட்களுக்கு நகர்கிறது.
1940-களில் பல சோவியத் கிராமங்களைப் போல, அந்தக் கிராமத்திலும் கூட்டுப் பண்ணை அமைப்பு நடைமுறையில் இருந்தது. இரண்டாம் உலகப் போரின் காரணமாக, பொருத்தமான வயதை எட்டிய ஆண்கள் ராணுவத்திற்கு அனுப்பப்பட்டனர். சிறுவர்கள், பெண்கள் மற்றும் முதியோர்கள் வயல் வேலைகளிலும், கிராமத்தின் பிற உழைப்புகளிலும் ஈடுபட வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இந்த சமூக நிலையைப் பின்னணியாகக் கொண்ட இந்தக் கதை, நிலவிய அரசியல் மற்றும் சமூகக் கட்டுப்பாடுகளை ஆங்காங்கே பேசினாலும், போரின் விளைவாக அக்கிராம மக்களின் வாழ்வில் ஏற்படும் பாதிப்பையும், தனிநபர் உறவுகளையும், பெண்களின் உள்மனப் போராட்டங்களையுமே பிரதானமாகக் கொண்டு பயணிக்கிறது.
ஜமீலாவின் கணவன் போர்முனைக்குச் சென்றுள்ளான். போர்முனையிலிருந்து காயமடைந்து திரும்பிய தானியாரை, ஜமீலா மற்றும் சையதுவுடன் இணைந்து ரயில் நிலையத்துக்குத் தானியம் ஏற்றிச் செல்லும் பணிக்கு குழுத் தலைவன் நியமிக்கிறான்.
இந்த மூவரின் வாழ்வும் அதன் பின்னர் எவ்வாறு மாறுகிறது, அந்த மாற்றம் சமூகக் களங்கங்களையும் மரபுகளையும் எவ்வாறு கேள்விக்கு உட்படுத்துகிறது என்பதே “ஜமீலா”வின் மையக்கதை.
போரிலிருந்து திரும்பிய பின்னும் அதன் கோரத்திலிருந்து முழுமையாக மீளாத தானியார், ஆணாதிக்க சமூக மரபுகளுக்கும் வழக்கங்களுக்கும் கட்டுப்படுத்தப்படும் ஜமீலா, பள்ளிப் பருவத்திலேயே குடும்பத்தின் பொருளாதாரச் சுமையைச் சுமந்து, தன் சுயத்தை இழந்த நிலையில் தனது கனவுகளைத் துரத்த முற்படும் சையது என mental trauma மற்றும் self-discovery-ஐ இக்கதைமாந்தர்கள் மூலம் பேசுகிறது இந்நாவல். இவர்களின் வழியாக சமூக அமைப்பால் கட்டமைக்கப்படும் புனித பிம்பங்களையும் அது உடைத்தெறிகிறது.
சிங்கிஸ் ஐத்மாத்தவ் இயற்கையையும் நிலப்பரப்பையும் நாவல் நெடுகிலும் கதாபாத்திரங்களின் மனநிலையைப் பிரதிபலிக்கப் பயன்படுத்துகிறார். அந்த வர்ணனைகள் சோவியத் ஒன்றியத்தின் மத்திய ஆசிய நிலப்பரப்பை கண்முன் கொண்டு வருகின்றன.
ஜமீலா — சமூகக் களங்கங்களைத் தகர்க்கும் உணர்வுபூர்வமான காதல் கதை.




No comments:
Post a Comment