Sunday, 18 January 2026

கவிக்கோ அப்துல் ரகுமானின் "ஆலாபனை"

கவிக்கோ அப்துல் ரகுமானின் "ஆலாபனை" சாகித்திய அகாதமி விருது பெற்ற முதல் கவிதைத் தொகுப்பு. இந்நூலில் வரும் கவிதைகள் மனித இயல்பை பிரதிபலிப்பதோடு மனித வாழ்க்கையைப் பற்றிய தத்துவங்களையும் பேசுகிறது. இயற்கையை கொண்டாடுவதோடு நில்லாமல், மனிதன் பரிணாம வளர்ச்சியினால் இயற்கையை அலட்சியப்படுத்துவதையும் சுட்டிக் காட்டுகிறது இந்நூல். இயற்கையைக் கொண்டாடும் கவிதைகளில் துள்ளிய வர்ணனையும், அசரவைக்கும் கற்பனையும் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகின்றன. மனித மனங்களின் இருண்ட பக்கங்களையும், மனித எதிர்பார்ப்புகளின் முரணையும் அப்பட்டமாக பல கவிதைகளில் பதிவு செய்கிறது இந்நூல். 



உண்மையையும், தூய்மை எனும் போலியையும், இயற்கையையும், பேதமில்லா சமூகத்தையும், பாலின சமத்துவத்தையும், பகுத்தறிவையும் பேசும் பல கவிதைகள் இந்நூலில் பரவிக் கிடக்கின்றன. நம்மை நாமே self introspect (சுயபரிசோதனை) செய்யவும் இந்நூல் தூண்டுகிறது. 



என்னை கவர்ந்த சில கவிதை வரிகள்...

1. மனித புத்தி

அன்றொரு நாள் பார்த்தேன்

மரத்தடியில்
கூண்டுக்குள்ளிருந்து 
வெளியே நடந்து வந்த கிளி
ஒரு மனிதனுக்கு
'வருங்காலத்'தை
எடுத்துக் கொடுத்துவிட்டுக்
கூண்டுக்குள் சென்றது

கிளியா இது?
இல்லை

வான வெளியில்
ஊஞ்சலாடிய 
அந்த ஆனந்தம் எங்கே?
எல்லாம் பறிப்போய் விட்டன

வடிவம் மட்டும் இருக்கிறது 
உள்ளடக்கம் இல்லை

கிளி 
மனிதனால் 
மனிதனாக்கப்பட்டுவிட்டது

இப்போது 
அது கூலிக்கு 
வேலை செய்கிறது 
மனிதனைப் போல

மற்றொரு நாள் பார்த்தேன்

என் வீட்டு வாசலில் 
ஒரு "பூம்பூம்" மாட்டுக்காரன்

அவன் சொல்வதற்கெல்லாம்
அந்த மாடு தலையாட்டிக்கொண்டிருக்கிறது
மனிதனைப் போல

மாடு
மனிதனால் 
மனிதனாக்கப்பட்டுவிட்டது

இன்னொரு நாள் பார்த்தேன்

ஒரு கம்பீரமான யானை
தெருவில் தன் துதிக்கையை நீட்டிப்
பிச்சை வாங்கிக்கொண்டிருந்தது
மனிதனைப் போல

என் மனம் அழுதது

பறவைகளின் சுதந்திரத்தை
விளங்குகளின் கள்ளங் கபடமற்ற தன்மையை
மனிதன் கற்றுக்கொண்டிருக்கலாம்

இந்த உலகம் 
அழகாக இருந்திருக்கும்

ஆனால் அவனோ
பறவைகளுக்கும்
விலங்குகளுக்கும்
'மனித புத்தி’யைக்
கற்றுக்கொடுத்துவிட்டான்

விலங்கிலிருந்து
மனிதனானது
பரிணாம 'வளர்ச்சி' தானா?

2. ஒப்புதல் வாக்குமூலம் (பெண்களின் நிலை பற்றி ஓர் ஆணின் குற்ற உணர்ச்சி)
...
இலக்கணங்களை உனக்கு வற்புறுத்தினோம்
நாம் வழுவமைதிகளாக இருந்தோம்
...

3. விளக்குகள்

...
இருட்டு என்ற ராட்சஸ எதிரியை
அஞ்சாமல் எதிர்த்துப் போராடும் 
சின்னஞ்சிறு வீரர்களே!
உங்கள் போராட்ட குணத்தை
எங்களுக்கும் கற்றுக்கொடுங்கள்

எரியவும் எரிக்கவும் எங்களுக்குத் தெரியும்
ஆனால் உங்களைப் போல்
ஒளி கொடுக்க மட்டும் தெரியவில்லையே!

4. தவறான எண் (தொலைபேசியில் தவறான எண்ணில் சிக்கிய இறைவனிடம் கேள்விகள்)
...

இங்கே என்ன நடக்கிறது என்று பார்!

இதோ! உனக்கு வீடு கட்டுவதற்காகவே உன் வீட்டை இடிக்கும் மூடர்கள்!

இடிக்கப்படுவதில் நீ இடிக்கப்படுகிறாயா?கட்டப்படுவதில் நீ கட்டப்படுகிறாயா?

இந்த ராம் யார்? ரஹும் யார்?

பெயரில் என்ன இருக்கிறது என்றவன் பேதை பெயரால் அல்லவா இத்தனை பிரச்சனைகள்?

பெயர்களில் நீ இருக்கிறாயா?

...

தீமை அதிகரிக்கும் போதெல்லாம் அவதரிப்பேன் என்றாயே ?

இதை விடக் கொடிய காலம் ஏது?

எங்கே காணோம் உன் அவதாரம்?

இன்னும் எதற்காகப் பூக்களை உண்டாக்குகிறாய்?

இன்னும் எந்த நம்பிக்கையில் குழந்தைகளை அனுப்பிக் கொண்டிருக்கிறாய்?

ஆலய மணி ஓசையும் மசூதியின் அழைப்பொலியும்

காற்றில் கரைந்து சங்கமிக்கும் அர்த்தம் இவர்களுக்கு எப்போது விளங்கும்?

கடைசியாகக் கேட்கிறேன்

நீ ஹிந்துவா? முஸ்லிமா?

“ராங் நம்பர்” என்ற பதிலோடு இணைப்பு துண்டிக்கப்பட்டது.

5. பற்று வரவு (இறக்கப் போகிறவனிடம்...)

வாங்கலை மட்டும் செய்தாயே!
கொடுக்கலைச் செய்தாயா?

எந்தக் கையாலோ
சுடர் ஏற்றப்பட்டவனே!
ஒரு விளக்கையாவது 
நீ ஏற்றிவிட்டுப் போகவேண்டாமா?

மொத்தமாகச் செத்துப் போகிறாய்!
கொஞ்சம் சில்லறையாகவாவது
நீ இங்கே இருக்க வேண்டாமா?

மரணக் காற்றில்
ஒரு விளைக்கைப் போல்
அணைந்து போகாதே!
ஓர் ஊதுவத்தியைப் போல்
கொஞ்சம் நறுமணமாவது
விட்டு விட்டுப் போ!

உன் சாவில் சாம்பலை அல்ல
நெருப்பை விட்டுச் செல்!
மண்ணில் ஒரு காயத்தை அல்ல
ஒரு மருந்தை விட்டுச் செல்!

ஒரு தடயமும் இல்லாமல்
மறைவதற்கு வெட்கப் படு!

குற்றவாளிதான் அப்படிச் செய்வான்.

6. ஒரு மேகத்தைப் போல்
...
"மேகமே!
உன்னைப் போல்
கவலையில்லாத சஞ்சாரம்
எனக்கு வேண்டும்"

"கடிவாளங்களைத்
தூர எறி!
ஒரு திசை இலட்சியத்தைத்
துற!
எல்லாத் திசைகளும்
உனக்குக் கிடைக்கும்"
...


7. அந்த இடம் (காற்றிடம் கேட்க...)
...
நெடு நாட்களாகவே 
எனக்கு ஒரு சந்தேகம்

விளக்குகளில் இருந்து 
பறிக்கும் சுடர்களை

பூக்களிலிருந்து 
திருடும் நறுமணத்தை 

வீணையில் இருந்து 
கவர்ந்த இசையை

எங்கே கொண்டு போய் 
ஒளித்து வைக்கிறாய்?

ஒலியும்
ஒளியும்
மணமும்
சஙகமித்துப்
பேதமற்றிருக்கும்
அந்த இடத்திற்கு
என்னையும்
அழைத்துச் செல்!

No comments:

Post a Comment

கவிக்கோ அப்துல் ரகுமானின் "ஆலாபனை"

கவிக்கோ அப்துல் ரகுமானின் "ஆலாபனை" சாகித்திய அகாதமி விருது பெற்ற முதல் கவிதைத் தொகுப்பு. இந்நூலில் வரும் கவிதைகள் மனித இயல்பை பிரத...