ந.பிச்சமூர்த்தியின் "ஜம்பரும் வேஷ்டியும்" எனும் சிறுகதைத் தொகுப்பு எட்டு கதைகளை உள்ளடக்கியது. இந்த தொகுப்பில் வரும் கதைகள் மனிதர்களின் இயல்பையும், அவர்களின் செயல்களுக்குப் பின்னால் இருக்கும் உளவியல் ரீதியான மனநிலையையும் பேசுகின்றன. இங்கே என்னைக் கவர்ந்த நான்கு கதைகளைக் குறிப்பிடுகிறேன்.
"கலையும் பெண்ணும்" எனும் கதை பார்வையற்ற ஒரு பெண்ணை திருமணம் செய்யும் ஒரு ஓவியனைப் பற்றிய கதை. எளிமையான இக்கதையில் வரும் நிகழ்வுகள் ஒரு பெண்ணின் "consent” பற்றி மிக நுட்பமாக விவாதிக்கிறது. இக்கதையே இந்த தொகுப்பில் வரும் கதைகளில் ஆகச் சிறந்தது.
"நல்ல வீடு" எனும் கதை ஒரு கிளப்பாக இருந்த வீட்டில் குடியேரும் ஒரு போலீஸ்காரர் மனைவி அனுபவிக்கும் சச்சரவைப் பற்றிய கதை. இன்னும் "கிளப்" தான் அந்த வீட்டில் இயங்குகிறது என நினைத்து வரும் ஆண்களை எவ்வாறு அந்த பெண் எதிர்கொள்கிறாள் என்பதை நகைச்சுவையாக விவரிக்கிறது. வசதிக்கு பழக்கப்பட்ட பெண், அந்த வசதியை நாடிப் போவதால் வரும் விளைவுகள், சமூகத்தின் எதிர்பார்ப்புகளால் சந்திக்கும் தேவையற்ற சிக்கல்கள், அதன் விளைவாய் பல நேரங்களில் சமூகத்தோடு ஒத்துப்போகும் கட்டாயம் ஏற்படுதல் ஆகியவற்றை பேசுகிறது.
"ஜம்பரும் வேஷ்டியும்" இரு நண்பர்களைப் பற்றிய கதை. எதையும் எதிர்பாரா நட்பையும், நட்பின் புரிதலையும், எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் நண்பர்களின் வழக்கத்தையும் பேசுகிறது. கதையில் வரும் ஒரு பிரச்சினை கணவன்-மனைவியிடையே பேசப்படும் போது பெரிதாகவும், அதே சமயம் நண்பர்களிடையே பேசப்படும் போது சிறிதாகவும் தெரியும் முரணை வெளிப்படுத்துகிறது. ஆங்காங்கே வரும் stereotypes-களை தவிர்த்து ஆண்-ஆண், ஆண்-பெண், பெண்-பெண் உறவுகளையும், அவர்கள் ஒருவர் மீது ஒருவர் வைக்கும் அபிப்பிராயங்களையும் உள்ளது உள்ளபடி காட்டுகிறது.
"வித்யாசம்" எனும் கதை எழுதப்பட்ட காலத்தில் ஆண்களுக்குண்டான வரட்டு கவுரவத்தையும், சின்ன சின்ன விஷயங்களில் கூட இருக்கும் egoistic மனநிலையையும் பேசுகிறது. அதே விஷயங்களில் பெண்களுக்கு இருக்கும் contrasting open-minded attitude பற்றியும் நகைச்சுவையாய் நம்மிடையே கடத்துகிறது. அதே சமயம் பிறரிடம் பழக ஆண்களுக்கு இருக்கும் தடை உடையும் தருணத்தையும் அப்பட்டமாக உண்மைக்கு நெருக்கமாக காட்டுகிறது.
இத்தொகுப்பில் பகுத்தறிவு, நாட்டார் தெய்வ வழிபாடு, ஜோதிடம் போன்றவை பற்றியும் கதைகள் அமைகின்றன. எளிய மொழிநடையில் ஆழமான மெய்யியல் கோட்பாடுகளை கடத்துகிறது இந்நூல்.
No comments:
Post a Comment