Monday, 26 February 2024

ஆணவக் கொலைச் சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும் - ஆ. சிவசுப்பிரமணியன்


தமிழ் சமூகத்தில் மக்கள் வழிபடும் கொலையுண்டு தெய்வமாக்கப்பட்ட நாட்டார் தெய்வங்களின் தோற்றம், பின்புலக் கதை, வழிபாட்டு முறை ஆகியவற்றை ஆய்வின் அடிப்படையில் ஆவணப்படுத்தும் நூல் "ஆணவக் கொலைச் சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும்". 


சாதி மீறிய காதல் தொடர்பான கொலைகள் தினசரி நிகழும் அவல நிலையை காண்கிறோம். இவை சாதிய ஆணவக் கொலைகள் என வழங்கப்படுகின்றன. ஆணவக் கொலைகளுக்கு பின்னால் சாதியைத் தவிர குடும்ப பெருமிதமும் காரணமாய் அமைகிறது. அப்படி தென் தமிழகத்தில் நிகழ்த்தப்பட்ட சில கொலைகளையும், கொலையில் பலியானவர்களை தெய்வமாய் வழிபடும் மரபையும் விவரிக்கிறது இந்த ஆய்வு. 

சமூகத்தில் நிலவும் சாதிய கட்டமைப்பு, பொருளாதார ஏற்றத்தாழ்வு, பாலின பாகுபாடு ஆகியவை எவ்வாறு மனித உயிரை பறிக்கும் எல்லை வரை கொண்டு செல்கின்றன என்பதை இந்த கதைகளில் காண்கிறோம். குடும்ப மானம் என்பதை பெண்ணைச் சுற்றியே நிறுவி, கற்பு என்பதை பெண்ணோடு மட்டும் சம்பந்தப்படுத்தும் நிற்பந்த கற்பு முறையால் நிகழ்ந்த கொலைகள் ஏராளம். கணவனை பிரிந்து வாழும் மனைவி மகிழ்ச்சி தரும் பொழுதுபோக்கில் ஈடுபடக்கூடாது எனும் மரபை மீறியதாக கூறி ஒரு பெண் கொல்லப்பட்டதை மாடாத்தி அம்மன் கதை விவரிக்கிறது. 

கிராமிய அமைப்பு சாதிய அடிப்படையில் நிறுவும் விதிகளையும், அவற்றை காப்பதற்கு ஆதிக்க சாதியினர் எடுத்துக்கொள்ளும் பிரயத்தனமும் கொலைகளில் முடிகின்றன. ஒடுக்கப்பட்டச் சமூகத்தில் பிறந்த ஒருவன் தனது ஆற்றலால் இடைநிலை சாதியில் இருப்பவனை விட உயர்ந்துவிட்டான் என்பதற்காக நிகழ்ந்த கொலையும் இந்நூலில் இடம்பெறுகிறது. அதே சமயம் சாதிய படிநிலை ஒரே சாதிக்குள்ளும் ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் என்பதற்கு சான்றான கொலையும் இந்நூலில் இடம்பெறுகிறது.

ஆ. சிவசுப்பிரமணியன்

இந்த தெய்வங்களின் கதைகளை குறிப்பிடும் போது தடை அல்லது மரபு, தடை அல்லது மரபு மீறல், விளைவு, பழிவாங்கல், முடிவு ஆகியவை கொலையுண்டவர் தெய்வமாக மாறுவதற்கான கூறுகளாக சுட்டிக் காட்டுகிறார் சிவசுப்பிரமணியன். சாதிய வண்மமும், குடும்ப மானமும், பொருளாதார மேல்நிலையும், நேரடி சண்டைகளும் மூர்க்கமான வன்முறையை தூண்டும் காரணிகளாக அமைகின்றன. நாம் பேரூந்துகளில் பயணிக்கும் போது கிராமப்புரங்களிலும், ஊர் எல்லையிலும், தூரத்து காடுகளிலும் காணும் முறையான பராமரிப்பு இல்லாத சின்னச் சின்ன கோவில்களுக்கு பின்னாலும் இம்மாதிரியான வன்முறை சம்பவங்கள் இருக்கக்கூடும்.

No comments:

Post a Comment

விட்டல் ராவின் "வண்ண முகங்கள்"

விட்டல் ராவின் "வண்ண முகங்கள்" நாடகத் தொழிலாளர்களின் வாழ்க்கையை பற்றிய நாவல். ஒரு நாடக கம்பெனியின் வீழ்ச்சியையும், அதை மீட்டெடுக்க...