சிவசங்கரியின் "பாலங்கள்" வெவ்வேறு காலக்கட்டங்களில் வாழும் மூன்று பெண்களை முதன்மை கதாப்பாத்திரங்களாக கொண்டு பயணிக்கிறது. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பெண்களின் மனநிலையையும், அவர்களின் குடும்ப சூழலையும், பெண்கள் மீது சமூகம் விதிக்கும் கட்டுப்பாடுகளையும், உடை, உணவு, கல்வி, வேலைவாய்ப்பு, விருப்பம், திருமணம் போன்றவற்றில் அவர்களுக்கிருந்த சுதந்திரத்தின் எல்லையையும் இந்த மூன்று பெண்களின் வாயிலாக பதிவு செய்கிறது. நீண்ட கால மூடநம்பிக்கைகள், சம்பிரதாயங்கள், சாதிய வழக்கங்கள் நிறுவிச் செல்லும் பெண் அடிமைத்தனத்தை, அதன் தீவிரத்தை அந்தந்த காலக்கட்டத்தின் சமூக எதார்த்தத்தோடு விவரிக்கிறது இந்நாவல்.
பெண் அடிமைத்தனத்தையே வாழ்க்கை நெறியென நம்பி அறியாமையாலும், சமூக கண்ணோட்டத்தாலும், சாதிய வழக்கங்களாலும் அந்த வாழ்வை ஏற்றுக் கொள்பவளாய் சிவகாமு. பெண் அடிமைத்தனத்தின் சங்கிலியை உடைத்து, தனது விருப்பங்களை தெரிவிக்கும் வாய்ப்புகள் இருந்தும், குடும்பத்தின் வற்புறுத்தலால் கல்வி முதல் கொண்டு அனைத்தையும் விட்டு, வேறு வழியின்றி வந்த வாழ்வை ஏற்றுக்கொள்பவளாய் மைதிலி. பெண் அடிமைச் சங்கிலியை உடைத்து, கல்வியில் சிறந்து, விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப சுதந்திரமாய் முடிவுகள் எடுப்பவளாய் இருந்தும் ஆணாதிக்கத்தால் தனது சுதந்திரத்திற்கும் எல்லையுண்டு என்பதை உணர்ந்தவளாய் சாரு.
சாதியப் படிநிலையிலும் அடிமையாய் தான் பெண்கள் இடம்பெற்றனர். அதிலும் இந்நாவல் உயர் சாதி பெண்களை பற்றிய விவரனை. அப்படி இருக்கையில் சாதியப் படிநிலையின் அடிமட்டத்தில் உள்ள சாதியைச் சார்ந்த பெண்கள் சாதி ரீதியான அடிமைத்தனத்தோடு பெண் அடிமைத்தனத்தையும் அனுபவிக்கும் அவலம் தான்.
சிவகாமு, மைதிலி, சாரு ஆகிய மூவரின் கதைகளிலுமே மூன்று தலைமுறை பெண்கள் இடம்பெறுகின்றனர். தனக்கு முந்தைய தலைமுறைக்கும், அடுத்த தலைமுறைக்கும் உள்ள கலாச்சார மாறுதல்களையும், அதனால் ஏற்படும் சச்சரவுகளையும் சமாளித்து இருவரையும் ஒரே கூரையில் வாழ வழிவகுக்கும் பாலங்களாய் இம்மூன்று பெண்கள் அமைகின்றனர் என்பதை மிளிரும் மொழிநடையில் இந்நாவல் விவரிக்கிறது.