Saturday, 2 July 2022

திரு. அஜயன் பாலா எழுதிய "நாயகன் சே குவாரா"

திரு.அஜயன் பாலாவின் "நாயகன்" வரிசையில் சே குவாரா பற்றிய புத்தகம் இன்று படித்தேன். 

சே குவாராவின் வாழ்வில் நிகழ்ந்த முக்கிய தருணங்களை திரட்டி இந்நூல் ஒரு சிறிய வாழ்க்கைத் தொகுப்பாக அமைந்திருக்கிறது. சகல வசதிகளுடன் உயர் வகுப்பை சார்ந்த குடும்பத்தில் பிறந்தாலும், அவர் எவ்வாறு உழைக்கும் மக்களுக்கான புரட்சியாளராய் உருவெடுத்தார் என்று உளவியல் ரீதியாகவும், அவருடைய தனிப்பட்ட அனுபவங்களின் மூலமாகவும் விவரிக்கிறது இந்நூல்.

அவருடைய நண்பர்கள் சிறு வயதிலேயே உழைக்கும் வர்க்கத்தை சார்ந்தவர்களாக இருந்ததின் விளைவாக தொழிலாளர் நலனைப் பற்றிய சிந்தனையும் அவருடன் சேர்ந்தே வளர்ந்தது. ஒரு மனிதனை அவன் வாழ்கின்ற சூழல், அவன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள், அவன் மேற்கொள்ளும் பயணங்கள், அந்த பயணங்களில் அவன் சந்திக்கும் மனிதர்களின் நிலை ஆகியவை ஏற்படுத்தும் தாக்கத்திற்கு சே குவாராவின் வாழ்வு ஓர் உதாரணம். தன்னலமின்றி, தன் நாடு - பிற நாடு என்னும் பாகுபாடின்றி பிறர் நாட்டு சுதந்திரத்திற்குப் போராடிய புரட்சியாளனை மக்களிடம் இந்நூல் சேர்க்கும்.

சே குவாரா யார் என்று தெரியாமலே அவரது படம் போட்ட டீசர்ட்டை அணிந்தவர்களில் நானும் ஒருவன் - ஒரு சிவப்பு நிற டீசர்ட் அணிந்து அலைந்தவன் தான். அந்த டீசர்ட்டில் ஓவியமாகத் தோன்றிய சே அவர்கள் அதிகாரத்திற்கு எதிரான குரலின் அடையாளம் என்றும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தியத்தை எதிர்க்கும் குறியீடு என்றும் நான் அறிந்ததில்லை. அப்படிப்பட்ட சே குவாராவை இந்த நூல் எனக்கு அறிமுகம் செய்தது. 

அஜயன் பாலா அவர்களின் எழுத்தில் உள்ள எளிமையும், வரலாற்றுப் பக்கங்களை விவரிக்கும் போது கொண்டு வரும் சுவாரஸ்யமும் நாயகன் வரிசை மூலம் பல ஆளுமைகளை மக்களிடம் எளிதாய் சேர்க்கும்.



No comments:

Post a Comment

விட்டல் ராவின் "வண்ண முகங்கள்"

விட்டல் ராவின் "வண்ண முகங்கள்" நாடகத் தொழிலாளர்களின் வாழ்க்கையை பற்றிய நாவல். ஒரு நாடக கம்பெனியின் வீழ்ச்சியையும், அதை மீட்டெடுக்க...