Friday, 8 December 2023

வண்ணநிலவனின் "கடல்புரத்தில்"

வண்ணநிலவனின் "கடல்புரத்தில்" கடலோர கிராமங்களில் வாழும் மனிதர்களின் வாழ்வை மையமாக கொண்டு பயணிக்கிறது. இந்நாவலில் வரும் கதைமாந்தர்களின் வழி அம்மனிதர்களின் தனிமனித உறவுகளையும், அந்த உறவுகளினால் ஏற்படும் உளவியல் ரீதியான சிக்கலையும் விவரிக்கிறார் வண்ணநிலவன். உறவுகளில் வரும் சண்டைகளையும், குற்ற உணர்வுகளையும், துரோகங்களையும் மீறி நிலைத்திருக்கும் அன்பை பேசும் நாவல் இது.


வல்லத்தில் மீன் பிடிக்கும் மீனவர்களுக்கும், லாஞ்சியில் மீன் பிடிக்கும் மீனவர்களுக்கும் நடக்கும் தொழில் போட்டியின் தொடர்ச்சியாய் வரும் சச்சரவுகளையும், அதன் விளைவுகளின் எல்லைகளையும் பேசுகிறது இந்நாவல்.

தலைமுறை தலைமுறையாய் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் குரூஸ் மிக்கேலுக்கும், குலத்தொழிலை விட்டுவிட்டு வாத்தியாக அண்டை ஊருக்குச் சென்ற அவரது மகன் செபஸ்த்திக்கும் நடக்கும் உரையாடலில் துவங்குகிறது நாவல். வல்லத்தையும் குலத்தொழிலையும் உயிரென பாவிக்கும் தந்தைக்கும், வறுமையிலிருந்து விடுபட நினைக்கும் மகனுக்குமான தலைமுறை இடைவெளியை இதில் காட்சிப்படுத்துகிறார் வண்ணநிலவன். 

நாவலின் பிரதான கதாப்பாத்திரமாக வரும் பிலோமி தான் சந்திக்கும் எல்லோரிடமும் அன்பை காண்கிறாள் - அந்த உறவு தனக்கு எவ்வளவு துன்பம் தந்தாலும். சமூக பார்வையில் பிலோமியின் தாய் - வாத்தியார் உறவு சிக்கலான உறவாக இருந்தும், அதற்கு முரணான காமத்தை தாண்டிய ஆண்-பெண் உறவை பிலோமி-வாத்தியார் இடையே இந்நாவலில் காண முடிகிறது. நாவலில் ஆங்காங்கே வந்தாலும் பிலோமி - ரஞ்சி உறவு எதையும் எதிர்பாராத நட்புறவாய் மிளிர்கிறது. 

இந்நாவலில் வரும் மனிதர்களின் வாழ்வில் "கடல்" ஒரு அங்கமாய் இருக்கிறது. பல இடங்களில் தங்கள் துயரங்களை கடலிடமே புலம்புகின்றனர். நலிந்து வரும் வியாபாரத்தால் படும் நட்டங்களை கடலிடமே முறையிடுகின்றனர். அவர்களுக்கு பல நேரங்களில் கடவுளாகவும், கண்ணிர் துடைக்கும் கரமாகவும் கடலே இருக்கிறது. 

வண்ணநிலவனின் எழுத்தில் மற்றுமொரு உயிரோட்டமான நாவல்.

No comments:

Post a Comment

விட்டல் ராவின் "வண்ண முகங்கள்"

விட்டல் ராவின் "வண்ண முகங்கள்" நாடகத் தொழிலாளர்களின் வாழ்க்கையை பற்றிய நாவல். ஒரு நாடக கம்பெனியின் வீழ்ச்சியையும், அதை மீட்டெடுக்க...