பெருமாள் முருகனின் "பூக்குழி" சாதியை மீறி காதலித்து இரகசிய திருமணம் செய்த குமரேசன்-சரோஜா ஆகிய இருவரை பிரதான கதாப்பாத்திரங்களாக கொண்டு பயணிக்கிறது. நகரத்தில் வாழும் சரோஜாவும், பிழைப்புக்காக கிராமத்திலிருந்து நகரத்திற்கு வரும் குமரேசனும் காதல் வயப்படுகிறார்கள். சரோஜா தோல் ஷாப்பில் வேலைக்கு செல்லும் தனது அண்ணனையும், தந்தையையும் விட்டு குமரேசனுடன் செல்ல தீர்மானிக்கிறாள். ஒரு இரவில் வீட்டைவிட்டு இரகசியமாக வெளியேறி குமரேசனுடன் ஊரைவிட்டு புறப்படுகிறாள். "எதுவானாலும் நா சொன்னா அம்மா கேட்டுக்கும்..." என்ற குமரேசனின் வார்த்தையை நம்பி இருவரும் அவனது கிராமத்துக்கு வந்து இறங்குகின்றனர். இதுவரையில் வழக்கமான காதல் கதையாக விரியும் நாவல் கிராம மக்களும், உறவினர்களும் இவர்கள் காதலுக்குக் காட்டும் எதிர்வினையைக் கையிலெடுக்கும் போது சற்றே வேறுபடுகிறது.
குமரேசன் தனது அம்மாவிடம் எதிர்பார்த்ததற்கு முற்றிலும் மாறாக இருக்கிறது அவளது நடவடிக்கைகள். அழுகையும் புலம்பலுமாய் அவனையும் சரோஜாவையும் ஒதுக்குகிறாள். சரோஜாவை வசவுகளால் காயப்படுத்தாத நாளில்லை. உறவினர்களும் தங்கள் கவுரவத்தையே தூக்கிப்பிடித்துக் கொண்டு குமரேசனை விரட்டுகிறார்கள். கிராம மக்கள் சரோஜா என்ன இனமென அறியவே முற்படுகின்றனர். கீழ் சாதி பெண் என அறிந்தால் வரும் பிரச்சினைகளை நினைத்து குமரேசன்அந்த கேள்வியை சமாளித்து காலம் கடத்துகிறான். இவ்வாறான சூழ்நிலையில் சரோஜா அனுபவிக்கும் சித்திரவதையையும், தனிமையையும் பெருமாள் முருகனின் எழுத்து எளிய மொழிநடையில் அழுத்தமாக பேசுகிறது.
குமரேசனின் அம்மா குமரேசனின் காதலை ஏற்றுக்கொள்ளாததற்கு வலுவான காரணம் சொல்லப்படும் அதே நேரத்தில் சரோஜாவை தன் கிராமத்திற்கு அழைத்து வரும் குமரேசனின் எண்ணத்திற்கு வலுவான காரணம் ஏதும் இல்லை. காய் விற்கும் பாட்டிக்கும் சரோஜாவிற்கும் நடக்கும் உரையாடலில் கலப்பு திருமணங்களுக்கு அந்த கிராம மக்கள் காட்டும் எதிர்வினையின் எல்லை குறிப்பிடப்படுகிறது. அதன்படி பார்த்தால் கொடூரமான சம்பவங்கள் ஏற்கனவே அக்கிராமத்தில் நடந்திருக்கக்கூடும். ஆனாலும் குமரேசன் தன் காதல் ஏற்றுக்கொள்ளப்படும் என எதிர்பார்ப்பது அவன் அறியாமையா? தாயின் ஒப்புதலை பெற்று அவளுடன் வாழ நினைக்கும் சுயநலமா? இல்லை, சமாளித்து விடலாம் எனும் அர்த்தமற்ற துணிச்சலா?
நகரத்தைக் காட்டிலும் கிராமத்தில் சாதிய கட்டமைப்பின் தீவிரம் அதிகமாக இருப்பதையும், அதன் விளைவாய் கிராம மக்கள் எந்த எல்லை வரை செல்ல எத்தனிக்கிறார்கள் என்பதையும் உண்மைக்கு நெருக்கமாக பதிவு செய்கிறது இந்நாவல். கிராமிய அமைப்பும், கிராம மக்களும் ஏன் குமரேசனின் அம்மாவும் கூட எடுக்கும் முடிவுகள் சாதிய படிநிலையை இன்றும் நிறுவிச் செல்லும் சமூகத்தின் பிரதிபலிப்பாகவே இருக்கிறது. வெளிப்படையாக சாதிகள் குறிப்பிடபடாவிட்டாலும், நாவலில் வரும் குறியீடுகள் உணர்த்திவிடுகின்றன.
நாவலில் வரும் காதல் காட்சிகள் செயற்கை தன்மை துளியும் இல்லாது அமைகின்றன. நாவலுக்கு non-linear narrative கூடுதல் பலம். இறுதி காட்சி open ended ஆக, அதே சமயம் பூக்குழியைப் போல் அமைவது நிறைவான முடிவு.