வைகைப்புயல் வடிவேலுவின் எண்ணற்ற நகைச்சுவைக் காட்சிகளில் இருந்து சிறந்ததை தேர்ந்தெடுப்பது கடினமே. எதார்த்தமான உடல்மொழியாலும், வட்டார மொழி வழக்காலும், முக பாவனைகளாலும், ஏற்ற இறக்கத்துடன் கூடிய வசன உச்சரிப்பாலும் ஒரு சாதாரணக் காட்சியைக் கூட epic scene ஆக பல முறை மாற்றியிருக்கிறார்.
பல முறை பார்த்தாலும் அலுக்காத காட்சிகள் நிறைய இருக்கின்றன. அதைத் தாண்டி ஒரு நகைச்சுவைக் காட்சியோ அல்லது நகைச்சுவைக் காட்சியின் ஒரு பகுதியோ அல்லது நகைச்சுவைக் காட்சியின் கருத்தோ பெரும்பாலான மக்களால் கவனிக்கப்படாமல் போய் இருக்கலாம். சில சமயம் படத்தின் தோல்வியும் காரணமாய் இருந்திருக்கும். அவற்றில் சில இந்த write up-ல்...
1. பிறகு (சமரசம்)
வடிவேலு நடித்ததிலேயே மிகச்சிறந்த கதாபாத்திரமாய் நான் பார்ப்பது இந்த வெட்டியான் கதாபாத்திரம். கதாப்பாத்திரத்தின் பெயரோ சமரசம். இறந்தப்பின் மனிதர்கள் வர்க்க பேதமின்றி சமமாய் கிடக்கும் இடம் இடுகாடு. இந்த "equality"-ஐ குறிக்கவே சமரசம் என்று பெயரிடப்பட்டது இந்தக் கதாபாத்திரம். Masterstroke!அநியாய வட்டி வாங்கியத் தண்டல்காரன் பிணத்தைப் பார்த்து "இப்ப எதுடா உன் கூட வந்துச்சு?" எனக் கேட்பதும், "எங்கப்பன ஏன்டா பொணம்-னு சொன்ன?" என்று மல்லுக்கட்டும் ஆளிடம் "இங்க வர எல்லாரும் எனக்கு பொணம் தான்டா" என்று சொல்வதும், கண்ணதாசன் பாடல்களைப் பாடியும் இறப்பின் எதார்த்தத்தை எளிய மக்களின் மொழியில் திரையில் படரவிட்டிருப்பார்.
இடுகாட்டில் நடக்கும் ஒரு சச்சரவின் இறுதியில் தன்னைத் துரத்தும் கும்பலைப் பார்த்து "இனிமே அவன் அவன் பொணத்த அவன் அவனே பொதச்சுக்கோங்கடா, நான் ரெண்டு மாசம் லீவு" என நக்கலாக சொல்வது மரண அடி.
இறுதிக் காட்சியில் பிணக்குழித் தோண்டும் ஊழியரின் வலியும், அந்த வேலையில் உள்ள சிரமங்களையும் சொல்லியிருப்பார். அநாதை பிணத்தைப் பார்த்து "என் அப்பத்தாவ நான் பொதச்சுக்குரேன் டா" என உரிமையோடு சொல்வதில் ஒரு வெட்டியானின் மனநிலையையும், பல மரணங்களை - மரண ஓலங்களை தினமும் எதிர்கொள்ளும் மனத்திடத்தையும் அழுத்தமாகப் பதிவு செய்திருப்பார்.
2. ஆறு (சுமோ (எ) சுண்டி மோதிரம்)
"ஆறு" படம் என்றதும் "உனக்கு வந்தா ரத்தம், எனக்கு வந்தா தக்காளி சட்னியா?" காமெடி பலருக்கும் நினைவுக்கு வரும். அதை விட மற்றொருகாட்சி சிறப்பாய் அமைந்திருக்கும்.
டீக்கடை முன் நடக்கும் சச்சரவில் வடிவேலுவை குனிய வைத்து முதுகில் குத்திக்கொண்டு இருப்பார்கள். அதைக் கண்டுவிட்ட நண்பர்களிடம் வடிவேலு சமாளிக்க வேண்டும். வாங்கிய அடியை வைத்தியம் எனக் கூறி சமாளிப்பார். வட்டாரப் பேச்சு கேள்விப்பட்டிருப்போம். வட்டார "அடி"யை நமக்கு அறிமுகம் செய்வார் வடிவேலு. ஒவ்வொரு ஊர்க்காரர்கள் அடிக்கும் அடி எப்படி வைத்தியமாகிறது என விவரிப்பார். அதில் மதுரை அடி தான் ultimate. "இப்ப உனக்கு வவுத்த வலினு வெச்சுக்கோ, நேர மதுரல போய் இறங்கி எவன்டியாது வம்பிழு... படுக்கப் போட்டு வவுத்திலயே மிதிக்கிறாய்ங்க அம்புட்டும் பிதிங்கி வெளிய போய் face fresh ஆயிருது" - இந்த dialogue delivery, body language வடிவேலுவுக்கே உண்டான trademark. அடிச்சுக்க ஆளில்ல.
3. எம்டன் மகன் (கருப்பட்டி)
தனி காமெடி track இல்லாமல் கதையோடு இணைந்த நகைச்சுவைக் காட்சிகளில் இப்படம் சிறந்தது. முதல் பாதியில் வடிவேலுவின் காட்சிகள் ஆர்ப்பாட்டமான வசனங்கள் இல்லாது எதார்த்த நடுத்தர வாழ்வை பிரதிபலிக்கும். பலரும் கவனித்திராத வசனம் படத்தின் இரண்டாம் பாதியில் வரும்.
வடிவேலு - நாசர் இடையே ஆரம்பத்தில் இருந்து சின்னச்சின்ன உரசல்கள் காமெடியாக நடந்து வரும். நாசரை மீறி வடிவேலு அவரது மகனின் காதல் திருமணத்தை நடத்தி வைப்பார். வடிவேலுவை கடையில் இருந்து வெளியே துரத்துவார் நாசர். அப்போது தனது கணக்கை முடிக்கச் சொல்லி ஒரு தொகையைக் கேட்பார் வடிவேலு. நாசர் பணத்தை விட்டெரிந்து "நீ நாசமா தான்டா போவ" என சாபம் விடுவார். அதற்கு வடிவேலு "சாமியே கும்புடுறது இல்ல... சாபம்" என்பார் நக்கலாக. இந்த வசனம் voice over ஆக வடிவேலு திரையில் இல்லாத போது வரும். திரையில் இல்லாவிட்டால் என்ன, அந்த tone போதுமே.
நாசர் ஒரு கடவுள் மறுப்பாளராக , ஒரு rationalist ஆக ஆரம்பத்திலிருந்து சித்தரிக்கப்பட்டிருப்பார். அப்படிப்பட்ட கதாப்பாத்திரம் எப்படி சாபம் விடும்?
நிதர்சனத்தில் கடவுள் மறுப்பாளர்கள் பலர் கோபத்திலும், அயராத துயரத்திலும் தம்மை அறியாமல் இவ்வாறு மூடநம்பிக்கைகளுக்குள் போவதுண்டு. இது அவர் வாழும் சமூகம் அவர்கள் மீது கொண்ட influence. பெரும்பான்மை சமூகம் கடவுள் நம்பிக்கையிலும், மூடநம்பிக்கையிலும், சாஸ்திர சம்பிரதாயத்திலும் மூழ்கிக் கிடக்கும்போது, சிறுபான்மையான rationalists சிலர் மூடநம்பிக்கை என்று அறியாமலோ, கோபத்தின் பேரிலோ அவற்றை உபயோகிக்க நேரிடும். பின்னர் திருத்திக் கொள்வர். நாசர் கதாப்பாத்திரத்தின் அப்படிப்பட்ட சறுக்கல் இது.
4. தவம் (கீரிப்புள்ள)
படத்தின் தோல்வியால் கவனிக்கப்படாத காமெடி காட்சிகள் பல வருடங்கள் கழித்து trend ஆனது. "ஆஹான்" என்ற ஒற்றை வார்த்தை சமூக வலைத்தளங்களில் memes-களாகக் குவிந்தது.
தன் apprentice கூட்டாளிகளுடன் சேர்ந்து திருடி போலீஸிடம் மாட்டிக் கொள்வது, beach குதிரையில் ஏறி தப்பிக்கப் பார்த்து மாட்டிக் கொள்வது போன்ற காட்சிகள் வடிவேலுவின் வெகுளி தனத்தை காட்டும். அதில் வரும் வசனங்களைக் கேட்டு சிரித்து சிரித்து கண்களில் நீர் வரும்.
இப்படத்தில் ஒரு காட்சியில் வடிவேலு beach-ல் இரண்டு பெண்களிடம் திருடி கதாநாயகன் அருண் விஜயிடம் பிடிபடுவார். அருண் விஜய் beach-ல் ரோந்து வரும் போலீஸை அழைக்க அவர் செவி கொடுக்க மாட்டார். உடனே வடிவேலு "நீங்க கூப்புடறது அவருக்குக் கேக்கல. கொஞ்ச இருங்க" என்றபடி "ஹலோ.. ஃபோர் நாட் டூ (402) பொண்ணுசாமி...." என்று போலீசை அழைப்பார். "பீச்ல அடிக்குறதுல பாதி அவருக்கு தான்" என்பார். போலீசை அழைக்கும் வசனமும் அதன் தொனியும் எதிர்பாராது வரும் காமெடி treat. பதவி அதிகாரத்தை கிண்டல் அடிக்கும் அந்த தொனி மாஸ்.
5. அன்பு (சுப்பையா)
மற்றுமொரு தோல்வி திரைப்படம். இதில் வரும் வடிவேலுவின் அரசியல் காமெடிகள் எல்லாம் popular. ஓட்டுப் போடும் பூத்தின் வெளியே நின்று வாக்காளர்களிடம் "யாருக்கு ஓட்டு போட்ட?" என விசாரிக்கும் காமெடி, கட்சி அலுவலகத்தில் நடக்கும் தொலைப்பேசி காமெடி நிறைய முறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும். இப்படத்தில் என்னைப் பொருத்தவரை இரண்டு underrated காமெடி காட்சிகள் உண்டு.
ஒன்று - STD பூத் வாசலில் நடக்கும் காட்சி. கதாநாயகன் அன்பு தன் முன்னாள் காதலியிடம் பேச வேண்டும் என வடிவேலுவைக் கூட்டி வந்திருப்பான். பூத்தினுள் செல்லும் முன்பே இன்னொரு நபர் உள்ளே செல்ல முற்படுவார். அவரைத் தடுத்து "சார்.. ஒரு நிமிஷம் சார்..." என்பார் வடிவேலு. உள்ளே சென்று call செய்ய இவ்வாறு மூன்று முறை அதே நபரை அதே போல் தடுத்து விட்டு செல்வார். மூன்றாவது முறை வடிவேலுவின் கண்ணத்தில் பலத்த அறை ஒன்று விழும் அந்த நபரிடமிருந்து. வடிவேலுவின் ஷாக் ரியாக்க்ஷனும், அந்த நபர் யார் என்ற எதிர்பாராத twist-ம் அந்த காமெடி காட்சியின் உச்சக்கட்டம்.
இரண்டு - டீக்கடையில் சிங்கமுத்துவுடன் நடக்கும் நகைச்சுவைக் காட்சி. சிங்கமுத்து டீக்கடை பெஞ்சில் அமர்ந்து பேப்பர் படிப்பார். ஒரு ஓ.சி. டீக்காக வடிவேலு அவருடன் போகிறப் போக்கில் பேசுவார். பேப்பரில் சதாம் உசேன் பற்றிய செய்தியை படித்துவிட்டு அருகிலுள்ள நபரிடம் "நம்ம ஊர்ல கட்டப்பஞ்சாயத்துக்காரன் மாரி உலகத்துக்கே கட்டப்பஞ்சாயத்துக்காரன் அமெரிக்காக்காரன். அவன் இப்போ ஈராக்குல அணு ஆயுதம் வெச்சுருக்கியானு கேக்குரான். கேட்டானா கூட்டீட்டுப் போய் காமிக்க வேண்டிதானே" என சிங்கமுத்து சொல்வார். உடனே வடிவேலு "ஆஹ்ன்... நீ காமிப்ப. சம்பந்தமே இல்லாதவன் வந்து உன் வீட்ல சாமான் செட்டு எவ்வளோ இருக்கு நக நட்டு எவ்வளோ இருக்குனு கேட்டா காமிச்சுருவியா நீயு? நீ ஊருக்கு வேணா பெரியாளா இருக்கலாம், அதுக்காக ரோட்ல போரவனல்லாம் கூப்புட்டு உன் கைல என்னருக்கு? உன் வீட்ல என்னருக்கு? உன் சாமான் செட்டு என்ன?-னு கேட்டா என்ன நியாயம்? சல்லித்தனமா பேசிக்கிட்டு..." என்பார். உலக அரசியலை ஒரே டயலாக்கில் அடித்து நொருக்கிய சம்பவம்.
YouTube-ல் இக்காட்சிகளைத் தேடிப் பார்க்க recommend செய்கிறேன்.