Saturday, 14 December 2024

கவிஞர் யுகபாரதியின் "பின்பாட்டு"

கவிஞர் யுகபாரதியின் "பின்பாட்டு" தமிழ் திரையிசை பாடல்கள் பற்றிய ஒரு கட்டுரை தொகுப்பு. திரையிசை பாடல்கள் காலப்போக்கில் அடைந்த மாறுதல்களையும், அந்த மாறுதல்களுக்கான காரணிகளையும் வரலாற்று தரவுகளுடன் எடுத்துக்காட்டுகிறார் கவிஞர். ஒரு பாடல் உருவாவதற்கு பின்னால் இருக்கும் உழைப்பையும், சிக்கல்களையும், வியாபார நோக்கில் நடக்கும் சமரசங்களையும், அதை தன்னிலையிலிருந்து எதிர்கொள்ளும் விதத்தையும் கவிஞர் தான் எழுதிய பாடல்களைச் சுட்டிக்காட்டி விவரிக்கிறார். 


பாடலாசிரியர்கள் பற்றியும், இசையமைப்பாளர்கள் பற்றியும், அவர்கள் உருவாக்கிய பாடல்கள் குறித்தும் பல சுவையான செய்திகள் இந்நூலில் கொட்டிக்கிடக்கின்றன. அந்தந்த காலக்கட்டத்தில் நிலவிய சமூக கட்டமைப்பு பாடல் வரிகளின் வழி தென்படும் எடுத்துக்காட்டுகள், தனிநபர் விருப்பு-வெறுப்புகள் வெளிப்படும் பாடல் வரிகள், சமகால அரசியல் சூழலின் நீட்சியாக அமைந்த பாடல்கள் என பல விவரங்களை இந்நூல் நமக்கு தருகிறது. ஆங்காங்கே விவரணைகள் சற்று நீளமாக இருப்பதும், ஒரே செய்தி மீண்டும் மீண்டும் விளக்கப்படுவதும் சிறிது சலிப்பை உண்டாக்குகிறது. 

திராவிட அரசியல் ஆளுமைகள் கலை இலக்கியங்களையும், திரையிசை பாடல்களையும், திரைப்படங்களையும் தங்கள் கொள்கை பரப்பும் கருவிகளாக பயன்படுத்தி வெற்றியும் கண்ட யுக்திகளை இந்நூல் விளக்குகிறது. நூல் நெடுக பாடகர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் பற்றிய யுகபாரதியின் பாராட்டுகளிளும் சரி விமர்சனங்களிளும் சரி நேர்மை மட்டுமே தென்படுகிறது. "ஆகாசத்த நான் பாக்குறேன்" பாடல் முதலில் "ஆகாசத்த நான் பாக்கல" என தான் எழுதியிருந்ததாகவும், இயக்குனர் ராஜூ முருகன் தான் வரிகளை சற்று மாற்றினார் என்று யுகபாரதி குறிப்பிடுகிறார். அதை குறிப்பிட்டுவிட்டு "உண்மையில், பாக்கல என்றால் கழிவிரக்கமே வருகிறது. பார்க்கிறேன் என்னும்போதுதான் காதல் வெளிப்படுகிறது." என ஏற்புடன் கூறுவதே கவிஞரின் நேர்மை.


இந்நூலில் என்னை கவர்ந்த வரிகள் ---

"மேல் நோக்கி வளர்வதுதான் வளர்ச்சியென்று நம்பிக்கொண்டிருக்கிறோம். உண்மையில், கலையும் இலக்கியமும் கீழ்நோக்கிப் பரவ வேண்டும். அதாவது, கீழே இருக்கும் மக்களை நோக்கி. கீழே இருக்கும் வேர்களால்தான் மரங்கள் வளர்கின்றன என்கிற அடிப்படையைப் புரிந்துகொண்டால் வளர்ச்சி குறித்த நம்முடைய சிந்தனைகளில் மாறுதல் ஏற்படலாம்." 

No comments:

Post a Comment

John Grisham’s “The Exchange”

John Grisham’s “The Exchange” touted to be a sequel to his previous blockbuster novel “The Firm” starts off as a legal thriller and later sh...