Wednesday, 10 July 2024

அறிஞர் அண்ணாவின் "நீதிதேவன் மயக்கம்"

அறிஞர் அண்ணாவின் நாடகங்களில் ஒன்றான "நீதிதேவன் மயக்கம்" இராமாயண காவியத்தில் "இராவணன் ஒரு இரக்கமற்ற அரக்கன்" என்ற கம்பரின் தீர்ப்பை சீராய்வு செய்ய கடவுள் நீதிதேவனுக்கு கட்டளையிடுவதாக ஆரம்பமாகிறது. இந்த கற்பனைக் களத்தில் பயணிக்கும் இந்த நாடகம் திராவிட இயக்கத்தின் கருத்தியலை மிக நுட்பமாக பேசுகிறது. 

நீதிதேவனின் அறமன்றத்தில் இராவணன் தன் தரப்பு வாதத்தை தானே எடுத்துரைக்கிறான். இராமாயணத்தின் கதை மாந்தர்கள் இரக்கமற்ற முறையில் நடந்துகொள்ளும் தருணங்களை விவரிக்கிறான். கம்பரின் தீர்ப்பில் இருக்கும் பாரபட்சத்தையும், இராமாயணம் உயர்த்திப்பிடிக்கும் பாகுபாட்டையும் உள்ளது உள்ளபடி சுட்டிக்காட்டுகிறான். பெரிய புராணத்தில் வரும் சிறுதொண்டர் கதையிலும், கோட்புலி நாயனார் கதையிலும் நடக்கும் கொடூரச் சம்பவங்களை விவரித்து கடவுள் மற்றும் ரிஷிகளின் இரக்கமற்ற செயல்களை எடுத்துக்காட்டி வாதிடுகிறான். மறுமுனையில் கம்பரிடம் இருந்து வரும் எதிர் வாதங்களுக்கும் தக்க பதிலளிக்கிறான். 

பூலோகத்திலும், மேலோகத்திலும் நடக்கும் இரக்கமற்ற செயல்களில் இரண்டு உலகங்களின் மனிதர்கள், ரிஷிகள், காப்பியக் கதைமாந்தர்கள், கடவுள்கள் ஆகியோரின் பங்கை எடுத்துக்காட்டும் இராவணின் வாதத்தைக் கேட்டு நீதிதேவன் மயங்கி விழுவதாக நாடகம் முடிவடைகிறது. இந்நாடகத்தில் வரும் வசனங்களும், காட்சிகளும் புராணக் கதைகளை நம் கண்முன் நிறுத்துகின்றன. ஆங்காங்கே வரும் சில வசனங்கள் திரும்பத் திரும்ப இடம்பெறுவதால் காடசியின் ஓட்டத்தில் தொய்வு ஏற்படுகிறது. 


அறிஞர் அண்ணாவின் அரசியலை பேசும் நாடகம் இது. இந்திய அரசியலில் இராமாயணம் மற்றும் ஆரியத்தின் தாக்கம் இன்றளவும் இருக்கும் பட்சத்தில், இராவணன் தனது பக்க நியாயத்தை வாதிடுவதாக காட்சி அமைத்தது அண்ணாவின் இயக்கம் ஆரியத்திற்கு நேரெதிராக முன்வைக்கும் கருத்தியலின் அடையாள அரசியல். இராவணனை நாயகனாக அடையாளப்படுத்தும் யுக்தி “anarchism” பேசும் பல அறிஞர்கள் கையாண்ட யுக்தி. அதன் வழி புராணங்களும், காப்பியங்களும் கட்டமைக்கும் தூய்மை எனும் பிம்பத்தை பல இடங்களில் உடைத்தெரிகிறது இந்நாடகம்.

No comments:

Post a Comment

John Grisham’s “The Exchange”

John Grisham’s “The Exchange” touted to be a sequel to his previous blockbuster novel “The Firm” starts off as a legal thriller and later sh...