சமுதாயத்தில் நிலவும் சாதியக் கண்ணோட்டத்தையும், இழி தொழில் என தொழில்களை வகைப்படுத்தும் பார்வையையும் ஒரு நகர சுத்தித் தொழிலாளியின் வாழ்க்கையின் மூலம் பிரதிபலிக்கிறது திரு. தகழி சிவசங்கரம் எழுதிய "தோட்டியின் மகன்".
"தோட்டி மவன் தோட்டியா தான் ஆவனுமா?" என்ற கேள்வி இந்த நாவல் முழுக்க ஒலிக்கிறது. அது பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் வர்ணாசிரம முறைக்கு எதிரான குரல். தனது அடுத்தத் தலைமுறையை தோட்டி தொழிலில் ஈடுபடுத்தாமல் படிக்க வைக்க முற்படும் சுடலைமுத்துவை பற்றிய கதை இது.
புரட்சிகர சிந்தனையாயினும், சுடலைமுத்துவை புரட்சிகர நாயகனாக சித்தரிக்கவில்லை - தன் மகனின் எதிர்காலத்தைப் பற்றிய அவனது கனவை நிறைவேற்றிக் கொள்ள சுயநலமாக சிந்திக்கும் ஒரு சாதாரண மனிதனாகவே முன்னிருத்துகிறது இந்நாவல். அவனது சுயநலத்தினால் அவன் மனைவி என்னென்ன கட்டுப்பாடுகளுக்கு ஆளாகிறாள் என குடும்பச் சூழலில் நடக்கும் ஆணாதிக்கத்தை காட்டும் பல காட்சிகள் அமைகின்றன. அதிகார மையமான முனிசிபல் சேர்மன், ஓவர்சீயரின் துணையோடு தோட்டிகளுக்கான சங்கம் அமைவதை தடுக்க சுடலைமுத்துவை ஒரு கருவியாக பயன்படுத்துகிறார். தான் சார்ந்த சமூகத்தின் முன்னேற்றத்தை விட தன் தனிமனித முன்னேற்றத்தை முக்கியமானதாகக் கொள்ளும் சுயநலவாதியான சுடலைமுத்து மற்ற தோட்டிகளுக்கும், நண்பனுக்கும் துரோகம் இழைக்கிறான். இது சமூகச் சூழலில் அதிகார வர்க்கம் அடித்தட்டு மக்களிடம் காட்டும் ஒடுக்குமுறையின் நிதர்சனமான பிரதிபலிப்பு.
தான் கழிவறை சுத்தம் செய்யும் வீடுகளில் வசிக்கும் உயர்சாதியினரின் பழக்கவழக்கங்களை பின்பற்ற ஆரம்பித்து பணம் சேமிக்கக் கற்றுக்கொள்கிறான் சுடலைமுத்து. அவன் வாழ்வின் பொருளாதர நிலை உயர்ந்தும், அவனின் சாதி அடையாளம் மட்டும் அவனையும் அவன் மகனையும் துரத்துகிறது. அதனால் அவன் தோட்டி தொழிலை ஒரு கட்டத்தில் விட்டுவிட்டு வேறு தொழிலுக்கு மாற எத்தனிக்கிறான். அவன் மயானக் காவலாளியாக மாறுகிறான். அதுவே அவனுக்கு கிடைக்கும் பதவி உயர்வு மற்றும் அவனது சமூக நிலையின் உயர்வு.
சாதிய படிநிலையின் அடுக்குகளும், அவற்றின் ஆழமும் கடக்க முடியாத மதில்களை ஒடுக்கப்பட்டோரின் முன் விரிக்கின்றன. சுடலைமுத்து போன்ற மனிதன் அவற்றை உடைக்க முற்படும் போது அவனுக்கு இருக்கும் மலைப்பை மீறி அந்த பாதையில் பயணிக்க வைப்பது அவனுக்கு இருக்கும் காரணம். முடிவில்லா அந்த பயணத்தையும், அதில் அவன் அனுபவிக்கும் வலிகளையும், சமூகச் சிக்கல்களையும் விவரிக்கிறது இந்நாவல்.
No comments:
Post a Comment