Friday 19 May 2023

தமிழ்ப்பிரபாவின் "பேட்டை"

தமிழ்ப்பிரபாவின் "பேட்டை" சென்னை சிந்தாத்திரிப்பேட்டை பகுதியை களமாக கொண்டு பயணிக்கிறது. சென்னையின் பூர்வகுடிகளான தலீத்துகளின் வாழ்க்கை முறை, மொழி, இசை, நட்பு, காதல், உணவு, ஆன்மீகம், மூடநம்பிக்கைகள், இறப்பு ஆகியவற்றை இந்நாவல் துல்லியமாக சித்தரிக்கிறது. 1980-களில் துவங்கி இன்று வரை சிந்தாத்திரிப்பேட்டை மற்றும் வட சென்னை பகுதிகளில் நடந்தேறிய மாற்றங்களையும், அவை அப்பகுதி மக்களின் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கங்களையும் இந்நாவல் புனைவின் வழி நுட்பமாக விவரிக்கிறது. 




கதையின் இரண்டு பிரதான கதாப்பாத்திரங்கள் வெவ்வேறு காலக்கட்டத்தில் வெவ்வேறு காரணங்களால் மன ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். ரெஜினா எனும் பெண் பாதிக்கப்படும் காலத்தில் மன ரீதியான பிரச்சினைகளுக்கு மத வழிபாட்டுத் தளங்களையே உறவினர்களும் அப்பகுதி மக்களும் நாடுகின்றனர். மருத்துவத்தை பற்றிய எண்ணமே வராத அளவுக்கு அது அவர்களுக்கு அணுகக்கூடியதாகவும் இல்லை, அறியாமையால் வரும் பயமும் இருந்திருக்கக்கூடும். ரெஜினாவின் மகன் ரூபன் அதே போல் பாதிக்கப்படும் போது, ரெஜினா மதத்தின் துணையை நாடுகிறாள். கடைசியில் ரூபனின் அலுவலக நண்பர்களின் வற்புறுத்தலால் அவனை மனநல காப்பகத்தில் அனுமதிக்கிறார்கள். இக்காலக்கட்டத்திலும், மருத்துவத்தின் தேவை பற்றிய விழிப்புணர்வு, அறிவியலின் துணையை நாடும் மனநிலை ஆகியவை இருந்தும் மதத்தின் துணையையே விளிம்புநிலை மக்கள் தேடுகின்றனர். அந்த அளவுகடந்த நம்பிக்கையை மதமும், மதபோதகர்களும் பயன்படுத்திக் கொள்கின்றனர் - அது எந்த மதமாக இருந்தாலும் சரி. குறிப்பாக கிருத்துவ மதச் சபைகளில் நடைபெறும் சாட்சி சொல்லும் முறை, ஏனைய மதங்களில் இருக்கும் பேய் ஓட்டும் முறை ஆகியவற்றின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது இந்நாவல். 

இந்நாவல் கவாப்பு போன்ற பீஃப் உணவு வகைகள், அவற்றின் சுவை, செய்முறை ஆகியவற்றை பதிவு செய்வதோடு நில்லாமல் அந்த உணவை சுற்றிய அரசியலையும் பல இடங்களில் பேசுகிறது. கறி என்றவுடன் ஐ.டி. கம்பெனியில் சக ஊழியர்கள் அடையும் உற்சாகம் மாட்டுக்கறி என்ற அறிந்தவுடன் மறைகிறதோடு நில்லாமல் அதைக் கொண்டுவந்த இளைஞனை தற்காலிகமாக ஒதுக்கும் நவீன தீண்டாமையாய் உருவெடுப்பதையும் காட்சிப்படுத்துகிறது இந்நாவல். கதையில் இடம்பெறும் கவாப்பு எனும் உணவின் செய்முறை நம்மை கவர்கிறது, சுவைக்க தூண்டுகிறது. 

இந்த பகுதி மக்களின் தொழில்கள், அவற்றில் காலப்போக்கில் நடந்த மாற்றங்கள், அவற்றின் நலிவுக்கான காரணிகள் ஆகியவை கதையில் இடம்பெறுகின்றன. சுவரோவியம் வரைந்து சம்பாதிக்கும் பூபாலன் அச்சு அசலாக அரசியல் தலைவர்களை வரையும் ஆற்றல் பெற்றதோடு கலைஞர் கருணாநிதியின் கவனத்தையும் பெற்றிருந்தவர். அவரது கதை உணர்வுபூரமாக சொல்லப்படுகிறது. டிஜிட்டல் பேனர்களின் வரவால் அவரது தொழில் முடங்கி ஏ.டி.எம் ஒன்றின் இரவு நேர வாட்ச்மேனாக அமர்கிறார். நலிந்த தொழில்களால் நட்டம் அடைந்த எத்தனையோ திறமைசாலிகளின் பிரதிபலிப்பு பூபாலன். 

கதையில் இடம்பெறும் பெண் கதாப்பாத்திரங்களும் வலுவானவை - குறிப்பாக கிராமத்திலிருந்து நகரத்திற்கு பிழைப்பு தேடி வந்து விடுதியில் தங்கியிருக்கும் இவாஞ்சலின் - அவளின் தனிமை, நகரத்து பெண்களால் விடுதியில் அவளுக்கு ஏற்படும் தொல்லைகள், அவற்றை சமாளிக்க கோபத்தை கவசமாக ஆக்கிக் கொள்ளும் தன்மை என நாவலில் சிறிய நேரம் வலம் வரும் சிறந்த கதாப்பாத்திரமாக மிளிர்கிறாள். 

நாவல் நெடுக இடம்பெறும் மெட்ராஸ் தமிழ் கதையை உயிர்ப்புடன் நகர்த்திச் செல்கிறது. மெட்ராஸ் தமிழில் நாவலின் பாத்திரங்கள் பேசும் வசனங்களில் அனாசயமாக இடம்பெரும் கெட்ட வார்த்தைகள் அம்மக்களின் வெளிப்படைத் தன்மையையே உணர்த்துகின்றன. 

கூவம் நதிக்கரையில் வசிக்கும் பூர்வகுடி மக்களை நகரத்தை விட்டு அரசு இயந்திரத்தின் துணை கொண்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றுதல், சாதிய படிநிலையின் தீவிரம் பள்ளர்-பறையர் பாகுபாடு வரை நிலைத்து நிற்கும் நிலை போன்ற சமகால அரசியலையும், சமூகச் சூழலையும் வெளிப்படுத்தும் இடங்களும் நாவலில் அமைகின்றன.

கிளைக் கதைகள் பல இருந்தும் அவற்றுள் சிக்கிக் கொள்ளாது பயணிக்கிறது. ஆங்காங்கே சிறுசிறு தொய்வுகள் இருந்தாலும் நிறைவான வாசிப்பாக அமைகிறது. 

No comments:

Post a Comment

“The Metamorphosis” by Franz Kafka

“The Metamorphosis” by Franz Kafka is a novella about a salesman Gregor who one morning wakes up and finds himself transformed into a venomo...