திரு. அஜயன் பாலா எழுதிய "நாயகன் பெரியார்" நூலை Amazon Kindle-ல் இன்று படித்தேன்.
பெரியாரின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகளைத் திரட்டி ஒரு சிறு வாழ்க்கை வரலாறாக இந்நூலைத் தொகுத்திருக்கிறார். பெரியாரின் பொது வாழ்க்கையோடு நில்லாமல் அவரது சொந்த வாழ்க்கையையும், அதில் அவர் சந்தித்த இழப்புகளையும், உளவியல் ரீதியான அழுத்தங்களையும், அதிலிருந்து எவ்வாறு மீண்டு வந்தார் என்பதையும் விளக்குகிறது இந்நூல்.
பெரியார் அவர்கள் காந்தியக் கொள்கைகள் மீது கொண்ட ஈர்ப்பால் காங்கிரஸில் இணைந்தாலும், பின்னாளில் நாட்டு விடுதலையை விட சமூக விடுதலையே பிரதானமென காங்கிரஸில் இருந்து விலகி சுயமரியாதை இயக்கம் துவங்கியதின் காரணத்தையும் விரிவாக எடுத்துரைக்கிறார் எழுத்தாளர். அதில் பெரியாரின் கொள்கைப் பிடிப்பு தெளிவாய் தெரிந்தது.
பெரியார் முன்னெடுத்த போராட்டங்களில் அவரது மனைவி நாகம்மையார், சகோதரி கண்ணம்மா ஆகியோரின் பங்களிப்பே பெரியார் பெண் சுதந்திரத்தை கொள்கைப் பரப்புரைகளோடு நிறுத்தாமல், அதை சொந்த வாழ்விலும் கடைப்பிடிப்பவர் என்பதற்கு சான்று. இவ்விரு பெண்களின் போராட்ட குணமும் இந்நூலில் இடம்பெறுகிறது.
தேர்தல் அரசியலில் இருந்து விலகி, சாதிய ஒழிப்பு, பெண் விடுதலை, பகுத்தறிவு கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்த்து இச்சமூகத்தை சுயமரியாதை மிக்கச் சமூகமாய் மாற்றிய தலைவனுக்கு இந்நூல் ஒரு "tribute".
No comments:
Post a Comment